Wednesday, November 08, 2017

பொருளாதார சீரழிப்பு நாள் - நவம்பர் 8


அப்போது நான் நெல்லூரில் அலுவல் நிமித்தமாக சென்றிருந்தேன். என்னோடு என் அலுவல பணியாளர்கள் இருவரும் வந்திருந்தனர். இரவு உணவருந்திவிட்டு சாவகாசமாக அறையில் பேசிக்கொண்டிருந்தோம். பேசி முடித்துவிட்டு உறங்கப் போகலாம் அன்று நினைக்கையில் அலைப்பேசியில் குறுஞ்செய்திகள் வந்திருக்கிறதா என்று பார்க்கலாம் என்று எடுத்தால் வாட்ஸ் அப்பில் ஏகப்பட்ட தகவல்கள், எல்லாம் ஒரே விஷயத்தைப் பேசின. மோடி ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து விட்டார். அடுத்த இரண்டு நாட்களுக்கு வங்கிகள், ஏடிஎம் கள் செயல்படாது.

பர்ஸை திறந்து பார்த்தால் கையில் இருப்பது வெறும் முன்னூறு ரூபாய்கள். எங்கள் மூவருக்குமான உணவுக்கான பணம் அது. அடுத்து ஏடிஎம் எப்போது திறக்குமோ அது வரை அந்த முன்னூறு ரூபாய்களை மட்டுமே வைத்துக்கொண்டு உணவருந்த வேண்டும். தெரியாத மொழி, பழக்கமில்லாத மனிதர்கள், புதிய இடம் என திக்குத் தெரியாமல் நின்றிருந்தோம். அடுத்த ஒரு மாதம் உணவுக்கும், பயணத்துக்கும் பணத்துக்காக ஏடிஎம். ஏடிஎம்மாக அலைந்தது, பட்டினி கிடந்தது எல்லாம் சொல்லி மாளாது.

கக்கத்தில் காசு வைத்துக் கொண்டு என்ன வேண்டுமானாலும் ஊருக்கு உபதேசிக்கலாம், ஆனால் தெருவில் அலைந்தால் தான் உண்மை புரியும். அந்த ஒரு மாதம் நான் சந்தித்த மனிதர்கள், அவர்களின் துன்பங்கள், மோடிக்கும் இந்த அரசுக்கும் விட்ட சாபங்கள், எதுவுமே சாதாரணமாக கடந்து போகக்கூடியது அல்ல.

Saturday, April 08, 2017

சுவை - HMT, ஆர்.எஸ். புரம், கோயம்புத்தூர்.

கோவையின் சிறப்பம்சங்களில் ஒன்று HMR - H முத்து ராவுத்தர் பிரியாணிக் கடை. அவர்களின் ஆரம்பக் கடை ஆத்துப்பாலம் பகுதியில் இருந்தாலும் இன்று ஆர். எஸ்.புரம் பகுதிக்கே போக முடிந்தது. உட்கார இடம் கிடைக்காமல் காத்திருந்து பிறகே இடம் கிடைத்தது. 

மெனு கார்டை பார்க்கும் வரை பர்ஸுக்கு இது ஏற்ற இடம் தானா என்று ஒரு புறம் மனசு கேட்டுக்கொண்டே இருந்தது. 




இதோ அந்த மெனு கார்ட். தம்மாத்தூண்டு பிரியாணிய கொண்டு வந்து வச்சு 300 ரூபாய் கேட்கும் கடைகளுக்கு மத்தியில் இந்தக் கடை மிக அருமை. என்னோடு வந்தவருக்கு பாசுமதி பிரியாணி பிடிக்கும், எனக்கு ஜீரக சம்பா தான். அவர் பிரியாணியைப் பாத்ததுமே என்ன இது எனக்கு வேணாம் பாஸ், செம்ம பசி இப்படி ஆச்சே என புலம்பிய படியே பிரியாணியை வாயில் வைத்தவர். ஒரு வார்த்தை பேச வில்லை பிறகு. அப்படி ஒரு சுவை.

ரொம்ப நாள் கழிச்சு அட்டகாசமான பிரியாணி. பீப் பிரியாணிக்கு தான் HMT ரொம்ப பிரபலம். ஆனா இந்த மெனு கார்டில் பீப் பிரியாணி இடம் பெறவில்லை. எனக்கு பெரிய ஏமாற்றம். வேலை பார்ப்பவரிடம் பீப் பிரியாணி இல்லையா எனக் கேட்டதும் இருக்கே எனக் கொண்டு வந்தார். ஏன் இடம் பெறவில்லை என்பது பெரிதாக இன்னும் என்னை உறுத்திக்கொண்டே இருக்கிறது.

ஒரு 10 நிமிட தாமதத்தை பொறுத்துக் கொள்ள நீங்கள் தயாராக இருந்தால் சுவையான பிரியாணி நியாயமான விலையில் உங்களுக்கு கிடைக்கும்.

கோவை வரும் உணவுப் பிரியர்கள் தவற விடக்கூடாத இடம்....