Sunday, January 31, 2010

இது ஒரு காதல் கதை

அந்தப் பயணம் மிகச்சிறப்பாக அமைந்தது. நன்றாக சுற்றிப்பார்க்க முடியவில்லை, ஆனாலும் புதிய மனிதர்கள், புதிய இடம், உறைய வைக்கும் குளிர் என அற்புதமாக இருந்தது. பயணம் முழுக்க உன் நினைவு தான். அந்தக் குளிரில் நீ இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். என்னடா மனைவி இல்லாதா சோகமா என்று நண்பர்களின் கிண்டல் வேறு. திருமணமான இந்த 5 மாதத்தில் நீ இல்லாமல் நடக்கும் முதல் வெளியூர் பயணம் இது. அலுவலகம் சார்ந்த பயணம் என்பதால் தனியே தொடங்கிற்று அந்த ரயில் பயணம்



பயணம் தொடங்கிய நிமிடத்திலிருந்து சந்தித்த மனிதர்கள், சன்னலோரப் பயணம், வயல்வெளிகள், பள்ளத்தாக்குகள், முகம் மட்டும் கருப்பாய் இருக்கும் குரங்கு என உனக்குச் சொல்ல நிறைய விஷயங்கள் இருந்தன. அலைபேசியில் கவிதையாய் விரிந்தன சில விஷயங்கள், உனக்குச் சொல்ல விஷயங்களை கொஞ்சம் கொஞ்சமாய் சேகரித்து ஒரு ஓவியம் வரைந்து கொண்டிருந்தேன் மனதில்.



பயணம் முடிந்து அந்த ஒரு வாரம் முழுக்க பணியில் கழிந்தது காலைப் பொழுது, மாலைப் பொழுதுகள் நண்பர்கள் தண்ணி அடிக்க நான் வேடிக்கை பார்க்க, சைட் டிஷ் சாப்பிடுவதோடு முடிந்தது, இரவுகள் உன் நினைப்பில் சுமையாக கழிந்தன. நெட்வொர்க் பிரச்சனை கொடுத்த இம்சை உன்னிடம் சரியாக பேசக்கூட முடியவில்லை. குறுஞ்செய்தியில் பொங்கி வழிந்தது நம் காதல்.



வேலை முடிந்து மீண்டும் தொடங்கிற்று பயணம், உன்னைச் சந்திக்கப்போகும் சந்தோஷத்தில் மகிழ்ச்சியாய் ரயில் ஏறினேன். உனக்கு என் பயணத்தை எப்படி விளக்குவது என்று யோசித்து யோசித்து அற்புதமாய் உருவாக்கி வைத்திருந்தேன் கதைகளை. இன்னும் ஒரு நாள் பயணம் பாக்கி இருந்தது. கனவைக் கொஞ்சம் கலைத்தது குறுஞ்செய்தி. நீ தான் அனுப்பி இருந்தாய்,

“இன்னும் எவ்ளோ நேரம் ஆகும் வரதுக்கு”...



ஹா ஹா ஹா... சிரித்துக் கொண்டேன். “நேரம் இல்லை என் அன்பு பொண்டாட்டி, முழுதாக 1 நாள் 4 மணிநேரங்கள் இருக்கிறது” என்று பதில் அனுப்பினேன்.



ஹீம்ம்ம்... சலித்துக் கொண்டாய். உன் சலிப்பு எனக்கு நம் ஹனிமூன் நினைவுகளைத் தூண்டிவிட்டது. செல்லமாய்க் கோபித்து, சலிப்பாய் நீ சொல்லும் அந்த ஹிம்ம்ம் என்னை எப்போதும் இம்சிக்கும்.



’சீக்கிரம் வா புருஷா’ என்று அனுப்பி இருந்தாய். சிரித்துக் கொண்டேன், என்ன பதில் அனுப்புவது என்று தெரியவில்லை. நானும் நீ இல்லாமல் தவித்துக்கொண்டிருந்தேன்.



’வந்துக்கிட்டே இருக்கேன்’னு பதில் அனுப்பினேன்.



அப்புறம் காதல் பேசி, காமம் பேசி, கொஞ்சி, முத்தங்களோடு கழிந்தது பொழுது. எழுந்து தனியே செல்லும் போதெல்லாம் ”ஹே” என்று சத்தம் எழுப்பினர் நண்பர்கள். அவர்களுக்குத் தெரியும் உனக்கு முத்தம் கொடுக்கத்தான் தனியாகச் செல்கிறேன் என்று. சிரித்துக் கொண்டேன்.



உனக்கு குட்நைட் சொல்லிட்டு தூங்கப்போனேன். மறுபடியும் குறுஞ்செய்தி தொடர்ந்தது. எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை. விடிந்ததும் பார்த்தால் உன்னுடமிருந்து 3 குறுஞ்செய்திகள்.



‘தூங்கிட்டியா ஸ்டுப்பிட், உனக்கு என் மேல் காதலே இல்லை. ஐ ஹேட் யூ” என்று இருந்தது கடைசியாய் வந்திருந்த குறுஞ்செய்தி



சிரித்துக்கொண்டே ‘தாங்க்யூ அண்ட் ஐ லைவ் யூ ஸ்டுப்பிட், குட்மார்னிங்’ என்று அனுப்பினேன்.



ஊரை நெருங்கிக் கொண்டிருந்தேன். இன்னும் மூன்று மணி நேரங்கள் என்றார் அருகிலிருந்த நண்பர். உன்னை அலைப்பேசியில் அழைத்துச் சொன்னேன். ’மூன்று மணி நேரம் தான் இருக்கு’ என்று. நீ “மூன்று மணி நேரமா” என்று அலுத்துக் கொண்டாய்.



ஊர் வந்தது, ஓடோடி வந்து கால்டாக்ஸி அழைத்து மச்சி நான் கிளம்புறேன், போன்ல பேசுறேன் என்றேன்.



‘கிளம்பு கிளம்பு, நான் சொன்னதா தான் இருக்கும்’ என்றான் நண்பன், மறுபடியும் அவர்களிடமிருந்து ’ஹே’ என்று சத்தம்



நிமிடங்கள் என்னைக் கொல்லத்தொடங்கின. ’எப்போ வருவ”, எனத் தொடர்ச்சியாய் என்னை இம்சித்துக் கொண்டிருந்தன உன்னுடைய குறுஞ்செய்திகள். பாலம் தாண்டிட்டேன், இந்தக் கல்லூரி தாண்டிட்டேன் என்று உனக்கு வரிசையாய் லைவ் கமெண்டரி அனுப்பிக் கொண்டிருந்தேன்.



சீக்கிரம் வா, சீக்கிரம் வா என கொஞ்சலாய் கெஞ்சிக்கொண்டிருந்தாய் நீ...



வீட்டிற்குள் நுழைந்த்தும் ஓடி வந்து அணைக்க வந்தேன். உன்னிடம் சொல்ல சேமித்திருந்த கதைகள் எல்லாம் மறந்து போயின. ஓடி வந்தவனை ஒற்றை விரல் காட்டி நிறுத்தினாய்...



‘என்ன நல்லா ஊர் சுத்தினியா? பொண்டாட்டி இல்லாம நிம்மதியா இருந்திருப்பியே’ என்றாய்.

அடிங்க என்று இறுக்கி அணைத்து, முத்தங்களால் உன்னை நிரப்பி, படுக்கையில் தள்ளின போது, என் மார்பில் சாய்ந்து கொண்டு கேட்டாய்.



‘சீக்கிரம் வாடான்னு வர முடியாதா? எவ்ளோ நாள் தான் பொறுமையா இருக்குறது யார்க்கிட்டேயும் சொல்லாம’ என்றாய்



சீக்கிரம் வான்னா எப்படி வரது? பறந்தா வரமுடியும். அப்படி என்ன தலை போற விஷயம்? புரிந்த மாதிரியும் இருந்தது, புரியாத மாதிரியும் இருந்தது.



உனக்கு வேணாம்னா நான் சொல்ல்ல என்றாய்...



சொல்லுடி என்ன விஷயம் என்றேன்...



ஹிம்ம்ம் என்றாய்... அதே சலிப்பு...



’இப்படி சலிச்சுக்காத, அது ரொம்ப ரொமாண்ட்டிக்கா இருக்கு’



’ம்ம்ம் இருக்கும் இருக்கும்’ என்றாய்



மார்பில் சார்ந்து ரகசியம் சொன்னாய். சந்தோஷம் பொங்கியது... உன்னை தூக்கி சுற்றிவிட்டு கீழே இறக்கினேன்.



விடுடா ஸ்டுப்பிட் என்று திட்டினாய்.



ஒரு நிமிஷம் என்று ஓடிப்போய் அலைபேசி எடுத்து, நண்பனை அழைத்தேன். ’மச்சான், என் மனைவி கன்சீவ் ஆகி இருக்கா’ன்னு சொன்னேன்.



‘வாழ்த்துகள் மச்சான், அதான் சொன்னோம்ல’ என்றான்.



நம் காதல் நமக்கு அளித்த பொக்கிஷத்தைப் நினைத்து சந்தோஷம் பொங்க அள்ளி அணைத்து முத்தங்களால் நிரப்பினேன் உன்னை. தொடர்ந்தது நம் காதல் கதை.

Wednesday, January 20, 2010

பயணங்கள் - 4

நீண்டு
வளைந்து
நெளிந்து
தன் போக்கை
தானே தீர்மானிக்கும்
நதியின்
கரையிலே
ஒதுங்கிக் கிடக்கிறது
ஒருவனின்
சடலம்

Wednesday, January 13, 2010

பயணங்கள் - 3

பள்ளத்தாக்குகளின்
காடுகளைக் கடக்கும் போதெல்லாம்
மரங்களின் ஊடே பயணிக்கும்
ஆசை வந்து விடுகிறது
எனக்கு

கைகளைத் தேய்த்துக் கொண்டு
கன்னத்தில் வைத்து
சூடு பரப்பவும்

அண்ணாந்து பார்த்துக் கொண்டே
மரங்களைக் கிழித்து
கீழே இறங்கும்
வெளிச்சம் தரிசிக்கவும்

கைகளை விரித்து
தழுவிச் செல்லும்
காற்றை வரவேற்கவும்

பச்சை மரங்களின்
வாசனை
நுகரவும்

இன்னும் இன்னும்
நிறையவே
ஆசை

எல்லாம் அமுங்கிப் போய்
தொலைந்துவிடுகிறது
கான்கிரீட் காடுகளில்
சிக்கிக் கொள்ளும் போது....

புத்தகக் கண்காட்சியும் நானும்....

புத்தகக் கண்காட்சி. சென்னைவாசிகளுக்கு கிடைத்துக்கொண்டிருக்கும் ஒரு
மிகப்பெரிய வரப்பிரசாதம். திருச்சியில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த
காலத்தில் தான் எனக்கு புத்தக்க் கண்காட்சி என்ற விஷயமே அறிமுகம் ஆச்சு.
அப்போது புத்தகங்களை காசு கொடுத்து வாங்கிப் படிக்க முடியாது, நூலகப்
புத்தகங்கள் தான். என் கல்லூரி நூலகத்தில், இலக்கியம், அறிவியல் என
எல்லாத்துறைகளிலும் உள்ள புதுப் படைப்புகளை அவ்வப்போது சேர்த்துக் கொண்டே
இருப்பார்கள். அதனால் புத்தகங்கள் எனக்கு தடையில்லாமல் கிடைத்துக் கொண்டு
இருந்தது. வாரத்திற்கு எனக்கு இரண்டு புத்தகங்கள். அதை இரண்டே நாட்களில்
படித்து விடுவதால் என் நண்பர்களில் நூலக அட்டைகளைப் பயன்படுத்தி புத்தகங்கள்
எடுத்து வந்து படிப்பேன். எல்லாம் தமிழ் இலக்கியம் தான். கல்லூரி மூன்றாம்
ஆண்டு தான் அந்த பெரிய புத்தகக் கண்காட்சி திருச்சியில் நடந்த்து, என் விடுதிக்
காப்பாளர் அருட்திரு. ஜெயசீலன் அவர்கள் எங்களை கண்காட்சிக்கு செல்லச் சொல்லி
அறிவுறுத்தினார். அப்போது தான் நான் முதன் முதலாக அவ்வளவு பெரிய கண்காட்சியைப்
பார்த்தேன். எத்தனை கடைகள், எத்தனை புத்தகங்கள்!!!

படிப்பு முடித்து தஞ்சை வந்தபின் சில காலம் தஞ்சையில் தங்க வேண்டி இருந்த்து
அப்போதெல்லாம் தங்கவேல் செட்டியார் திருமண மண்டபத்தில் நடக்கும் அந்த புத்தக்
கண்காட்சிக்கு செல்வேன். திருமண மண்டபம் என்றதும் ரொம்ப பெருசா நினைச்சுட
வேண்டாம். ரொம்ப ரொம்ப சின்ன இடம், சின்ன கண்காட்சி, நமக்கு தேடல் அதிகமானதால்
அப்போது அந்தப் புத்தகங்களால் தீனி போட இயலவில்லை. மேலும் எது மாதிரியான
புத்தங்கள் படிப்பது, என்னென்ன புத்தகங்கள் படிப்பது போன்ற அறிவும் இல்லை.
புத்தகங்கள் என்னை விட்டு கொஞ்சம் தள்ளி இருந்த காலம் அது. அப்போது அறிமுகமானது
தான் ரத்னா புத்தக நிலையம். சிறுபத்திரிக்கை முதல் பல நல்ல புத்தங்களை எனக்கு
அறிமுகம் செய்த இடம். நல்ல புத்தகங்களை மட்டுமே கொண்டிருந்ததால் என்னவோ அந்தக்
கடை காலப்போக்கில் மூடப்பட்டுவிட்டது.

பிறகு சென்னைப் பயணம். வேலைத் தேடி. சென்ற ஒரு வாரத்தில் விளம்பரம்
பார்க்கிறேன் சென்னை புத்தக்க் கண்காட்சி என்று. இவ்வளவு நாளும், விகடனில்
சுஜாதாவின் வார்த்தைகளிலும், பொதிகை தொலைக்காட்சி செய்திகளிலுமே பார்த்த
கண்காட்சி இப்போது நேரில். ஹைய்யா கண்டிப்பாக பார்த்துவிடலாம் என்று நினைத்துக்
கொண்டிருந்தேன். அப்போது அது நடந்து கொண்டிருந்தது காயிதே மில்லத் கல்லூரியில்.
புதிதாக சேர்ந்த வேலை. இரவுப்பணி, வாரம் ஒருநாள் விடுப்பு போன்றவை அந்த வருட
புத்தகக் கண்காட்சியை பார்க்கவிடாமல் செய்து விட்டது. அடுத்த வருடம் கண்டிப்பாக
பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கிவிட்டிருந்த்து. எனக்கு கிடைத்த
அதிகமான மாதவருவாய், என்னை புத்தகங்களுக்கு மிக அருகில் கொண்டு சென்றிருந்த்து.
அப்போது நான் தேடிய முதல் புத்தகம் ”சே வாழ்வும் மரணமும்”. அந்தப் புத்தகத்தை
என் மாணவப்பருவத்து வழிகாட்டிகளில் ஒருவரான அருட்திரு ஹென்றியின் மேசை மேல்
பார்த்திருந்தேன் மூன்று வருடங்களுக்கு முன். அதைத் தேடித் தேடி அலைந்து
கொண்டிருந்தேன். எங்கே என்ன வாங்குவது என்று தெரியாது அப்போது. அந்தப்
புத்தகத்தை லேண்ட்மார்க்கில் தேடிக்கொண்டிருந்தேன். நல்ல தமிழ்ப்புத்தகம்,
கம்யூனிசம் சார்ந்தவை, தீவிர தமிழ் இலக்கியம் போன்ற விஷயங்களைத் தேடனும்னா
லேண்ட்மார்க் வாசலை எட்டிக் கூட பார்க்க்க் கூடாதுன்னு கத்துக்கிட்டேன்.
பாடலாசியர் பா.விஜய் கவிதைகளுக்கு(???) கொடுக்கும் முக்கியத்துவம் சுந்தர
ராமசாமி போன்றவர்களுக்கு இல்லை என்று எனக்கு புரிந்து போனது. ஹிக்கின்பாதம்ஸில்
விசாரித்த போது தான் அந்த சே குவேரா புத்தக பதிப்பகத்தின் முகவரி
கொடுத்தார்கள், கோடப்பாக்கத்தில் அந்த பதிப்பகம் தேடிச் சென்று அந்த புத்தக்ம்
வாங்கினேன். அந்த நாட்கள் என்னால் மறக்கவே முடியாத்து. என் வருவாயில்
பெரும்பகுதியை புத்தகங்களுக்கு செலவழித்த நாட்கள் அவை.

அப்போது வந்தது அடுத்த புத்தகக் கண்காட்சி, எனக்கு வரப்பிரசாதமாய். ஒரு வாய்
சோறுக்கு வீடு வீடாய் சென்று பிச்சை எடுக்கும் பிச்சைக்காரனுக்கு எல்லா வீட்டுல
இருந்தும் வந்து, ஒவ்வொரு வீடும் தனித்தனியா ஃப்ப்பே முறையில் உணவு கொடுத்தா
எப்படி இருக்கும் அது மாதிரி இருந்துச்சு. நல்ல புத்தகங்கள் தேடி கடைக் கடையா
அலைஞ்சுக்கிட்டு இருந்தப்போ, எல்லோரும் ஒன்னா சேர்ந்து கண்காட்சி நடத்தினா,
நான் திக்குமுக்காடி போயிட்டேன். அவ்ளோ பெரிய கண்காட்சியை என் வாழ்க்கையில
முதல் முறையா அப்போ தான் பார்த்தேன். அவ்ளோ பெரிய இடம் அவ்ளோ கடைகள். ஒவ்வொரு
கடைக்கும் போய் ஒவ்வொரு புத்தகங்களா நின்னு படிச்சு, பிடிச்சதை எடுத்து, ஒரு
நாள் முழுக்க அங்க புத்தகங்களோடு இருந்த நாள் மறக்கவே முடியாது, மறுநாளும்
வந்து மறுபடியும் ஒரு நாள் முழுக்க புத்தகங்களோடு இருக்கும் சுகமே தனி. என்
நண்பன் விழியன் சொல்வது போல் புத்தகங்கள் போதைப் பொருள். மயக்கம் கொடுக்கும்.

இந்த வருடமும் வந்த்து புத்தகத் திருவிழா வழக்கத்துக்கு மாறாக 15 நாட்கள்
முன்னதாகவே. நான் அப்போ காசியில் இருந்தேன். சென்னை வந்ததும் முதல் வேலையா
புத்தகக் கண்காட்சிக்கு தான் சென்றேன். வழக்கம் போல் நேர்த்தியான அமைப்பு, இந்த
முறை நான் ரொம்ப எதிர்பார்த்து போனது அன்னம் பதிப்பகத்துக்கு தஞ்சைப் பெரிய
கோயிலின் ஆயிரமாவது வருஷத்தைக் கொண்டாட ”தஞ்சாவூர்” என்று ஒரு புத்தகத்தை
வெளியிட்டு இருந்தனர். அப்புறம் நிலாரசிகனின் சிறுகதைத் தொகுப்பு. ஒவ்வொரு
வருஷமும் அற்புதமான நண்பர்களின் வழிகாட்டுதல் படி நல்ல இலக்கியங்கள்
பரிட்சயமாச்சு, ஆனா இந்த வருஷம் நான் போகும் நேரம் பார்த்து ஒருத்தர் கூட ஊரில்
இல்லை. எல்லோரும் புத்தாண்டை ஒட்டி ஊருக்குச் சென்றிருந்தனர். சரி தனியாவே
போகலாம்னு முடிவு பண்ணி நானே களத்தில் இறங்கினேன். ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி,
புத்தங்களை சுவாசித்து, வரும்போது நண்பனின் அழைப்பு வந்த்து, தானும் வருகிறேன்
என்றான். வாடான்னு சொல்லிட்டு தேடிக்கிட்டு இருந்தேன். இந்த வருஷம் உருப்படியா
ஒரு காரியம் செஞ்சேன், முதலில் ஒரு சுற்று புத்தங்களின் பெயர்களைக் குறித்துக்
கொண்டு, அப்படியே கடை எண், புத்த்க விலை என எல்லாவற்றையும் குறிச்சுக்கிட்டு
அப்புறம் அதை அலசி ஆராய்ஞ்சு இன்னொரு நாள் போய் புத்தகங்கள் வாங்கியது. பார்த்த
மாத்திரத்தில் வாங்கினால் ஒரு பிரச்சனை, எவ்வளவுக்கு வாங்குகிறோம் என்பதும்
தெரியவில்லை, மேலும் புத்தகங்களைச் சுமந்து கொண்டு செல்லும் போது சீக்கிரமே
சோர்வடைந்து விடுகிறேன், அதனால் முழுமையாக எல்லாக் கடைகளையும் பார்க்க
முடியவில்லை.

நம்ம புத்திக்கு உலக அரசியல், விடுதலை வரலாறுகள், கம்யூனிசம் சார்ந்த விஷயங்கள்
தான் ஞாபகத்துக்கு வந்துச்சு. கூட வந்தவன், இவரோட சிறுகதை நல்லா இருக்கும்,
அவரோட நாவல் நல்லா இருக்கும்னு சொல்லிக்கிட்டு இருந்தான். இப்பொ இருக்குற
சேர்மானமும் அப்படித்தான் சொல்லுது. அதான் என்ன வாங்குறதுன்னு குழம்பிப் போய்,
இதுல கொஞ்சம் அதுல கொஞ்சம்னு வாங்கிட்டு வந்தேன்.

என்னமோ சொல்ல வந்து என்னமோ எழுதிக்கிட்டு இருக்கேன்... இவ்ளோ பெருசா
எழுதிட்டேன், ஆனா எப்படி முடிக்கிறதுன்னு தெரியல. ம்ம்ம் இதனால் எல்லோரும்
சொல்வது என்னன்னா புத்தகக் கண்காட்சி மிகவும் பயனுள்ளது. எல்லோரும் நல்ல
புத்தகங்களைத் தேடிப் படியுங்கள்.

Saturday, January 09, 2010

பயணங்கள் - 2

வெட்டப்பட்ட

மரங்களின்

கதை சொல்லி

புலம்பிற்று

மண் அரிப்பின்

சுவடுகள்

Tuesday, December 29, 2009

பயணங்கள்

நகரும் மரங்களின்
கிளைகளின் மீதேறி
உயரே பறக்கிறது

வயலின் வயிற்றைக்
கிழித்து விரிந்திருக்கும்
ஒற்றை மரத்தில் நிலைகொண்டு
அமர்ந்திருக்கிறது

மலைகளின் பிளவுகளில்
இருளைக் கிழிக்கும்
வெளிச்சத்தில் ஊர்ந்து செல்கிறது

சராலென கீழிறங்கும்
பள்ளத்தாக்கின்
மயக்கும் வனப்பில்
லயிக்கிறது

என்னோடு மட்டும்
வரமறுக்கிறது
ரயில் பயணத்தில்
மனசு...

Wednesday, December 23, 2009

நிகழ்வுகளோடு

வாழ்க்கை எனக்கு எப்போதுமே பாடங்களை சொல்லிக் கொடுத்துக்கிட்டு தான் இருக்கு... நான் அதுல கத்துக்குறது தான் குறைவு. என்னோட வாழ்க்கை ஒன்னரை ஆண்டுகளுக்கு முன்ன வரைக்கும் நான் தீர்மானிச்சதா தான் இருந்துச்சு. படிப்பு, வேலை, குறிக்கோள், அப்புறம் அதை கைவிட்டது, குறிக்கோள் மாறியது எல்லாமே. ஆனா கடந்த ஒன்னரை ஆண்டுகளாக அதுவும் தொழில் ஆரம்பிச்ச பிறகு எல்லாமே என் கையை மீறிப் போகிற விஷயங்களாகத்தான் இருக்கு. அது என் தொழிலாகட்டும், பண விஷயமாகட்டும், உறவுகளோடு இருக்கும் நெருக்கமாகட்டும், தோழிகளில், நண்பர்கள் என எல்லாமே, எல்லோருமே கொஞ்சம் தள்ளிப் போயிட்ட மாதிரி ஒரு உணர்வு.

2007ம் ஆண்டு இதே கிறிஸ்துமஸ் எப்படிப் போச்சுன்னு பாக்கும் போது கொஞ்சம் சந்தோஷமாவும் இருக்கு வருத்தமாவும் இருக்கு. மாத வருமானம், கை நிறைய சம்பளம், எது தேவைப்பட்டாலும் யோசிக்காமல் வாங்கிய காலம் அது. எனக்கு, அம்மாவுக்கு, அம்மச்சிக்கு என பார்த்துப் பார்த்து போத்தீஸில் வாங்கினேன். போத்தீஸ் எனக்கு ரொம்ப பிடிச்ச கடை. அங்க வரும் கஸ்டமரை மதிக்கும் பாங்குக்காகவே நான் போத்தீஸ் போவேன். எனக்கும், வீட்டில் உள்ளவர்களுக்கும் ஆடை எடுக்கும் போது கடையில் கேட்பான் எந்த ரேஞ்சில் வேணும் சார்ன்னு. பணம் முக்கியம் இல்ல நல்ல டிசைனா காட்டுங்கன்னு சொல்வேன். பிடிச்சது என்ன விலையா இருந்தாலும் வாங்கிக் கொண்டிருந்தேன். இவ்ளோ பட்ஜெட்டுக்குள் முடிக்கனும்னு கணக்கு வச்சிக்கிட்டதே இல்ல. 2008 கிறிஸ்துமஸ் வீட்டிற்கு எடுத்துக்கொடுக்க முடியாட்டியும் எனக்கு ஆடைகள் எடுத்துக்க முடிஞ்சுது. அம்மாவுக்கு என்னால எடுத்துக் கொடுக்க முடியலைங்கிற வருத்தம் என்னை ரொம்ப ஆட்டிப் படைச்சுது. அடுத்த வருஷம் சிறப்பா செய்யனும்னு நினைச்சுக் கிட்டு இருந்தேன். ஆனா இந்த வருஷம் எனக்கு கூட எடுத்துக்க முடியல...

ஒவ்வொரு வருஷமும் கிறிஸ்துமஸ் என் குடும்பத்தினரோடு ரொம்ப சந்தோஷமா கொண்டாடி இருந்திருக்கேன். எந்த வருஷமும் தவற விட்டதே இல்ல. எந்த ஊர்ல எந்த மூலையில் இருந்தாலும் வீட்டிற்கு போயிடுவேன். அம்மா கூட, என் மாமாக்கள், அத்தைகள், தம்பிகள், அக்காக்கள் கூட கொண்டாடுவதில் அவ்ளோ சந்தோஷம். ஆனா இந்த முறை விலகி இருக்கேன். ரொம்ப தூரம் விலகி இருக்கேன்.


வாழ்க்கை ரொம்ப வேகமா போகுது. வருடங்கள் மிக வேகமா உருண்டோடுது. வாழ்க்கையில இன்னைக்கு மேல இருக்குறவன் நாளைக்கு கீழே இருப்பான், இன்னைக்கு கீழ இருக்குறவன் நாளைக்கு மேலே இருப்பான்னு படிச்சிருக்கேன். அதை இப்போ அனுபவிச்சு பாக்குறேன். எல்லாமே பாடம் தான். நான் இந்த காலகட்டத்தில் கத்துக்குற எல்லா விஷயங்களும் என்னைச் செதுக்க பயன்படும். ம்ம்ம்ம் பாக்கலாம் இன்னும் எவ்ளோ தூரம் காலம் என்னை சுழற்றியடிக்கும்னு...

Thursday, December 10, 2009

தோழி நினைவுகள் - 1

நேசக்கரங்கள் நீட்டினாய்

இருளின் பிடியிலிருந்து

விடுவித்துக்கொள்ள



ஆதரவுக் கரம்பற்றி

வெளிச்சத்தின் திசைகளை

எட்டிப்பிடித்தாய்


புள்ளியாய்த் தொடங்கிய

வெளிச்சம்

பேரண்டமாய் ஆட்கொண்டது



அங்குல அங்குலமாய்

திசைகளை அளந்தாய்

வெளிச்சத்தின் நீட்சியை

எங்கும் பரவச் செய்தாய்



அளவற்ற அன்பு

உள்ளங்களில் பரவச் செய்தாய்

கண்களிலே கருணை

பொங்கச் செய்தாய்



உன்னைச் சந்திக்கும்

தேதிகளில் எல்லாம்

என் நாட்குறிப்பில்

பூக்கள் பூக்கச் செய்தாய்



வண்ணங்கள் தீட்டப்பட்ட்

ஓவியமாய்

உன்னைச் சந்தித்தவர்கள்

வாழ்க்கை மாறியது



சட்டென்று ஒரு நாள்

தோள்சாய கிடைத்திருக்கிறான்

தோழன் ஒருவன்

ஒன்பதாம் திசையில் இருந்து

என்றாய்

எங்கள் கைகளை

உதறிவிட்டு தனித்துச் சென்றாய்



கணக்கில் வராத அந்தத் திசை

இருளின் அரசாங்கமென

எச்சரிக்க வாயெடுத்தேன்

காதுகளைப் பொத்திக் கொண்டாய்

இப்போது கவிதை எடுத்திருக்கிறேன்

கண்களை மூடிவிடாதே.