Thursday, May 31, 2018

மங்களூர் பயணம் - உணவுக்கதை...





எந்த ஊருக்கு போனாலும் அந்த ஊரின் முக்கிய சுற்றுலா பகுதிகளையும், அந்த ஊரின் சிறப்பான உணவு வகைகளையும் சுவைப்பது என்னுடைய பழக்கம். இந்த முறை மங்களூர் போக வேண்டும் என்று அலுவலகத்தில் சொன்னபோது அப்படி என்ன இருக்கிறது மங்களூரில் என்று தேட ஆரம்பித்தேன். வழக்கம் போல கூகுளாண்டவர் சிறப்பான உதவிகள் அருளினார். சில பல இணையத்தளங்கள், உதவியோடு முக்கியமான சிறப்பான உணவகங்களின் பட்டியல் தயாரானது.

மங்களூர் சென்று இறங்கிய போது, அப்படியே மலையாள வாடை வீசியது எங்கும், வீடுகள், இயற்கை என அற்புதம். பயிற்சி எடுக்கும் இடம் மங்களூரில் இருந்து 45 நிமிட பயண தூரத்தில் இருந்தது. ஓலா புக் செய்தேன். டிரைவருக்கு அழைத்தேன், நான் பேசிய ஆங்கிலம் அவருக்கு புரியவில்லை, அவர் பேசிய துலு, கன்னடம் எனக்கு புரியவில்லை. எப்படியோ வரவழைத்து உள்ளே ஏறி அமர்ந்தால் தமிழ்ப்பாட்டு ஒலிக்கிறது. அண்ணே நீங்க தமிழா என்றேன். அவர் உற்சாகத்தோடு ஆமா சார் தூத்துக்குடி என்றார். அவர் பெயர் மதியழகன். ஸ்டெர்லைட், துப்பாக்கி சூடு என சிறிது நேரம் பேசி விட்டு பேச்சு அவர் பற்றியும் மங்களூர் பற்றியும் வந்தது. அவர் 18 ஆண்டுகளுக்கு முன் மங்களூர் வந்தார். அவர் மங்களூர் பெருமைகள் சொல்லச் சொல்ல பேசாமல் மங்களூரில் செட்டில் ஆகிடாலாமே என்ற எண்ணம் வந்து விட்டது.

பேச்சு நமக்கு பிடித்த உணவுகள் நோக்கித் திரும்பியது. மீன் இல்லாம எனக்கு சாப்பாடே எறங்காது சார் என்றவரை நம்ம இனம் சார் நீங்க என்று கட்டித்தழுவாத குறை. எங்கே என்ன சாப்பிடலாம் என்று விசாரித்துக் கொண்டு பயிற்சி இடத்துக்கு சென்று விட்டோம். மங்களூரின் சிறப்பு மீன். திரும்பிய இடம் எல்லாம் வகை வகையாய் மீன் விற்றுக் கொண்டிருந்தார்கள். ஊர் அப்படியொரு சுத்தம். ஒரு சினிமா அல்லது அரசியல் சார்ந்த போஸ்டரை பார்க்க முடியவில்லை.

ஞாயிறு பயிற்சி முடிந்து இரவு தங்குமிடத்துக்கு வந்த போது உணவு வேட்டை ஆரம்பித்தது. மூன்று முக்கியமான மீன் உணவகங்கள் இருக்கின்றன. அதில் முதல் இடம் மச்சலிக்கு…

1)     மச்சலி, (Machali Restaurant)



இங்கே வவ்வால், வஞ்சிரம் என ஆரம்பித்து ஏகப்பட்ட மீன் வகைகள், எல்லா பேரையும் துலுவில் எழுதி வைத்திருக்கிறார்கள். மதியழகன் உதவியோடு முதல் நாள் இரவுக்கு Koddai(இதுக்கு தமிழில் என்ன மீன் என்று தேடினேன், கிடைக்கவில்லை) என்ற மீனும், கணவாய் அல்லது கடம்பா என சொல்லப்படுகின்ற Squid ம் வாங்கினோம், Squid Ghee roast. ருசி அப்படியொரு ருசி. இங்கே எப்போதும் மீல்ஸ் மற்றும் மீன், நண்டு, இறால் வகைகள் கிடைக்கும். தோசை முதலிய டிபன் வகைகள் இல்லை.
மறுநாள் மதியமும் மச்சலியிலேயே ஆஜர். இப்போது மீல்ஸோடு வவ்வாலும், அதே Koddai யும், டிரைவர் மிகவும் உயர்வாகச் சொன்னதால் சிக்கன் மசாலாவும் வாங்கினோம். ஒரு சிறு குறை கூட சொல்ல முடியாத அளவு அப்படியொரு ருசி, வவ்வால் மற்றும் வஞ்சிரம் மட்டுமே விலை மிக உயர்வு, மற்ற அனைத்தும் கொடுக்கும் விலையை விட அதிகமாகவே உண்ட திருப்தி. அனைத்தும் தேங்காய் எண்ணெயில் சமைக்கப்பட்டது, தேங்காயின் சுவை நன்றாகவே தெரிந்தது.





உணவகம் மிகச் சிறியது. கூட்டம் எப்போதுமே இருந்து கொண்டே இருக்கிறது, பார்சல் ஒரு பக்கம் வேகமாக நடந்து கொண்டிருந்தது. மதியழகன் சொன்னார் இங்கே இருக்கும் உணவகங்களில் இது தான் மிகவும் சுத்தமாக இருக்கும், கூட்டத்துக்கு குறைவே இருக்காது என்று. 

முக்கியமான ஒரு விஷயம் சிறிய அசைவ உணவகங்கள் செல்லும் போது இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை அங்கே அடிக்கும் கவுச்சி வாடை. என்னைக் கேட்டால் வாசனை என்று சொல்வேன். மற்றவர்களுக்கு வாடை. இங்கே கொஞ்சம் கூட அந்த வாடை இல்லை. உணவின் மணம் வீசும்.

2)     கிரிமஞ்சாஸ்(GiriManjas Restaurant)



கிரிமஞ்சாஸுக்கு இரண்டாவது இடம் கொடுப்பேன். மிகச் சிறிய இடம், மச்சலி மாதிரியே மீல்ஸ் மற்றும் உணவு வகைகள், விலை சற்றேறக்குறைய அதே. ருசி அற்புதம். இம்முறை மீல்ஸ் வேண்டாம் என்று சொல்லி விட்டு மீனில் மட்டும் கவனம் செலுத்தினோம். இம்முறை ’முரு’ என்ற மீனும், கணவாய் ghee roast இல்லாத காரணத்தால் ஃப்ரை வாங்கினோம், சும்மா சொல்லக்கூடாது, ருசி அதே போல அருமை. அதை முடிச்சதும், Prawn masala, பச்சை நிறத்தில் மசாலா, நல்லா இருக்குமா இருக்காதான்னு சந்தேகத்தோட சாப்பிட ஆரம்பிச்சேன், கொஞ்சம் கூட மசாலா மிச்சம் வைக்கப்படாமல் சாப்பிட்டு முடிக்கப்பட்டது, அடுத்து என்னன்னு யோசிச்சப்போ மறுபடி ஒரு ’முரு’ மீன் சொல்லி சாப்பிட்டு திருப்தியா வயிறு நிரம்பின உணர்வோட எழுந்தோம். அப்போ அங்கே சிறப்பு குளிர்பானம் என ஒன்றைக் கொடுத்தார் வெள்ளை நிறத்தில். என்னவென்று கேட்டால், இளநீரும், எலுமிச்சையும் கலந்தது என்றார். எனக்கு இரண்டுமே பிடிக்கும். எப்படி விடுவது. குடித்தாயிற்று. அது தனி ருசி.






3)     நாராயணா உணவகம்(Narayana Restaurant)



நாராயணாவுக்கு நான் மூன்றாவது இடமே கொடுப்பேன். நான் சென்ற இரவு, கேட்ட எதுவுமே இல்லை. வஞ்சிரம் மற்றும் மத்தி பிறகு ஏதோ ஒரு மீன். அது மட்டுமே இருந்தது. என்னோடு வந்திருந்த என் அலுவலக நண்பருக்கு வஞ்சிரம் மிகவும் பிடித்திருந்தது வஞ்சிரத்தோடு அதன் மசாலா மிகவும் பிடித்து விட்டது. அந்த மசாலா செய்யும் முறை பற்றி எவ்வளவோ கேட்டும் சொல்ல மறுத்து விட்டார். ரகசியம் என்று சொல்லிவிட்டார்.



ரம்ஜான் காலத்து மட்டன், சிக்கன் சமோசக்கள் சாப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. ருசி சுமார் தான். மழை அதிகமாக இருந்ததால் பெரிதாக வெளியே சென்று மற்ற கடைகளை சுவைக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

மற்றுமொரு ஆச்சர்யம் ஷவர்மா. Falnir பகுதியில் Chilly Lemon என்ற கடையில் நம் ஊரில் குறிப்பாக சென்னையில் 60-70 ரூபாய்க்கு விற்கும் அதே ஷவர்மா அளவில் அங்கே இரண்டு ஷவர்மா சாப்பிட முடிந்தது. அருமையான சுவை. இங்கே தான் மட்டன் சிக்கன் சமோசாக்கள் சாப்பிட்டேன், உருளைக்கிழங்கு மசாலா அதிகமாக இருந்ததால் எனக்கு பிடிக்க வில்லை.



முக்கியமான விஷயத்தை மறந்து விட்டேன். ஐஸ்கிரீம். மதியழகன் என்னிடம் சவால் விட்டார் உங்க ஊர் அருண் ஐஸ்கிரீமில் இல்லாத சுவையை நான் இங்கே ஒரு கடையில் கொடுக்க முடியும், முக்கியமா சளி பிடிக்காது என்றார். என்னடா அதிசயம் என்று நினைத்து அவருடன் சென்ற ஐஸ்கிரீம் கடை பப்பாஸ்(Pabbas). 



மிகப்பெரிய கடை. ஒரு ரெஸ்டாரண்ட் போல இருந்தது. சாதாரண விலை. ஐஸ்கிரீம் அவ்வளவு சுவை. Really enjoyed. சாக்கலேட் பீட்சா, தில்குஷ், அப்புறம் இன்னும் சில வகைகள் சாப்பிட்டு முடித்தோம்.




இன்னொரு மங்களூர் சிறப்பு மங்களூர் பன்(Mangalore Buns), அதையும் ஒரு கை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதோடு தேங்காய் சட்னி. ஆவ்சம்…



எங்கேயோ படித்தது நினைவுக்கு வந்தது.

There are 2 things that Mangalorians take very seriously –
  1. Their fish
  2. Ice cream!
இதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன்.