Sunday, May 31, 2009

மீண்டும்

கைகோர்த்துக்கொண்டு
நடந்து இந்தச் சாலையின்
நீள அகலம் அளந்த
காலமெல்லாம் சட்டென்று
தோன்றி மறைந்தது கண்முன்

எதிரெதிரே நீயும் நானும்
குறுக்கே சாலை
உன் பார்வையின்
வீச்சு தாங்க முடியாமல்
கண்களை மூடிக்கொண்டேன்

பிரிவுகள் ரணமானவை என்று
நம் பிரிவு தான் எனக்கு
உணர்த்தியது...

தவறான புரிதல்கள்
உன்னை என்னிடமிருந்து
அன்னியப்படுத்திடும் என்று
எதிர்பார்த்திருக்கவில்லை

உன் நிராகரிப்புகளால்
நொறுங்கிப்போனது என் மனம்
மட்டுமல்ல அலைப்பேசிகளும் தான்


தோளோடு அணைத்துக்கொண்டு
காதோடு ரகசியம் பேசி
விழிகளில் கவிதைகள் சுமந்து
அங்குலம் அங்குலமாக அளந்த
சாலையல்லவா இது.....

வாகனத்தின் பேரிரைச்சல்
என்னை நினைவுக்கு அழைத்து வருகிறது

அதே இடத்தில் மறுபடியும் உன்னை சந்திக்கிறேன்
என்னைப் பார்த்துக்கொண்டு நிற்கிறாய்
கண்களில் ஆச்சர்யம் சுமந்து

பேசலாமா யோசனையோடு
பார்க்கிறேன் நான்
பேச மாட்டாயா என்கிறது
உன் பார்வை
உனை நோக்கி
நடக்க ஆரம்பித்தேன்

”ஹாய்...” என்றேன்

”ஹாய்” என்றாய்

”எப்படி இருக்க??? ”

”நல்லா இருக்கேன்... நீ?”

”ம்ம்ம் இருக்கேன்.. ”

”ஒரு கப் காபி?” என்றேன்

”கண்டிப்பா.... ரொம்ப நாள் ஆச்சு...” என்றாள்

வழக்கமாய் செல்லும் கடைக்குச் சென்று வழக்கமாய் அமரும் இடத்தில் அமர்ந்தோம்

”என்ன பண்ணிக்கிட்டு இருக்க? ” என்றாய்

”அதே கம்பெனி தான்...... நீ?”

”போன வாரம் தான் சென்னைக்கு மாற்றலாகி வந்தேன்... ” என்றாய்

“இந்தப் பக்கம் ?”

“கொஞ்சம் பொழுது போகல, கொஞ்சம் மனசும் சரியில்ல... இந்த சாலை ரொம்ப பிடிச்ச சாலை.. அதான் ஒரு சின்ன வாக் போகலாம்னு... நீ எங்க இந்தப் பக்கம்??” கேட்டாய்....

”நான் எப்போ ப்ரீயா இருந்தாலும் இந்த சாலையில ஒரு வாக் போவேன்... நாம கைகோர்த்துக்கிட்டு நடந்தது நினைவுக்கு வரும், கொஞ்சம் மனசுக்கு இதமா இருக்கும்... ”

”ம்ம்ம்ம்” ஆமோதித்தாய் அழகாக

அமைதியார் காபி அருந்தினோம்.. அளவாய் பேசினோம்... நலம் விசாரிப்புகள் முடிந்தன...

“சரி கிளம்பலாமா?” என்றேன்....

“ ம்ம்ம் போகலாம்... என்றாய்... சற்று நடந்தவள் திரும்பி கேட்டாய்..... உன் அலைப்பேசி எண் அதே தானா இல்லை மாத்திட்டியா?”

“இல்ல மாத்தல... அதே எண் தான் நீ எப்போவாச்சும் கூப்பிட்டா என்ன பண்றதுன்னு நினைச்சு மாத்தாம வச்சிருக்கேன்... உன்னோட எண்?”

“ ம்ம்ம்ம் நானும் அதுக்காக தான் மாத்தாம வச்சிருக்கேன்” என்றாய்.....

“எப்படி வந்த? வண்டியிலா??? எப்படி இருக்கிறது அந்த ஆக்டிவா?

“இல்ல ஆட்டோல? நீ?

“என்னோட வண்டியில்... ஆட்டோ பிடிக்கவா உனக்கு? எந்த ஏரியா?”

“பெசண்ட் நகர்? நீ?”

“அதே அடையார் வீட்டுல தான் இருக்கேன்”

“ இரு ஆட்டோ பிடிக்கிறேன்...” என்றேன்....

“இல்ல... உனக்கெதும் வேலை இருக்கா? இல்லை வீட்டுக்கு தான் போறியா?

“வீட்டுக்கு தான் போறேன்.....”

“என்னை உன் பைக்கில் கூட்டிக்கிட்டு போய் விட்டுடேன்”

“ம்ம்ம்ம்” தலையாட்டினேன்....


நிசப்தம் எங்களோடு சேர்ந்து வந்து கொண்டிருந்தது... சிறிது நேரத்தில் என் தோளில் சாய்ந்து கொண்டு விசும்பத் தொடங்கினாய்.. நான் என் கண்ணீரை துடைத்துக் கொண்டு ஆதரவாய் உன் கரம் பற்றிக் கொண்டேன்...