Wednesday, May 23, 2007

அன்புத்தோழி 4

நாம் சண்டைப்போட்டு
பேசாமலிருக்கும்
ஒவ்வொரு முறையும்
அர்த்தமற்று போய் விடுகிறது
நம் இத்தனை வருட‌
புரிதலும் நட்பும்

------

நான் தேடித் தேடி
பதில் தெரியாமல்
தொலைந்து போவது
உன்னுடைய அர்த்தம் பொதிந்த
அந்த "ஒண்ணுமில்லை"
என்ற வார்த்தையில் தான்

Wednesday, May 02, 2007

அன்புத்தோழி 3


ஒன்றாகச் சேர்ந்து
ஊர் சுற்றுவதும்
மடல் முடிக்கும்போது
"With Lots of Love" என்று முடிப்பதும்
சந்தித்துக் கொள்ளும் போது
கட்டிப்பிடிப்பதும்
நட்பிலும் நடக்கும் என்றால்
நம்ப மறுக்கிறார்களே ஏன்

நாங்கள் நம்புகிறோம்

விடியலின் வேர்கள்
முளைவிட்ட சமயத்தில்
இருட்டின் இரும்புக்கரங்கள்
நம்மைச் சிறைப்பிடித்தன‌


பழமைவாதிகளின்
புளித்துப்போன சித்தாந்தங்கள்
நம் இளமைவேகத்திற்கு
அணை போட்டுவிட்டன‌


அவர்களின் பழைய பல்லவிகள்
நம் தோழிகளின்
சிற‌குகளை ஒடித்துப்போட்டன‌


ஊழ‌லின் விழுதுக‌ள்
ந‌ம் எதிர்கால‌த்தின்
க‌ழுத்தை நெரிக்கின்ற‌ன‌


ல‌ஞ்ச‌த்தின் நாச‌க்க‌ர‌ங்க‌ள்
ந‌ம் க‌ன‌வுக‌ளை
க‌ல்ல‌றைக்கு அனுப்புகின்ற‌ன


இந்த‌ப்பிழைக‌ளுக்கு
நாம் திருத்த‌ங்க‌ளாவோம்


ப‌ழ‌மைவாதிக‌ளே கேளுங்க‌ள்

ஒடிக்க‌ப்ப‌ட்ட‌
எங்க‌ளின் சிற‌குக‌ளை
ஒட்ட‌வைக்கும் க‌லையை
நாங்க‌ள் க‌ற்றுக்கொண்டிருக்கிறோம்

தடுப்பணைகளை
தகர்த்தெரியும் வேக‌த்தை
உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்



எங்க‌ளுக்குத் தெரியும்
இந்த‌ப் ப‌ழ‌மைவாதிக‌ள்
த‌ங்க‌ள் அனுப‌வ‌த்தைச் சொல்லி
எங்க‌ளை ந‌சுக்கி விடுவார்க‌ள் என்று

எங்க‌ளுக்குத் தெரியும்
ம‌ல‌ர்மாலைக‌ள் அல்ல‌
முள்கிரீட‌ம் தான்
எங்க‌ளுக்கு அணிவிக்க‌ப்ப‌டும் என்று

எங்க‌ளுக்குத் தெரியும்
நாங்க‌ள் சாதியின் பெய‌ராலும்
ம‌த‌த்தின் பெய‌ராலும்
ஒடுக்க‌ப்ப‌டுவோம் என்று

ஆனால்
நாங்க‌ள் உண‌ர்ந்திருக்கிறோம்
இந்த‌ ச‌மூக‌ மாற்ற‌த்திற்கான‌
க‌ருவிக‌ள் நாங்க‌ள் தான் என்று

நாங்க‌ள் ந‌ம்புகிறோம்
இருட்டின் பிடியிலிருந்து
இந்த‌ச் ச‌முதாய‌த்திற்கு
வெளிச்ச‌த்தின் சிற‌குக‌ளை
கொடுக்க‌ முடியும் என்று

சாதிய‌ வேர்க‌ளை அறுத்தெரிந்து
ச‌ம‌த்துவ‌ம் ப‌டைக்க‌முடியும் என்று
ல‌ஞ்ச‌த்தின் செய‌ற்கை சுவாச‌த்தை
நிறுத்தி புத்துல‌கு காண‌முடியும் என்று

நாங்க‌ள் ந‌ம்புகிறோம்