Wednesday, January 20, 2010

பயணங்கள் - 4

நீண்டு
வளைந்து
நெளிந்து
தன் போக்கை
தானே தீர்மானிக்கும்
நதியின்
கரையிலே
ஒதுங்கிக் கிடக்கிறது
ஒருவனின்
சடலம்

Wednesday, January 13, 2010

பயணங்கள் - 3

பள்ளத்தாக்குகளின்
காடுகளைக் கடக்கும் போதெல்லாம்
மரங்களின் ஊடே பயணிக்கும்
ஆசை வந்து விடுகிறது
எனக்கு

கைகளைத் தேய்த்துக் கொண்டு
கன்னத்தில் வைத்து
சூடு பரப்பவும்

அண்ணாந்து பார்த்துக் கொண்டே
மரங்களைக் கிழித்து
கீழே இறங்கும்
வெளிச்சம் தரிசிக்கவும்

கைகளை விரித்து
தழுவிச் செல்லும்
காற்றை வரவேற்கவும்

பச்சை மரங்களின்
வாசனை
நுகரவும்

இன்னும் இன்னும்
நிறையவே
ஆசை

எல்லாம் அமுங்கிப் போய்
தொலைந்துவிடுகிறது
கான்கிரீட் காடுகளில்
சிக்கிக் கொள்ளும் போது....

புத்தகக் கண்காட்சியும் நானும்....

புத்தகக் கண்காட்சி. சென்னைவாசிகளுக்கு கிடைத்துக்கொண்டிருக்கும் ஒரு
மிகப்பெரிய வரப்பிரசாதம். திருச்சியில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த
காலத்தில் தான் எனக்கு புத்தக்க் கண்காட்சி என்ற விஷயமே அறிமுகம் ஆச்சு.
அப்போது புத்தகங்களை காசு கொடுத்து வாங்கிப் படிக்க முடியாது, நூலகப்
புத்தகங்கள் தான். என் கல்லூரி நூலகத்தில், இலக்கியம், அறிவியல் என
எல்லாத்துறைகளிலும் உள்ள புதுப் படைப்புகளை அவ்வப்போது சேர்த்துக் கொண்டே
இருப்பார்கள். அதனால் புத்தகங்கள் எனக்கு தடையில்லாமல் கிடைத்துக் கொண்டு
இருந்தது. வாரத்திற்கு எனக்கு இரண்டு புத்தகங்கள். அதை இரண்டே நாட்களில்
படித்து விடுவதால் என் நண்பர்களில் நூலக அட்டைகளைப் பயன்படுத்தி புத்தகங்கள்
எடுத்து வந்து படிப்பேன். எல்லாம் தமிழ் இலக்கியம் தான். கல்லூரி மூன்றாம்
ஆண்டு தான் அந்த பெரிய புத்தகக் கண்காட்சி திருச்சியில் நடந்த்து, என் விடுதிக்
காப்பாளர் அருட்திரு. ஜெயசீலன் அவர்கள் எங்களை கண்காட்சிக்கு செல்லச் சொல்லி
அறிவுறுத்தினார். அப்போது தான் நான் முதன் முதலாக அவ்வளவு பெரிய கண்காட்சியைப்
பார்த்தேன். எத்தனை கடைகள், எத்தனை புத்தகங்கள்!!!

படிப்பு முடித்து தஞ்சை வந்தபின் சில காலம் தஞ்சையில் தங்க வேண்டி இருந்த்து
அப்போதெல்லாம் தங்கவேல் செட்டியார் திருமண மண்டபத்தில் நடக்கும் அந்த புத்தக்
கண்காட்சிக்கு செல்வேன். திருமண மண்டபம் என்றதும் ரொம்ப பெருசா நினைச்சுட
வேண்டாம். ரொம்ப ரொம்ப சின்ன இடம், சின்ன கண்காட்சி, நமக்கு தேடல் அதிகமானதால்
அப்போது அந்தப் புத்தகங்களால் தீனி போட இயலவில்லை. மேலும் எது மாதிரியான
புத்தங்கள் படிப்பது, என்னென்ன புத்தகங்கள் படிப்பது போன்ற அறிவும் இல்லை.
புத்தகங்கள் என்னை விட்டு கொஞ்சம் தள்ளி இருந்த காலம் அது. அப்போது அறிமுகமானது
தான் ரத்னா புத்தக நிலையம். சிறுபத்திரிக்கை முதல் பல நல்ல புத்தங்களை எனக்கு
அறிமுகம் செய்த இடம். நல்ல புத்தகங்களை மட்டுமே கொண்டிருந்ததால் என்னவோ அந்தக்
கடை காலப்போக்கில் மூடப்பட்டுவிட்டது.

பிறகு சென்னைப் பயணம். வேலைத் தேடி. சென்ற ஒரு வாரத்தில் விளம்பரம்
பார்க்கிறேன் சென்னை புத்தக்க் கண்காட்சி என்று. இவ்வளவு நாளும், விகடனில்
சுஜாதாவின் வார்த்தைகளிலும், பொதிகை தொலைக்காட்சி செய்திகளிலுமே பார்த்த
கண்காட்சி இப்போது நேரில். ஹைய்யா கண்டிப்பாக பார்த்துவிடலாம் என்று நினைத்துக்
கொண்டிருந்தேன். அப்போது அது நடந்து கொண்டிருந்தது காயிதே மில்லத் கல்லூரியில்.
புதிதாக சேர்ந்த வேலை. இரவுப்பணி, வாரம் ஒருநாள் விடுப்பு போன்றவை அந்த வருட
புத்தகக் கண்காட்சியை பார்க்கவிடாமல் செய்து விட்டது. அடுத்த வருடம் கண்டிப்பாக
பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கிவிட்டிருந்த்து. எனக்கு கிடைத்த
அதிகமான மாதவருவாய், என்னை புத்தகங்களுக்கு மிக அருகில் கொண்டு சென்றிருந்த்து.
அப்போது நான் தேடிய முதல் புத்தகம் ”சே வாழ்வும் மரணமும்”. அந்தப் புத்தகத்தை
என் மாணவப்பருவத்து வழிகாட்டிகளில் ஒருவரான அருட்திரு ஹென்றியின் மேசை மேல்
பார்த்திருந்தேன் மூன்று வருடங்களுக்கு முன். அதைத் தேடித் தேடி அலைந்து
கொண்டிருந்தேன். எங்கே என்ன வாங்குவது என்று தெரியாது அப்போது. அந்தப்
புத்தகத்தை லேண்ட்மார்க்கில் தேடிக்கொண்டிருந்தேன். நல்ல தமிழ்ப்புத்தகம்,
கம்யூனிசம் சார்ந்தவை, தீவிர தமிழ் இலக்கியம் போன்ற விஷயங்களைத் தேடனும்னா
லேண்ட்மார்க் வாசலை எட்டிக் கூட பார்க்க்க் கூடாதுன்னு கத்துக்கிட்டேன்.
பாடலாசியர் பா.விஜய் கவிதைகளுக்கு(???) கொடுக்கும் முக்கியத்துவம் சுந்தர
ராமசாமி போன்றவர்களுக்கு இல்லை என்று எனக்கு புரிந்து போனது. ஹிக்கின்பாதம்ஸில்
விசாரித்த போது தான் அந்த சே குவேரா புத்தக பதிப்பகத்தின் முகவரி
கொடுத்தார்கள், கோடப்பாக்கத்தில் அந்த பதிப்பகம் தேடிச் சென்று அந்த புத்தக்ம்
வாங்கினேன். அந்த நாட்கள் என்னால் மறக்கவே முடியாத்து. என் வருவாயில்
பெரும்பகுதியை புத்தகங்களுக்கு செலவழித்த நாட்கள் அவை.

அப்போது வந்தது அடுத்த புத்தகக் கண்காட்சி, எனக்கு வரப்பிரசாதமாய். ஒரு வாய்
சோறுக்கு வீடு வீடாய் சென்று பிச்சை எடுக்கும் பிச்சைக்காரனுக்கு எல்லா வீட்டுல
இருந்தும் வந்து, ஒவ்வொரு வீடும் தனித்தனியா ஃப்ப்பே முறையில் உணவு கொடுத்தா
எப்படி இருக்கும் அது மாதிரி இருந்துச்சு. நல்ல புத்தகங்கள் தேடி கடைக் கடையா
அலைஞ்சுக்கிட்டு இருந்தப்போ, எல்லோரும் ஒன்னா சேர்ந்து கண்காட்சி நடத்தினா,
நான் திக்குமுக்காடி போயிட்டேன். அவ்ளோ பெரிய கண்காட்சியை என் வாழ்க்கையில
முதல் முறையா அப்போ தான் பார்த்தேன். அவ்ளோ பெரிய இடம் அவ்ளோ கடைகள். ஒவ்வொரு
கடைக்கும் போய் ஒவ்வொரு புத்தகங்களா நின்னு படிச்சு, பிடிச்சதை எடுத்து, ஒரு
நாள் முழுக்க அங்க புத்தகங்களோடு இருந்த நாள் மறக்கவே முடியாது, மறுநாளும்
வந்து மறுபடியும் ஒரு நாள் முழுக்க புத்தகங்களோடு இருக்கும் சுகமே தனி. என்
நண்பன் விழியன் சொல்வது போல் புத்தகங்கள் போதைப் பொருள். மயக்கம் கொடுக்கும்.

இந்த வருடமும் வந்த்து புத்தகத் திருவிழா வழக்கத்துக்கு மாறாக 15 நாட்கள்
முன்னதாகவே. நான் அப்போ காசியில் இருந்தேன். சென்னை வந்ததும் முதல் வேலையா
புத்தகக் கண்காட்சிக்கு தான் சென்றேன். வழக்கம் போல் நேர்த்தியான அமைப்பு, இந்த
முறை நான் ரொம்ப எதிர்பார்த்து போனது அன்னம் பதிப்பகத்துக்கு தஞ்சைப் பெரிய
கோயிலின் ஆயிரமாவது வருஷத்தைக் கொண்டாட ”தஞ்சாவூர்” என்று ஒரு புத்தகத்தை
வெளியிட்டு இருந்தனர். அப்புறம் நிலாரசிகனின் சிறுகதைத் தொகுப்பு. ஒவ்வொரு
வருஷமும் அற்புதமான நண்பர்களின் வழிகாட்டுதல் படி நல்ல இலக்கியங்கள்
பரிட்சயமாச்சு, ஆனா இந்த வருஷம் நான் போகும் நேரம் பார்த்து ஒருத்தர் கூட ஊரில்
இல்லை. எல்லோரும் புத்தாண்டை ஒட்டி ஊருக்குச் சென்றிருந்தனர். சரி தனியாவே
போகலாம்னு முடிவு பண்ணி நானே களத்தில் இறங்கினேன். ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி,
புத்தங்களை சுவாசித்து, வரும்போது நண்பனின் அழைப்பு வந்த்து, தானும் வருகிறேன்
என்றான். வாடான்னு சொல்லிட்டு தேடிக்கிட்டு இருந்தேன். இந்த வருஷம் உருப்படியா
ஒரு காரியம் செஞ்சேன், முதலில் ஒரு சுற்று புத்தங்களின் பெயர்களைக் குறித்துக்
கொண்டு, அப்படியே கடை எண், புத்த்க விலை என எல்லாவற்றையும் குறிச்சுக்கிட்டு
அப்புறம் அதை அலசி ஆராய்ஞ்சு இன்னொரு நாள் போய் புத்தகங்கள் வாங்கியது. பார்த்த
மாத்திரத்தில் வாங்கினால் ஒரு பிரச்சனை, எவ்வளவுக்கு வாங்குகிறோம் என்பதும்
தெரியவில்லை, மேலும் புத்தகங்களைச் சுமந்து கொண்டு செல்லும் போது சீக்கிரமே
சோர்வடைந்து விடுகிறேன், அதனால் முழுமையாக எல்லாக் கடைகளையும் பார்க்க
முடியவில்லை.

நம்ம புத்திக்கு உலக அரசியல், விடுதலை வரலாறுகள், கம்யூனிசம் சார்ந்த விஷயங்கள்
தான் ஞாபகத்துக்கு வந்துச்சு. கூட வந்தவன், இவரோட சிறுகதை நல்லா இருக்கும்,
அவரோட நாவல் நல்லா இருக்கும்னு சொல்லிக்கிட்டு இருந்தான். இப்பொ இருக்குற
சேர்மானமும் அப்படித்தான் சொல்லுது. அதான் என்ன வாங்குறதுன்னு குழம்பிப் போய்,
இதுல கொஞ்சம் அதுல கொஞ்சம்னு வாங்கிட்டு வந்தேன்.

என்னமோ சொல்ல வந்து என்னமோ எழுதிக்கிட்டு இருக்கேன்... இவ்ளோ பெருசா
எழுதிட்டேன், ஆனா எப்படி முடிக்கிறதுன்னு தெரியல. ம்ம்ம் இதனால் எல்லோரும்
சொல்வது என்னன்னா புத்தகக் கண்காட்சி மிகவும் பயனுள்ளது. எல்லோரும் நல்ல
புத்தகங்களைத் தேடிப் படியுங்கள்.

Saturday, January 09, 2010

பயணங்கள் - 2

வெட்டப்பட்ட

மரங்களின்

கதை சொல்லி

புலம்பிற்று

மண் அரிப்பின்

சுவடுகள்