Wednesday, October 29, 2008

மழை

நீ இல்லாத
வெறுமையின் சூழலை
சூசகமாய் உணர்த்திச் சென்றது
அன்றைய மாலை நேரத்து
மழை...

**********

நாம் கைகோர்த்து
நடந்து சென்ற
மழைக்கால மாலைப் பொழுதை
நினைவு படுத்திச் செல்கிறது
இந்த மாலை நேரத்து
மழை...

**********

மாலை நேரம்
மழைச் சாரல்
சன்னலோரம்
தேநீர் கோப்பை
துணைக்கு.....
உன் நினைவுகள்

***********

என் மழைக்கால
மாலை நேரத்து
மிதிவண்டிப் பயணங்கள்
எல்லாம் முற்றுப் பெறுவது
உன் வீட்டு எதிரில் தான்


************

நீ இல்லாத
தனிமைத் துயரை
மேலும் அதிகரித்தது
இந்தப் பாழாய்ப் போன
மழை வந்து கொட்டிய
உன் வாசம்.....

Tuesday, October 21, 2008

மீண்டும் சந்திப்போம்....

மீண்டும் சந்திப்போம்....

நம் நட்பு
காத்துக்கொண்டிருக்கிறது
நமக்காக
உன்னுடைய இந்த
வார்த்தைகளை
நினைத்து...

Wednesday, October 15, 2008

ரஜினி?????

ரஜினிகாந்த் நேற்று விடுத்துள்ள ஒரு அறிக்கையில் “தனது பெயரில் கட்சி துவக்கினாலோ தனது படத்தை பயன்படுத்தினாலோ சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் “ என்று தெரிவித்துள்ளார். இதுதான் ஊடகத்தின் சமீபத்திய முக்கிய செய்தி, எந்த செய்தி தொ.காட்சியை திருப்பினாலும் இதுதான் செய்தி, எந்த ஒரு செய்தி இணையத்தை புரட்டினாலும் இதுதான் முக்கிய செய்தி

இந்த முக்கியத்துவத்துக்கு ரஜினி தகுதியானவர்தானா என்ற கேள்வியை நாம் ஒருமுறை நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும். அண்ணாமலை படத்திலிருந்து இந்தப் பிரச்சனை ஆரம்பித்தது என்று நினைக்கிறேன். ஒவ்வொரு படத்தின் வெளியீடின் போது இப்படி ரசிகர்களை உசுப்பும்படி ஏதாவது சொல்வது, பிறகு அதை அப்படியே மறந்துவிடுவது. மீண்டும் அடுத்த படத்தின் போது அறிக்கைகள். இதுதான் அவரின் வழக்கமே. தன்னுடைய படத்தின் வியாபார பயன்பாட்டிற்காகவே ரஜினிகாந்த் இதுபோன்ற அறிக்கைகளை விடுகிறார் என்று பல தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் அடிக்கடி வந்த வண்ணம் தான் உள்ளது. இதற்கு பதில் சொல்ல அவர் தயாராக இல்லை. ஆனால் தற்போது வெளிவந்திருக்கும் குசேலன் படத்தின் ஒரு காட்சியில், நீங்கள் திரைப்படத்தில் இப்படி அரசியல் சாயம் பூசப்பட்ட, அல்லது பூடகமாக சில வசனங்களைப் பேசுகிறீர்களே என்று கேட்கப்படும் கேள்விக்கு, படத்தின் வசனகர்த்தா எழுதிக் கொடுப்பதை நான் பேசுகிறேன், இதை என்னுடைய வார்த்தைகளாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று வரும். இதை ரஜினி சொல்வதாக ஏற்றுக்கொள்ளலாமா?


1996ல் நடந்த தேர்தலில் ரஜினி நடந்துகொண்ட விதம் அவர் பேசிய பேச்சு, ஜெயலலிதாவிற்கு பாதகமாக அமைந்தது. அவருக்கு அப்போதிருந்த செல்வாக்கு வேறு. ஆனால் 2002-03ம் ஆண்டுகளில் நடந்த காவிரிப்பிரச்சனையில் அவரின் நிலைப்பாடு, நெய்வேலியில் நடந்த போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருந்தது, சென்னையில் தனியாக உண்ணாவிரதம் இருந்தது, விமான நிலையத்தில் இருந்து அவர் கொடுத்த பேட்டி, அவரின் மீது பாசம் வைத்திருந்த பல ரசிகர்களை அவருக்கு எதிராக செயல்பட வைத்தது, அப்போது என் விடுதி தோழர்கள் பலர் தன்னுடைய அறையில் ஒட்டிவைத்திருந்த ரஜினி படத்தை கிழித்தெரிந்த நிகழ்ச்சிகளும் நடந்தன. தன்னுடைய சுயலாபத்திற்காக, வீண் வசனங்கள் பேசி, ரசிகர்களையும், மக்களையும் குழப்புவதே அவரின் வேலை.

ஒரு மனநோயாளியின் பேச்சுக்கு நாம் எந்த அளவிற்கு மதிப்பு கொடுப்போமா அந்த அளவிற்கு தான் நான் ரஜினி பேசும் பேச்சுக்கு மரியாதை கொடுப்பேன். இந்த முறை விடுத்துள்ள அறிக்கையில் கூட தெளிவாக எந்த முடிவும் எடுக்காமல். நான் வருவேன் ஆனா வரமாட்டேன் என்று குழப்பவாதியாகவே தன்னை அடையாளப்படுத்தியிருக்கிறார். தன்னுடைய திரைப்படங்களிலும், அவர் அவ்வப்போது கொடுக்கும் பேட்டிகளிலும் அவரின் இந்தக் குழப்பத்தை தெளிவாகக் காணலாம்.

அவரின் அரசியல் பார்வையும், நோக்கும் குறுகிய எண்ணம் கொண்டது, தன்னைப் பாதுகாத்துக்கொள்ள மட்டுமே அரசியலை அவர் பயன்படுத்துகிறார். விஜயகாந்த் கட்சிக்காரர்களால் வடிவேலுவின் வீடு தாக்கப்பட்ட போது எப்படி வடிவேலு தன்னுடைய சொந்த காரணங்களுக்காக அரசியலுக்கு வருவேன் என்றாரோ, அதைப் போன்றது தான் ரஜினியின் நிலைப்பாடும், முன்பு அதிமுக ஆட்சியில்(91-96) இவர் தமிழகத்தில் குண்டுவெடிப்பு கலாச்சாரம் பெருகிவிட்டது என்று பேச, இதனால் இவருக்கு பல தொல்லைகள் ஏற்பட, உடனே அந்தத் தேர்தலில் அதிமுகவிற்கு எதிராக குரல் கொடுத்தார், அடுத்து திமுக ஆட்சி முடிந்து அதிமுக ஆட்சி வந்ததும் தைரியலட்சுமி என்று பாராட்டி, ஜெயலலிதாவை அவர் வீடு வரை சென்று பாராட்டினார். சுயலாப அரசியலின் உச்சகட்டமாக இவரின் பாபா பட ரிலீசின் போது பாமகவினரால் ஏற்பட்ட தொல்லைகளுக்காக அப்போது நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர்கள் போட்டியிட்ட ஆறு தொகுதிகளில் மட்டும் அவர்களை எதிர்த்து தன்னுடைய ரசிகர்கள் வேலை பார்ப்பார்கள் என்று அறிவித்தார். கடைசியில் இவரின் மூக்கு உடைபட்டது தான் மிச்சம், அந்த ஆறு தொகுதிகளிலும் பாமக அமோக வெற்றி பெற்றது. தன்னுடைய அரசியல் செல்வாக்கை அத்தோடு அவர் உணர்ந்து அமைதி காத்திருக்கலாம். இதுதான் இவரின் செல்வக்கு என்று இவரது ரசிகர்கள் உணர்ந்து கொண்டிருக்க வேண்டும், அதை விட்டுவிட்டு தலைவா வா, தலைமையேற்க வா என்று சுவரொட்டி ஒட்டியே காலம் தள்ளுகின்றனர்.

தலைமைக்கு சரியான ஆள் அவரல்ல என்று அவர் உணர்ந்து கொண்டார் போலும் அதனால் தான் அமைதியாக இருக்கிறார். ரசிகர்கள் எப்போது உணர்ந்து கொள்ளப் போகின்றனரோ???

Monday, October 13, 2008

இன்றோடு இரண்டு வருடம் ஆகிறது...

விளையாட்டாக வலைப்பக்கம் ஆரம்பித்து இன்றோடு இரண்டு வருடங்கள் முடிந்து மூன்றாவது வருடம் ஆரம்பிக்கின்றது. ஒரு வலைப்பக்கத்தை இரண்டு வருடம் தொடர்வதே பெருய விஷயமாக கருதுகின்றேன். ஏனெனில் நான் கொஞ்சம் சோம்பேறி, என்ன செய்ய???? மற்ற வலைப்பதிவர்களைப் பார்க்கும் போது கொஞ்சம் பொறாமையாக இருக்கும். எப்படி இவர்களால் இவ்வளவு எழுத முடிகிறது என்று. என்னை பிரமிக்கச் செய்த சில வலைப்பதிவர்கள், பொன்ஸ், நந்தா, போன்றவர்கள். என்னுடைய கருத்துகள் பல அப்படியே நந்தாவின் கருத்துக்களோடு ஒத்துப்போகும். என்னை ஊக்கப்படுத்திய என்னுடைய நண்பர்கள், குறிப்பாக ஜெயக்குமார், நிலாரசிகன், விழியன், அண்ணன் N. சுரேஷ் போன்றோருக்கு என்னுடைய நன்றிகள். என்னுடைய எண்ணங்களை கட்டுரையாக எழுத பலமுறை நினைப்பதுண்டு, நேரத்தை சரியாக பயன்படுத்த தெரியாமல் பிறகு பார்க்கலாம், நாளை எழுதலாம் என்று நினைத்தே தள்ளிப்போட்டு பிறகு, நான் எழுத நினைத்த தலைப்போ அல்லது கருத்தோ பழையதாகி விடும்போது, என் எண்ணங்களும் அதோடு சேர்ந்து மடிந்து போகின்றன. இனிமேல் நிறைய பயனுள்ள விஷயங்கள் எழுதவேண்டும். இது தான் நான் எடுத்திருக்கும் இப்போதைய முடிவு. பார்க்கலாம் இதை எப்படி செயல்படுத்துகிறேன் என்று.

Wednesday, October 08, 2008

நீ - 4

நீ பூ கட்ட
போகிறேன் என்றாய்
நான் அடுக்கிக் கொடுக்கிறேன்
என்றமர்ந்தேன்
காதல் மாலை கட்டி
நமக்குச் சூடியது

பைக் பயணங்கள்

நீ இல்லாத

என் பைக் பயணங்களில்

வண்டியின்

பின் இருக்கையில்

அழகாய் வந்து

அமர்ந்து கொள்கிறது

நம் காதல்