Friday, December 15, 2006

நாம செய்யுறது சரியா?

எதற்கெடுத்தாலும் அரசாங்கம் சரியில்ல, அரசாங்கம் சரியில்லனு சொல்றோமே, நாம எந்தெந்த விதத்துல சரியா இருக்கோம்னு நாம கொஞ்சம் நினைச்சு பார்த்ததுண்டா? பொது இடத்துல குப்பை போடுறது( பேருந்து பயணச்சீட்டாக இருந்தாலும் அதுவும் குப்பை தான்), எச்சில் துப்புறது ஆரம்பிச்சு.... பொது பிரச்சனை வரைக்கும் எதுல நாம ஒழுங்கா இருக்கோம்.

நம்மகிட்ட இருக்குற ஒருசில பிரச்சனைகளையும் கொஞ்சம் பார்ப்போமே..


நாமெல்லாம் எந்தப்பிரச்சனையிலும் பங்கெடுக்க முயற்சிப்பதில்லை, சமூக பிரச்சனைகளை நினைத்து கவிதை எழுதவும் கட்டுரை எழுதவும் தயாராய் இருக்கும் நாம் தெருவில் இறங்கி மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க தயாரா? ரொம்ப வேண்டாங்க, இப்போ அணு ஆயுத ஒப்பந்தம் அமெரிக்காகிட்ட போட்டோமே நம்ம நாட்டின் எதிர்கால அணுத் திட்டங்களை அடகு வைக்கிறோம், நம்மள்ல எத்த‌னை பேருக்கு அது பத்தின முழு விவரமும் தெரியும், மேற்கு வங்காளத்துல நடந்துகிட்டு இருக்குற அந்த சிங்கூர் பிரச்சனை எத்துனை பேருக்கு தெரியும், கொஞ்ச நாளைக்கு முன்னாடி பேசினோமே பெரியார் அணை விவகாரம் அது என்ன ஆச்சுன்னு யாராவது கவலைப்பட்டோமா?, நர்மதை அணை விவகாரம் பற்றி யாராவது சிந்திக்கிறோமா?, நதிகளை இணைக்கனும்னு பெருசா பேட்டி கொடுக்குற அரசியல்வாதிகளுக்கு அதனால் எத்தனை கோடி பேர் வீடுகளை இழந்து, வாழ்வியல் ஆதாரங்களை இழந்து நிற்பார்கள் என்ற கணக்கு தெரியுமா? சரி ஓட்டுப் பொறுக்கும் அரசியல்வாதிகளுக்கு தெரிய வேண்டாம், படித்த நம‌க்காவது தெரியுமா?, க‌ழிப்பிட‌வ‌ச‌தி கூட‌ இல்லாம‌ல் தமிழகத்தில் 70 இல‌ட்ச‌ம் குடும்ப‌ங்க‌ள் இருப்ப‌தாக‌ புள்ளி விவ‌ர‌ங்க‌ள் சொல்லுது ஆனா ந‌ம்ம‌ அர‌சாங்க‌ம் அத‌ற்கு முய‌ற்சி செய்யவில்லை ஆனா க‌ல‌ர் டி.வி கொடுக்குது, நாம‌ அதைப‌ற்றி க‌வ‌லைப் ப‌ட்டிருப்போமா? ப‌டிக்க‌ கூட‌ வ‌ச‌தி இல்லாம‌ எத்த‌னையோ சிறார்க‌ள் இருக்காங்க‌ அவுங்க‌ வாழ்க்கைக்கு என்ன‌ ப‌ண்ண‌லாம்னு யோசிச்சிருப்போமா?...

ரொம்ப கூலா அரசியல் ஒரு சாக்கடைனு சொல்றோம் சரி அதை கொஞ்சம் சுத்தப்படுத்ததான் முயற்சிக்க மாட்டோம், குறைந்தபட்சம் வார்டு கவுன்சிலர்ல நம்முடைய முயற்சிய தொடங்கலாமே... அத செய்ய மாட்டோம், சரி சாதிகள் பற்றி, அதன் கொடுமை பற்றி பக்கம் பக்கமா வசனம் பேசுறோம், கவிதை எழுதுறோம் ஆனா நம்முடைய விண்ணப்பப்படிவங்கள்ல இன்ன சாதின்னு சரியா எழுதுறோம்... ரொம்ப சரியா நம்முடைய சாதியில மட்டும் தான் திருமணம் பண்ணுவோம்....


ஏங்க‌ நாம‌ க‌ண்ணுக்கு முன்னாடி இத்த‌னை கொடுமைக‌ள் ந‌ட‌ந்தாலும், நம்மளே இத்தனை தவறுகள் செய்தாலும் அதை ப‌ற்றியெல்லாம் க‌வ‌லை ப‌டாம‌ல், மெகாத் தொட‌ர்க‌ளிலும் , சினிமாவிலும், வெட்டி அர‌ட்டையிலும் ந‌ம்முடைய‌ ப‌ய‌ண‌ம் சிற‌ப்பா போய்கிட்டு இருக்கு....

நாம செய்யுறது சரியா?

Thursday, December 07, 2006

அன்புத் தோழி 1

முகவரி கேட்டு
வந்தாய்
முகம் தெரியா
இருவரும்
நண்பர்களானோம்

------

உன் திருமணம்
முடிந்தபின்
என்றாவது ஒரு நாள்
உன்னைச் சந்திப்பேன்
என்ற நம்பிக்கையில் தான்
அன்று வீடு திரும்பினேன்

-------

உன் பிறந்தநாளின்
போது நாம்
பேசிக் கொண்டதை
நினைத்து
மூன்று நாட்களாய்
தனியே சிரிக்கிறேன்
பைத்தியக்காரனைப் போல்

சொல்லாமல் விட்ட காதல் 1

திட்டமிட்டுச் செய்யாமல்
திடீர் தாக்குதல்
நடத்தி என்னைச்
சிறைப்பிடித்தாய்

போர்க்கைதிகளை
நியாயமாக நடத்த
சட்டம் உண்டு
ஆனால் உந்தன்
மனக்கைதி எனக்கு
என்ன உண்டு

தினமும் உனக்காகவே
அந்தச் சாலையில்
காத்துக் கொண்டிருக்கிறேன்

மக்களை நிராகரிக்கும்
அரசியல்வாதி போல
என்னை நிராகரித்துச் செல்கிறாய்

சூறாவளியில்
சிக்கிய பொருள்போல்
ஆனது என் நிலைமை

மீண்டும் மீண்டும்
உன்னை நோக்கி
படையெடுத்துக்
கொண்டிருக்கிறேன்
வெற்றி பெறுவேன்
என்ற நம்பிக்கையோடு

------------------------

பயணம்

தொடர்ந்து
பயணிக்கிறேன்
என்றாவது ஒருநாள்
உன்னைச் சந்தித்து
விடுவேன் என்ற
நம்பிக்கையில்

இந்தியாவில் கல்வி முறை

இந்தியாவில் கல்விமுறை எப்படி உள்ளது என்ற கேள்விக்கு நம்மில் சிலர் மோசமான கல்விமுறை என்றும் பல‌ர் நல்ல கல்விமுறை என்றும் குறிப்பிடுவர். நான் தற்போது உள்ள பாட திட்டங்களைப் பற்றி பேச விரும்பவில்லை, அவை மோசம் தான் இருந்தாலும் நான் அதையும் தாண்டி உள்ள சில விஷ‌யங்களை பற்றி பேச விரும்புகிறேன்.

முத‌லில் ந‌ம் நாட்டில் எத்த‌னை வ‌கையான‌ க‌ல்விமுறை உள்ள‌து என்ப‌து ப‌ற்றி நாம் யோசிக்க‌ வேண்டும். 1) International syllabus based, 2) CBSE, 3) Matric மற்றும் 4) StateBoard.

ஒரே நாட்டில் வாழும் மக்களுக்கு, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று எல்லொரையும் ஒரே த‌ட்டில் வைத்து பார்ப்பதாக சொல்லும் ஒரு நாட்டில் ஏன் இப்படி விதவிதமான கல்விமுறைகள்.

பணம் இருப்பவனுக்கு ஒரு மாதிரியான கல்வி, பணம் இல்லாதவனுக்கு ஒரு மாதிரியான கல்வி. எதற்கெடுத்தாலும் மேலை நாட்டை உதாரணம் காட்டுபவர்கள் இதற்கும் உதாரணம் காட்டவேண்டியது தானே? அங்கே கல்வி அரசாங்கத்தின் கைகளில், இங்கு போல் அங்கு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு வியாபாரம் ஆக்கப்படவில்லை, அனைவருக்கும் தரமான, சமமான கல்வி அளிக்கப்படுகிறது. சனாதிபதியின் மகளும், செருப்பு தைப்பவனின் மகனும் ஒன்றாகத்தான் படிக்கிறார்கள். அங்கே வேற்றுமை பேணப்படுவதில்லை கல்வி விசயத்தில்.

இங்கே மட்டும் தான் கல்வி அரசியலாகவும், வியாபாரமாகவும் ஆக்கப்படுகிறது. பணம் இருப்பவன் நல்ல தரம் வாய்ந்த பள்ளிக்கூடத்தில், சகல வசதிகளோடும் கல்வி பயில முடியும், பணம் இல்லாதவனுக்கு தான் அரசு ஒதுக்கி உள்ளதே ஓராசிரியர் மற்றும் ஈராசிரியர் பள்ளிகள். ஆய்வுக்கூடங்களையே பார்க்காமல் பன்னிரென்டாம் வகுப்பு முடிக்கும் மாணாக்கரின் தரமும், ஏழாம்,எட்டாம் வகுப்புகளிலேயே ஆய்வுக்கூடங்களில் ஆய்வுகள் செய்து பார்த்து பன்னிரென்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவனின் தரமும் ஒன்றாக மதிப்பிடப்படுவது நம் நாட்டில் தான்.

பன்னிரென்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெறும் மாணாக்கர்கள் மருத்துவத்தையும், பொறியியலையும் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் அர‌சாங்கம் ஏன் அவ‌ர்க‌ளை ஆசிரிய‌ர்க‌ளாக‌ மாறுவ‌த‌ற்கு ஆசிரிய‌ர் ப‌யிற்சிக்கு அனுப்ப‌க்கூடாது. இங்கே யார் ஆசிரிய‌ர்க‌ளாக‌ வ‌ருகின்ற‌ன‌ர்? ம‌திப்பெண் குறைவாக‌ எடுத்து இள‌ங்க‌லை ப‌டிக்க‌ம் மாணாக்க‌ர்க‌ள், அவ‌ர்க‌ளிலும் ப‌ல‌ர் மேற்ப‌டிப்பு, பெரிய‌ வேலை என்றெல்லாம் போய்விட‌ மீத‌ம் உள்ள‌வ‌ர்க‌ள் தானே ஆசிரிய‌ர்க‌ளாக‌ வ‌ருகின்ற‌ன‌ர்.
ந‌ம் நாட்டில் மாற்ற‌த்தைக் கொண்டுவ‌ர‌ விரும்பினால், முத‌லில், க‌ல்வியில் மாற்ற‌ம் கொண்டு வ‌ருவோம்.

டிசம்பர் - 6

டிசம்பர் - 6

பாவிகளே
எதை இடித்து
எதை கட்டினீர்கள்

நீங்கள் இடித்தது
கட்டடம் என்றால்
மீண்டும் கட்டியிருக்கலாம்
ஆனால் நீங்கள் இடித்தது
மக்களின் மனம் அல்லவா?

உங்களால்
இங்கு சிந்தப்பட்டது
பலரின் கண்ணீர்
மட்டும் அல்ல
சிலரின்
இரத்தமும் தான்

உங்களால் கொல்லப்படுவது
மனித உயிர்கள்
மட்டுமல்ல
மனித நேயமும் தான்

இங்கே அறுபட்டது
பலரின் குடல்கள்
மட்டுமல்ல
எங்களின் உறவுகளும் தான்

போதும் நிறுத்துங்கள்

இனியும் மதத்தின்
பெயரால்
எங்கள் சகோதரர்கள்
அனாதைகளாய்
அகதிகளாய்
அலைய வேண்டாம்

விழிகளில் ஈரத்தையும்
மனதில் பாரத்தையும்
சுமந்து நிற்க வேண்டாம்

போதும் நிறுத்துங்கள்...

Wednesday, December 06, 2006

சொல்லாமல் விட்ட காதல்

ஒருமுறையாவது
உன்னிடம்
சொல்லிவிட வேண்டும்
என்றுதான்
நினைக்கிறேன்
சொல்லாமல் விட்ட‌
என் காதலை...

-------------

ஒவ்வொரு முறையும்
உன்னைப் பார்பதற்காகவே
கடந்து போகிறேன்
வழக்கம் போல்
நீ இல்லாமல்
வெறுமையாய் இருக்கிறது
உன் வீடு

---------------

அவ‌ள் என்
கவிதைக்கு
கையும் காலும்
முளைத்ததைப்
போல் இருந்தாள்

--------------

களைத்துப் போய்
வரும் எனக்கு
நெற்றி வியர்வை
துடைத்து
ஒரு முத்தம்
தந்துவிட்டு
போனாலென்ன‌

நம் தேசம்

தீர்ப்பு

இங்கே தீர்ப்புகள்
முடிவு செய்யப்பட்ட
பின்பே
வழக்குகள்
விசாரிக்கப்படுவதால்
உண்மை இங்கே
பர்தா போட்டுக் கொள்கிறது

சுதந்திர இந்தியா?


சுதந்திர இந்தியாவாம்
யார் சொன்னது?

இங்கே

கனவுகள் கூட‌
திருடப்படுகின்றன‌
மொட்டுக்க‌ள் கூட‌
க‌ருகி விடுகின்ற‌ன‌

எங்க‌ள் க‌ண்ணீர்
முத‌லாளிக‌ளுக்கு
ப‌ன்னீராய் தெளிக்க‌ப்ப‌டுகிற‌து.

நாங்க‌ள்
என்றும் அக‌திக‌ளாக‌
எங்க‌ள் நாட்டிலேயே

இங்கே

ஏழைக‌ளின் ஆடைக‌ளுக்கே
சுதந்திரம் கொடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து

எங்க‌ள் சிதைக்கு
தீ மூட்டி விட்டு
சுகமாய் குளிர்காய்கிறார்க‌ள்
எங்க‌ள்
அர‌சிய‌ல் த‌லைவ‌ர்க‌ள்

உறைப‌னி கூட‌
கொழுந்துவிட்டெரியும்
எங்க‌ள் அவ‌ல‌ங்க‌ளை
கேட்டால்

ஆனால்
இந்த அவலங்களுக்கு
நாங்கள் தான்
காரண கர்த்தாக்கள்

சாதிகள் கண்டுபிடித்து
மோதல்கள் கொண்டோம்
சமய‌ங்கள் பெயரைச் சொல்லி
ச‌ழக்குகள் கொண்டோம்

ம‌த‌த்தின் பெயரால்
ம‌னித‌நேய‌ம் தொலைத்தோம்
சாதியின் பெய‌ரால்
ச‌ண்டையிட்டுக் கொண்டோம்

ம‌த‌த்திற்காக‌
ச‌ண்டையிடும் நாம்
என்று ம‌னித‌நேய‌க்
கொடி பிடிக்க‌ப்போகிறோம்?
சாதிக்காக‌
ச‌ண்டையிடும் நாம்
என்று சாதிக்க‌ப்போகிறோம்

இந்தியத் தாயே
எங்களுக்கு நீ
மகாத்மாக்களை தர வேண்டாம்
நல்ல மனிதனையாவது தா.....

------

நெருப்பு

இந்த‌ச்
சமூக அவலங்களை
சுட்டுப் பொசுக்க‌
கொஞ்சம்
நெருப்பு வேண்டும்
என் விழிகளுக்கு

Friday, October 20, 2006

அன்புத் தோழி



நம் நட்பு

நம் நட்புக்கு
ஆயிரம் அர்த்தங்கள்
சொல்லும் இச்சமூகம்
நமக்குத் தெரியும்
நம்மிடம் இருப்பது
நட்பு மட்டும் தான்
நட்பைத் தவிர‌
வேறொன்றுமில்லை என்று.


பேருந்து நிறுத்தம்

அந்த பேருந்து நிறுத்தத்தில்
ம‌ணிக்க‌ண‌க்காய்
பேசிக்கொண்டு இருந்தோம்
எத்த‌னை பேருக்கு
புரிந்திருக்கும்
நாம் நண்பர்கள் என்று.


உறவு

உன் கைபிடித்து
நடக்கத் துவங்கிய‌
அந்த நாளில் தான்
உணர்ந்தேன்
ஆண் பெண் உறவில்
காதலையும் தாண்டி
ந‌ட்பு என்று
ஒன்று உள்ள‌தென்று.


விசாரிப்பு

உன்னைச் சந்திக்க‌
வரும்போதெல்லாம்
எனைப் பார்த்து குரைக்குமே
உன் வீட்டு நாய்,
அதை மிகவும்
விசாரித்தேன் என்று
சொல்.


தோழி

இலக்கியம், இதழியல்,

புரட்சி, சமூகம்,
அரசியல், காதல்,
நட்பு, பாசம்,
வறுமை, சினிமா,
பட்டினி சாவுகள்,
இசை, கடிதங்கள்,
உன் காதலன், என் காதலி,
என்று என்னதான்
பேசவில்லை நாம்
ஒரு தோழி இருப்பது
எத்தனை செளகர்யம்....


நட்பூ

இன்றும் கூட

நினைத்துக் கொண்டிருக்கிறேன்
நீ என்றாவது
ஒரு நாள் வருவாய்
உன்னால் முறிந்து
போன நட்பில்
மீண்டும் பூ பூக்குமென்று...

-----

அன்று
உனக்கும் எனக்கும்
ஏதோ சின்ன மனவருத்தம்
நெடுநேரம் நிலவிய‌
இறுக்கமும் மௌனமும்
உடைந்தது
எதற்காகவோ
நாம் கைகோர்த்துக் கொண்ட‌
அந்த நொடிப் பொழுதில்....


சாட்சி

நம் உறவையொத்த‌

சந்தேகப் பார்வைகளுக்கு
சாட்சியாய்
கைகோர்த்துக் கொண்டு
நிதானமாய் நடந்து
பேசிக் கொண்டிருந்தோம் நாம்.


நம் நட்பு

உன் கணவனுக்கும்

என் மனைவிக்கும்
புரிந்து கொள்ளும்
பாக்கியம் கிடைக்குமா
நம் நட்பை?


தோழி

தோழி

நம் நட்பின் ஆழம்
நமக்கு மட்டும்
தான் தெரியும்

எத்த‌னை பேச்சுக்கள்
எத்த‌னை ச‌ண்டைக‌ள்
எத்த‌னை கோப‌ங்க‌ள்

என் துய‌ர‌ங்க‌ள்
அனைத்தையும்
க‌ன‌வுக‌ள் சும‌ந்து வ‌ரும்
உன் க‌ண்க‌ள்
மற‌க்க‌டித்து விடும்

இந்தக் க‌ல்லூரி
ம‌திற் சுவ‌ருக்குள்
ப‌ய‌ங்க‌ளோடு வ‌ந்த‌
என‌க்கு ந‌ம்பிக்கையின்
சிற‌குக‌ளைத் தந்த‌வ‌ள் நீ
ந‌ட்பின் க‌த‌வுக‌ளை
திற‌ந்து விட்ட‌வ‌ள் நீ

ம்ம்ம்
வார்த்தைக‌ளின்
வ‌ர்ண‌ஜால‌ங்க‌ள் மூல‌மாய்
ந‌ம் ந‌ட்பை
சொல்லி விட‌த்தான்
நினைக்கிறேன்
வார்த்தைக‌ள் தீர்ந்து

வ‌லி ம‌ட்டுமே
மிஞ்சுகிற‌து....

Friday, October 13, 2006

வணக்கம்

வாழப்போவது கொஞ்சகாலம். அதையும் பிறருக்காக வாழ்வோம்


அன்புள்ள நண்பர்களே,

இது எனக்கான, நமக்கான‌ பக்கம். இது என் சிறு முயற்சி. நான் கணினி பற்றி அதிகம் அறியாதவன். யாருடைய உதவியும் இன்றி நான் இந்த வலைபக்கத்தை உருவாக்கினேன். இது உங்களை ஈர்க்கும்படி இருக்காது. பொறுத்துக்கொள்ளவும்.


என்றும் நட்புடன்

சார்லஸ்