Monday, April 20, 2009

வாழ்த்துகள்



உன் கைப்பிடித்து
நான் முறுக்குகையில்
என் மீசையைப்
பிடித்து இழுத்தாய்
வலி தாங்காமல்
உன் கை விட்ட என்னை
பார்த்து உதடு சுழித்து
பழித்துக் காட்டினாய்...

உறவினர் சிரிக்க,
இரு உன்னை
என்று விரட்டினேன்
ஒளிந்து சுற்றி
ஓடி கொல்லப்புரத்து
மாமரத்தில் ஒளிந்தாய்
சுற்றி வந்து மடக்கினேன்

என் கிடுக்கிப் பிடிக்குள்
வீழ்ந்த நீ
வெளியேற மறுத்து
நெருங்கினாய்...
இதழ்பதிக்க அணைத்தேன்

சட்டென ஒலித்தது கெட்டிமேளச்சத்தம்
நினைவுக்கு திரும்பினேன்
எங்கே இருக்கிறாய் என்று நீ
கண்ணால் கேட்டாய்
சிரிப்புடன் இங்கே தான் என்று
உனக்கு தாலி கட்டினேன்
நம் குடும்பம் வாழ்த்த.....

Friday, April 17, 2009

மழையும் நீயும் -1

இம்முறையும்
பதிலில்லை
நான் ஹாய் சொன்ன
சாட்டிற்கு



இப்போதெல்லாம்

உன் அருகாமை அதிகம்
தேவைப்படுகிறது எனக்கு

நாட்கள் மெல்ல
பின்னோக்கி நகர்கின்றன

நட்பைப் பரிமாறிக்கொண்ட
அந்த முதல் பார்வை

உன் அம்மா போட்டுக்
கொடுத்த அந்த
தேநீர்

உன்னைத் தேடித் தேடி
அலைந்த அந்த
ஐந்தாம் மாடி கூடுகள்

முதல் சண்டையின்
முடிவில் நாம்
கைகோர்த்து நடந்தது

எனக்காக நீயும்
உனக்காக நானும் காத்திருந்து
உணவருந்தியது

எல்லாம் நிழலாய் வந்துபோனது

உன்னைப் பார்க்காமலேயே
இருந்திருக்கலாம்
இத்தனை வலி இருந்திருக்காது

உனக்கான மடலை
எழுதிமுடித்திருந்தேன்
இம்முறையும் பதில்
எதிர்பார்க்கவில்லை

முடித்துவிட்டு
சன்னலோரம் வந்தமர்ந்தேன்
வெளியே ச்சோவென்று
மழை பெய்து கொண்டிருந்தது
என் கண்ணீருக்குத்
துணையாய்

மழையும் நீயும்

மழை எப்போதுமே
தன் சுவடுகளை
விட்டுச்செல்லும் பெய்தபின்பு
அந்தச் சுவடுகள் என் நட்பின்
பக்கங்களை நினைவுபடுத்துகின்றன
எப்போதும்...


*********


அந்த அடைமழையின் முடிவில்
மரங்கள் சேமித்து வைத்த
மழை நீர் மெதுவாய்ச் சொட்டியதைப்
பார்த்த போது
நாம் சேமித்து வைத்திருக்கும்
நம் நட்பின் நாட்கள்
நினைவாய் வந்து போனது எனக்கு...


நிலாச்சோறு



என் பால்யகாலம் பற்றி
உனக்குச் சொல்லிக் கொண்டிருந்தேன்
வீட்டில் பால்சோறு செய்து
எடுத்துக்கொண்டு
ஆற்றங்கரை சென்றமர்ந்து
அம்மாவின் கையாலே
நிலாச்சோறு சாப்பிட்டேன்
பொற்காலம் அதுவென்றேன்

இரு இதோ வரேன் என்றாய்
தட்டில் சோறோடு
வந்தென்னை அழைத்துச் சென்று
மொட்டைமாடி இரவில்
உன் நெஞ்சில் சாய்ந்து
நிலா பார்த்த எனக்கு
நிலாச்சோறு ஊட்டினாய்
இன்னொரு தாயானாய் எனக்கு