Friday, October 30, 2009

நான் - எனது நீட்சி

முட்கம்பிகளுக்குள்
வாழ்க்கையைத் தொலைத்து
தேசம் இழந்து
அகதியாய்
நிர்கதியாய்
நிர்வாணமாய் நிற்கிறது
சொந்தங்கள்
தினம் தினம்
செய்திகள்
இவ்வளவு
படித்த பிறகும்
உன் முத்தத்தின்
தித்திப்பு என்று
கூசாமல் அடுத்த
கவிதை பற்றி சிந்திக்கிறது
சுரணையற்ற மனது


******

நாண்டுக்கிட்டு செத்து போகலாம்டே
என்று மனசாட்சி சொல்கிறது
ஓட்டுனர் உரிமம் இல்லாமல்
மாட்டிக்கொண்டு
கூனிக் குறுகி
கையூட்டுக் கொடுத்த
நிமிடங்களை
நினைக்கும் போது

Wednesday, October 14, 2009

வலைப்பக்கத்தில் மூன்று ஆண்டுகள்

நேத்தோட இந்த வலைப்பக்கம் ஆரம்பிச்சு மூனு வருஷம் முடிஞ்சு போச்சு... சம்பிரதாயத்துக்கு ஒரு கவிதையோ இல்லை இது மாதிரி ஒரு அறிவிப்போ போடலாம்னு நினைச்சேன் ஆனா மறந்துட்டேன். நேத்து வேலைய முடிச்சிட்டு வீட்டுக்கு வண்டியில போகும் போது தான் ஞாபகம் வந்துச்சு. சரி நாளைக்கு போட்டுக்கலாம்னு நினைச்சு விட்டுட்டேன். இன்னிக்கும் மறந்துட்டேன். இப்போ தான் ஞாபகம் வந்துச்சு. வலைப்பக்கம் ஆரம்பிச்சு பெருசா ஏதும் சாதிக்கல. நானும் ஒன்னு வச்சிருக்கேன் பாருன்னு மத்தவுங்களுக்கு காட்டத்தான் வலைப்பக்கம் ஆரம்பிச்சேன். என் கல்லூரி கால கவிதைகளில் சிலவற்றை எடுத்து தூசி தட்டி அன்புத்தோழி என்ற பெயரில் கவிதை போட்டேன். கல்லூரி காலத்துல எழுதின பலவற்றை வலைப்பக்கம் ஆரம்பிக்கும் போது பாத்தா பல கவிதைகள் எனக்கு பிடிக்கல. கல்லூரி படிக்கும் போது நான் கவிதை எழுதுவேன்னு மமதையோட திரிஞ்ச காலம் அது. வைரமுத்துவின் சாயல் இருக்கும் கவிதைகளில். நெடிய கவிதைகள் அவை. சென்னை வந்து பெரிய பெரிய ஆட்களின் கவிதைகளைப் பார்த்த போது கொஞ்சம் ஆடித்தான் போனேன். என்னடா இது என்று. நாமெல்லாம் இன்னும் வளரனும் போல இருக்கேன்னு நினைச்சுக்கிட்டேன்.

கூகுள் குழுமங்களின் அறிமுகம் எனக்கு இன்னும் நிறைய சொல்லிக் கொடுத்த்து. வலைப்பதிவாளர்களைச் சந்தித்த போது எனக்கு நானே சொல்லிக் கொண்டேன் நீ இன்னும் கிழிக்க வேண்டியது நிறைய இருக்குடா என்று... சமீபத்தில் எழுதிய கவிதையை என் குழுமத்து அண்ணன் ஒருவர் பார்த்துவிட்டு சொன்னார். தேறிட்டடா என்று. கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது.

இப்போ நினைச்சுக்குறேன் டேய் மவனே இன்னும் ஒழுங்கா எழுது.. இந்த காதல் கத்திரிக்காய் எல்லாத்தையும் கொஞ்சம் ஒதுக்கி வச்சுட்டு சமூக அக்கறையோட எழுதுன்னு. கல்லூரி காலம் தான் அதிக சமூக அக்கறையுள்ள கவிதைகளைக் கொடுத்தன. அதன் பிறகு வழக்கமான வாழ்க்கையில் சுற்றுத்திரிந்து அதைப் பற்றி மறந்துவிட்டேன் என்று நினைக்கிறேன். சமீபத்தில் எழுதிய கவிதையில் எனக்கு மிகவும் திருப்தி அளித்த கவிதை ஈழம் சார்ந்த ”புதைந்து போன கனவுகள்” என்ற கவிதையும், ”கதறல்” கவிதையும் தான். கதறல் கவிதை என்னோட அனுபவம். ஈழம் சார்ந்த அந்தக் கவிதைகளை முடித்த போது ரொம்ப நாளா மனசில் இருந்த பாரத்தை இறக்கி வைத்த மாதிரி ஒரு அனுபவம்.

இந்த மூன்றாவது வருடம் எனக்கு நல்ல நண்பர்களையும், என் கவிதைகளையும் படித்து கருத்து சொல்லி நல்லா இருக்குன்னு உற்சாகப்படுத்தின நண்பர்களையும் பெற்றுத் தந்தது. எனக்கு இன்னும் ஊக்கம் கொடுத்து என்னை உற்சாகப்படுத்தும் நண்பர்கள் எனக்கு மிகப்பெரிய பலம்.

சரி... மீண்டும் அடுத்த வருஷம் நான் என்னத்தை கிழிச்சேன்னு மறுபடி கொஞ்சம் பார்க்கலாம். பை.....

உடைதல்

அந்த சின்னஞ்சிறு
பொம்மை உடைந்து
போனதற்கு
இவ்வளவு வருத்தப்படும்
நீ
கொஞ்சம்
என் மனதையும்
கணக்கில் எடுத்திருக்கலாம்....

Monday, October 12, 2009

நீ - 5

அடித்து
திருத்தி
கிழித்து
எறியப்பட்ட
வார்த்தைகள்
மீண்டும் சேர்க்கச் சொல்லி
கெஞ்சுகின்றன
உன்னைப் பற்றிய
கவிதையில்.


****


இந்த உலகத்திலேயே
நான் அதிகம் நேசிப்பது
உன்னைத் தான் என்கிறாய்
இதைப் பொய்யெனச்
சொல்லிவிட்டு போகிறது
பதிலளிக்காது போகும்
உனக்கான என்
அலைப்பேசி அழைப்புகள்

Thursday, October 08, 2009

நீளும் நாட்கள்

திரும்பிய பக்கமெல்லாம்
வெறுமையின் சுவடுகள்.
முகத்தில் அடிக்கிறது
இரத்தத்தின் வாடை
மேடுகளிலும் பள்ளங்களிலும்
அடித்து இழுத்துச் செல்லப்படுகிறது என் உடல்
இன்னும் வேகமாய் திரும்புகிறது
காலத்தின் பக்கம்.
சுமக்க முடியாத சுமைகள் வைத்து
அழுத்தப்படுகின்ற நெஞ்சின் மீது.
சுழற்றி அடிக்கும் காற்றின் வேகத்தில்
ஈடுகொடுக்க முடியாமல்
தூக்கி எறியப்படுகின்றேன் நான்.
மீட்சி கொடுக்கும்
தேவதையின் கரங்களுக்காக
காத்துக் கொண்டிருக்கிறேன்.
இரத்தம் வடியும்
காயப்பட்ட கரங்களே நீட்டப்படுகின்றன.
மரணத்தின் விளிம்பில் இருப்பதாய்
நினைத்துக் கொள்கிறேன் தினமும்.
இன்னும் வேகமாய்
சுழற்றி அடிக்கப்படுகிறேன் நீளும் நாட்களில்....

Thursday, October 01, 2009

அழியாத நினைவுகள்

எத்தனை முறை
அழிக்க முற்பட்டாலும்
மீண்டும் கண் முன்
வந்து நிற்கிறது
வண்டி ஏற்றி
காலை உடைத்த
நாய்க்குட்டியின்
கதறல்