Monday, September 17, 2007

விடியல்

தலைமுறைகளைத் தாண்டியும்
வேர்களைத் தேடி
அலைகிறது மனம்

ஆண்டுகள் பல கடந்த பின்னும்
கண்திரைகளுக்குப் பின்னால்
இன்னும் இடிபாடுகளின் மிச்சங்கள்

நீண்ட இரவுகளில்
தூக்கம் கலைக்கிறது
நினைவுகளாய் எழும்
குண்டுகளின் சத்தம்

தொலைந்து போன உறவுகளின்
முகவரிகளைத் தேடி
தொடர்கிறது பயணம்

என்றாவது ஒருநாள்
சொந்த பூமியில்
என்னுடைய விடியல்
துவங்குமென்ற நம்பிக்கையில்
தொடர்கிறது பயணம்...

Tuesday, September 11, 2007

இணைய‌த‌ள‌ம்

பரபரப்பான வாழ்க்கையின்
நடுவே மறந்து போன‌
உன் முகத்தை
மீண்டும் ஞாப‌க‌ப்ப‌டுத்திய‌து
அரிதாய் வ‌ந்த
உன்னுடைய‌ மின்னஞ்ச‌ல்


தொலைந்து போன‌
ப‌ழைய‌ முக‌ங்க‌ளை
அரிதாய் க‌ண்டெடுக்கிறோம்
எப்போதாவ‌து ந‌ட‌க்கும்
சாட் அர‌ட்டைக‌ளிலும்
மின்ன‌ஞ்ச‌ல் உரையாட‌ல்க‌ளிலும்


அம்மா‌வின் க‌ண்ணீரையும்
த‌ங்கையின் குழ‌ந்தையையும்
ம‌னைவியின் காத‌லையும்
அப்பாவின் சிரிப்பையும்
த‌ம்பியின் அர‌ட்டையையும்
மின்ன‌ஞ்ச‌ல்க‌ளில் ம‌ட்டுமே
ர‌சிக்க‌ முடிகிற‌து
பிழைப்புக்காக‌ வ‌ந்த‌ தூர‌தேச‌த்தில்....

Saturday, September 01, 2007

அன்புத்தோழி 5

நெரிசலான கடைத்தெருவில்
யாருடைய கண்ணிலாவது
பட்டுவிடுவோமோ என்று
பயந்து கொண்டே
ஐந்தங்குல இடைவெளியில்
நடந்து செல்வார்கள் காதலர்கள்
நெருக்கமாக கைகளைக் கோர்த்தபடி
நடந்து செல்வார்கள் நண்பர்கள்...

-------


ஒவ்வொரு முறை

நாம் சந்திக்கும் போதும்
பேசிக்கொள்ள எவ்வளவு விஷயங்களைப்
பொத்திப் பொத்தி
சேகரித்து வைத்திருக்கிறோம் நாம்!

-------


நாம் பார்த்துப் பேசி

ப‌ல‌ நாள் ஆனாலும்
உன்னைச் ச‌ந்திக்க‌
இன்னொரு ம‌ழைக்கால‌
மாலை வேளைக்காக‌
காத்திருக்கிறேன்....

பால்யகாலம்

கைகளுக்குள் சிக்காத
காற்றை என் சட்டைப்பையில்
பிடித்து வைத்து

வண்ணத்துப்பூச்சியின்
வண்ணங்களைக் கொண்டு
படங்கள் வரைந்து

குளத்துக்கரையில் தூண்டில்
போட்டு மீன் பிடித்து

மொட்டை வெயிலில்
சைக்கிள் டையரை வைத்து
ஊர் சுற்றி

கருவேலங்காட்டுக்குள்
ஓணான் பிடித்து

ஊரின் புழுதியெல்லாம்
நம் சட்டையில் இருக்க

இருட்டிய பிறகு
வீட்டிற்கு வந்து
அப்பாவிடம் அடி வாங்கி

கவலை மறந்து
உறங்கிய பொழுதுகள்

இன்றும் பசுமையாய்
நெஞ்சின் மூலையில்...

நண்பர்கள் தினம்

நண்பர்கள் தின‌
வாழ்த்து அனுப்ப
கைப்பேசியில்
வேகமாய்ச் சுழன்றது கை,
ம‌ணி ப‌ன்னிரெண்டைத் தொட்ட‌தும்
கைக‌ளில் த‌ய‌க்க‌ம்
ம‌ன‌தில் உறுத்த‌லாய்
குறுஞ்செய்திக் க‌ட்ட‌ண‌ம்
25 பைசா...