Tuesday, July 28, 2009

கவிதைகள்

கவிதைகள் என்று
தலைப்பிருந்தாலே
கொஞ்சம் தள்ளி
நின்று கொள்கிறேன் நான்


முதல் சந்திப்பு
என்னவள், காதல் தோல்வி
ஏய் இளைஞனே
என்ற வார்த்தைகள்
ஒவ்வாது போகின்றன.


சபித்துக் கொண்டே
அழிக்கிறேன்
நீண்ட கவிதைகள்
தாங்கிய மின்னஞ்ல்களை


என் கவிதையும்
இன்னொருவருக்கு
இப்படித்தான்
என்று நினைக்கையில்
எழுத எடுத்த பேனாவை
மூடி வைத்துவிட்டேன்

Wednesday, July 22, 2009

புதைந்து போன கனவுகள்

அவசரத்தில் விட்டு வந்த
மரப்பாச்சிக்கு அழும்
தங்கைக்குத் தெரியவில்லை
அதைத் திருப்பி எடுக்கப் போன
அண்ணன் பிணமாய்க் கிடப்பது


*******


தொலைந்து போனவர்களின்
பட்டியலைப் பார்த்துக் கொண்டிருந்தேன்
விடுபட்டவர்களின் பெயர்களைச்
சொல்லி அழுது கொண்டிருந்தனர்
பக்கத்தில் நின்றவர்கள்
நாளை என் பெயர்
பட்டியலில் இருக்குமா?
விடுபட்டு போயிருக்குமா?
தெரியவில்லை எனக்கு
பட்டியலில் இருந்தால் பார்ப்பதற்கும்
விடுபட்டால் அழுவதற்கும்
யார் இருக்கிறார்கள்?
நினைத்துக் கொண்டே உறங்கிப் போனேன்
தூக்கம் கலைத்தது
நெருங்கி வரும் பூட்ஸ் காலடி ஓசை....


*****


எங்கள் வாழ்க்கையை
புதைத்துக் கனவுகளைக்
கட்டியெழுப்பிக் கொண்டிருந்தோம்
இப்போது சரிந்து கிடப்பவை
இன்றைய கோபுரங்களா
நாளைய கனவுகளா???

Thursday, July 16, 2009

மழைக்காலம்

எப்போதாவது
உயிருக்குள் ஊடுருவி
நனைத்துச் செல்லும்
மழையை ஒத்ததாய் இருந்தது
நீ எனக்கு அனுப்பிய
குறுஞ்செய்தி

*****

நீ இல்லாத மாலைப் பொழுதில்
உன் நினைவுகளை
அசைபோடச் சொல்லி
என்னைத் தூண்டியபடி
இப்போதும் பெய்கிறது மழை

*****

என் நாட்குறிப்பின்
பக்கங்களுக்கு வண்ணம்
தீட்டியபடி செல்கின்றன
உன்னைச் சந்தித்த
பொழுதுகள்

*****

ஏதுமல்லாத
வெறுமையின் தருணங்களில்
இயல்பாய் வந்து
அமர்ந்து கொள்கிறது
உன்னைப் பற்றிய
நினைவுகள்

நாட்குறிப்பில்
சொல்லப்படாத மௌனங்களின்
நேரங்களில் இட்டு
நிரப்பப்படுகிறது உன்
ஸ்பரிசத்தின் கணங்கள்

******

முன்னறிவிப்பு இல்லாத
திடீர் சந்திப்புகளின்
ஆச்சர்யங்களுக்குள்
அடங்கி இருக்கிறது
அழகான நம் நட்பு

******