Saturday, January 26, 2008

சிறகைத் தேடி......

வெறுமையின் கைகளில்
சிக்கிய மனதின்
இறக்கைகள் அறுபடுகின்றது

அறுபட்ட மனதின்
குருதியில் தோய்ந்த
நினைவுகளால்
நீண்டு போகிறது இரவு

இருளின் நீண்ட
கருமையில் இறக்கைகள்
தேடி அலைந்து மீண்டும்
வெறுமையின் கைகளுக்கே
பலியானேன்

நினைவுகளின் சன்னலின்
வழியே தாவிக்குதித்து
பறக்க முற்படுகின்றேன்
எண்ணங்களின் வழியே
வளர்ந்து விரிகிறது
சிறகுகள்.....

Sunday, January 20, 2008

மயிலிறகாய் ஒரு காதல் - இது விமர்சனம் அல்ல

நண்பன் நிலவனிடமிருந்து குறுஞ்செய்தி அவருடைய இரண்டாவது புத்தகம் மயிலிறகாய் ஒரு காதல் இந்த புத்தகக் கண்காட்சியில் இருக்கும் என்று, அவருடைய முதல் புத்தகம் அருமையாக இருக்கும், அந்த எதிர்பார்ப்போடு, புத்தகக் கண்காட்சியில் நுழைந்தவுடன் அவருடைய புத்தகத்தை தான் முதலில் வாங்கினேன்... வீட்டிற்கு வந்ததும் முதலில் அவருடைய புத்தகத்தைப் படித்தேன்.... அருமை... கீழே வைக்கவே தோன்றவில்லை... முழுமூச்சாக புத்தகத்தைப் படித்துவிட்டு தான் நகர்ந்தேன். அதன் பாதிப்புகள் சில நாட்கள் இருந்தன... சில கவிதைகள் மனதை விட்டு அகலவே இல்லை.....

படிக்க ஆரம்பிக்கும் போதே ”உயிரிலே கலந்தவன்” னில் ஆரம்பித்தது நிலவனின் அரசாங்கம்....

“தேவதையை பார்க்க வேண்டும்
என்கிற என் சிறிய
வயது ஆசையை
பூர்த்தி செய்தவள் நீ.
ஆனாலும் உன்னிடம்
ஒன்று கேட்க வேண்டும்..
“நீ என்ன உயிர்
வாங்கும் தேவதையா?”

இதைப் படித்தவுடன் சட்டென்று என்னுடைய உயிர் வாங்கும் தேவதை தான் ஞாபகத்திற்கு வந்தாள்...

இந்தக் கவிதைத் தொகுப்பை நானும் என்னுடைய தோழியும் சேர்ந்து படித்துக் கொண்டிருந்தபோது... ஒவ்வொரு கவிதைக்கும் என்னுடைய தோழியின் முகத்தில் மலர்ந்த புன்னகையும், குறுநகையும் தான் இவனின் கவிதைக்கு அழகான பரிசுகள்... படிக்கும் ஒவ்வொரு கவிதையும் வாழ்வோடு பிணைந்த கவிதைகள்...

மழைப்பெண் எனக்கு மிகவும் பிடித்திருந்தது...

பிரிவு -1 என்கிற கவிதையின் வலி பிரிவை சந்தித்தவ்ர்களுக்கு மட்டுமே புரியும்... நாம் அனைவரும் காதலை வாழ்க்கையில் சந்திக்காமல் இருந்திருக்க மாட்டோம், அதே போல் பிரிவையும்... நம் அனைவருக்கும் இது மிகவும் பிடிக்கும், படிக்கும் போது கொஞ்சம் மனதும் வலிக்கும்....


கன்னம் சிவக்க
சிவக்க முத்தமிட்டுவிட்டு
போதுமாடா
என்பேன்..
அழகானதொரு வெட்கத்தினால்
முகம் திருப்பிக்கொள்வாய்.
ஆண்வெட்கம் அழகில்லை
என்று யார் சொன்னது?


இதைப் படித்தவுடன் முன்பொருமுறை முத்ததினால் நனைந்த என்னுடைய கன்னங்களைக் கொஞ்சம் தடவிப் பார்த்துக்கொண்டேன்...

காதலிக்கும் அனைவருக்கும் தவிப்பு சொந்தம்... தவிர்த்தலும், தவித்தலும் காதலின் இலக்கணம்... இவை இல்லையென்றால் காதல் இல்லை... இதை அழகாக உணர்த்தியுள்ளார் இந்தக் கவிதையில்....


தவிர்தலுக்கென்றே ஒரு
பார்வை வைத்திருக்கிறாய்
நீ
தவிப்பதற்கென்றே ஒரு
இதயம் வைத்திருக்கிறேன்
நான்


நட்பும் காதலும் கவிதையின் சொல்லாடல் மிக அருமை.... நல்ல வேளை இந்த நிலைமை எனக்கு இன்னும் வரவில்லை... என்னுடைய தோழிகளுக்கு கிடைத்த கணவர்கள் நட்பை புரிந்துகொண்டவர்கள்... காதலையும் நட்பையும் பிரித்துப் பார்க்கத் தெரிந்தவர்கள்....

”உங்களுக்குள் என்ன?”
என்று
உயிர் கொடுத்து காதலை
சேர்த்து வைக்கத் துடிப்பவன்
நண்பன்.

நண்பனை கைகாட்டி
”உங்களுக்குள் என்ன?”
என்று
உயிர் பறிப்பவன்
காதலன்.


காதலை ரசித்து, சுவைத்து, சுவாசித்து வரும் நிலாரசிகனைக் கேட்டால் இன்னும் காதலி கிடைக்கவில்லை என்கிறார்.... விரைவில் அவருக்கு காதலி கிட்டட்டும்..... இன்னும் நிறைய அவரிடமிருந்து ஒரு தோழனாக எதிர்பார்க்கிறேன்... இன்னும் பல தொகுப்புகள் வர வேண்டும்.. எங்களின் நிலவனை தமிழ் மக்கள் கொண்டாட வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்....

Monday, January 14, 2008

காதல் பொங்கல்

கரும்பைக் கடித்து
மென்று ரசித்து
சுவைத்து துப்பினாய்
சக்கையாய் விழுந்தேன்
நான்

*****


சக்கரைப் பொங்கல்
வேண்டுமென்றேன்
கொண்டுவருகிறேன்
என்றாய்....
எப்போது புரியப் போகிறது
நான் கேட்பது
உன்னைத் தான்
பொங்கலை அல்ல என்று.....

*****


பொங்கலோ பொங்கல்
என்று உற்சாகமாக
கத்தினாய்
நீ வாழ்த்துவதைக்
கண்ட மகிழ்ச்சியில்
மீண்டும் மீண்டும்
பொங்குகிது
பொங்கல்....

Monday, January 07, 2008

நீ - 1

யாரோ யாரிடமோ
பேசும் வார்தைக‌ள்
மீண்டும் கிள‌றிவிடுகின்ற‌ன‌
ம‌ற‌ந்துபோன
உன் நினைவுக‌ளை...

*****

கைகளை நீட்டிக்
கொஞ்சலாய் தந்தையிடம்
செல்லும் குழந்தைகளைப்
பார்க்கும் போதெல்லாம்
சட்டென்று நினைவிற்கு
வருகிறது நீ
ஊரில் இல்லை என்பது

புத்தகக் கண்காட்சி - 2008

ரொம்ப நாளாக் காத்துக்கிடந்து இந்த புத்தகக் கண்காட்சிக்குப் சனிக்கிழமை (5-1-08) போனோமுங்க.... ரொம்ப பெருசா இருந்துச்சு... போனமுறை இருந்ததைவிட இன்னும் அதிகமான கடைகள் 500க்கும் மேற்பட்ட கடைகள் இருக்குறதா நண்பர்கள் சொன்னாங்க... கண்காட்சிக்கு போறதுக்கு முன்னாடியே நம்முடைய அன்புத்தோழர் நிலாரசிகன் அங்க இருக்குறதா தகவல் வந்திடுச்சு, அவருடைய புத்தகம் "மயிலிறகாய் ஒரு காதல்" வெளியாகியிருக்கு, கடை எண் 5ல் கிடைக்குதுன்னு குறுஞ்செய்தி அனுப்பினார், சென்றவுடன் முதல் வேலையாக அவருடைய புத்தகம் வாங்கி அவரைத் தேடிக் கண்டுபிடித்து அவரிடம் ஒரு கையெழுத்து வாங்கினேன். அவருக்கு என்னுடைய தோழிகளை அறிமுகம் செய்து வைத்தேன்.

பிறகு என்னுடைய தோழிகள் நேரமாகிறது என்று சொன்னவுடன், அவர்களை அனுப்பிவிட்டு நிலாவைத் தேடிச் சென்று அவருடன் இருந்தேன், அப்போ தான் சொன்னார் பெரிய தலைகள் எல்லாம் இங்கே தான் இருந்தன என்று. பிறகு தேடிக் கண்டுபிடித்து, ப்ரியன், பிரேம், அருட்பெருங்கோ, அனிதா, அகிலன், கென்(இன்னும் இருவரின் பெயர்கள் மறந்துவிட்டன) என பெரும் புள்ளிகளை சந்தித்துவிட்டு வந்தோம். மற்றவர்கள் நிலா உட்பட தங்களுடைய வேலையை முடித்து விட்டிருந்தனர்... நாம் தான் பாக்கி, இந்தமுறை புத்தகங்களை நமக்கு பரிந்துரை செய்தது நிலாரசிகன், செல்லமாக எங்களுக்கு நிலவன்.... நீண்ட நாட்களாக நான் தேடிய புத்தகங்களை எனக்கு வாங்கிக் கொடுத்து பெரும் புண்ணியம் தேடிக் கொண்டார், சில புத்தகங்களுக்கு அவர்தான் பணமும் கொடுத்தார், சரி வெளியில் சென்றவுடன் பணம் கொடுத்துவிடுவோம் என்று நினைத்தேன், ஆனால் வெளியில் வந்தபோது எந்தப் புத்தகத்திற்கு அவர் பணம் கொடுத்தார் என்று தெரியவில்லை, அதனால் அமைதியாக வந்துவிட்டேன்... (என்ன நிலா, உங்களுக்கு பணம் திருப்பித் தர வேண்டுமா என்ன?)... இந்த முறை அருமையான தொகுப்புகள்... சீக்கிரம் முடித்துவிட வேண்டும்....

நான் வித்யாவும், விடுதலைப் புலிகளும் பலமாக விற்றுத் தீர்ந்தன, கிழக்குப் பதிப்பகத்தில்.... பயங்கர கூட்டம்...

என்னுடைய தோழி ஒருத்தி இதுவரைச் சந்தித்ததில்லை... என்னுடைய நிழற்படம் அவளிடமும், அவளினுடையது, என்னிடம் இருக்கின்றன... நான் நிலாவுடன் ஒவ்வொரு கடையாக வேகமாக குற்றிக்கொண்டிருந்தோம், அவள் என்னைப் பார்த்துவிட்டு சென்றாளாம், முதல் முறை என்னை நேரில் பார்த்துவிட்டு பயங்கர மகிழ்ச்சியாம், ஆனால் என்னைக் கூப்பிடவே இல்லை... நானும் கவனிக்கவே இல்லை, அவள் விகடன் பதிப்பகத்தாரின் கடையில் பொறுப்பில் இருந்தாலாம், கடைசிவரை நானந்தக் கடைக்கு செல்லவே இல்லை... இதுதான் கொடுமை... என்னை ஞாயிறு அன்று அரட்டையில்( chat) கூப்பிட்டு சொல்கிறாள், பயங்கர கோபம் எனக்கு... என்ன பண்றது???? என்னோட தோழிய தவற விட்டுட்டேன்.... சீக்கிரம் பார்ப்பேன்... அடுத்த வாரமும் புத்தகக் கண்காட்சிக்கு செல்வேன்... இந்தமுறை கொஞ்சம் பெரிய செலவு தான்.... அடுத்தவாரம் என்ன ஆகப் போகுதுன்னு தெரியல... கடைசியா, எனக்கு பல புத்தகங்களை பல கடைக்களுக்கு என்னுடன் அலைந்து எனக்கு வாங்கிக் கொடுத்து, பல புதிய நண்பர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்த நிலாரசிகனுக்கு ஒரு பெரிய "ஓ"... நன்றி சொல்லுதல் நட்பைக் கொச்சைப் படுத்துதல் என்று நான் நம்புவதால் இந்த "ஓ"

இனம் புரியாத நினைவுகள்.....

தெருவில் குட்டிக்கரணம்
மிதிவண்டி டயரில் ஊர்வலம்
ஓணான் பிடித்து க‌ட்டி வைத்த‌ல்
மொட்டை வெயிலில் ஆட்ட‌ம்
அவ‌ளைப் பிடிக்க‌ மிதிவ‌ண்டித் துர‌த்தல்
விழுந்து எழுந்து கை கால் சிராய்த்தல்
பள்ளிக்கூட வாசலில் ம‌ணிக்க‌ணக்காய் த‌வ‌ம்
க‌டைசிவ‌ரை சொல்லாம‌லே
புதைந்து போன‌ காத‌ல்
ஆசிரிய‌ரிட‌ம் பிர‌ம்ப‌டி
ப‌ள்ளிக்கூட‌த்தின் க‌டைசித் தேர்வு
க‌ல்லூரியின் முத‌ல் நாள்
விடுதியின் உல்லாச‌ வாழ்க்கை
ஒரே த‌ட்டில் சாப்பாடு
விசில‌டித்துப் பார்த்த‌ முத‌ல் ப‌டம்
மீண்டும் பூத்த காதல் பூ
ந‌டுநிசி ந‌டைப்ப‌ய‌ண‌ம்
ம‌லைக்கோட்டைச் சாலையின் தாவ‌ணிக‌ள்
அழுது கொண்டே பிரிந்துசென்ற‌
க‌ல்லூரியின் க‌டைசி நாள்
வேலைக்குச் சேர்ந்த‌ முத‌ல் நாள்
முத‌ல் மாத‌ச்ச‌ம்ப‌ள‌ம்
அதிர‌டியாய் முடிந்த‌ காத‌ல் திரும‌ண‌ம்
காத‌ல் ப‌ரிசின் பிஞ்சுக் கால்க‌ள்
வாழ்க்கையின் வெற்றிப்ப‌டிக‌ள்
வேக‌மான‌ முன்னேற்ற‌ம்
சொகுசாய் வாழ்ந்த‌ வாழ்க்கை
முதுமையின் பிடியில் நுழைவு
ம‌னைவி பிரிந்த‌ த‌னிமை.....

எல்லாம் வேக‌மாய் நினைவுக்கு வ‌ருகிற‌து
ம‌ர‌ண‌த்தின் நேச‌க்க‌ர‌த்தில் சாய்ந்த‌ போது