Sunday, December 07, 2008

மழை

ஒவ்வொரு வருடமும்
முந்தைய வருடங்களை
நினைத்துப் பார்த்து
ஏக்கப் பெருமூச்சோடு
நிறுத்திக்கொண்டோம்...

முந்தைய வருடங்களுக்கும்
சேர்த்து மொத்தமாய்
இந்த வருடம்
கொட்டித் தீர்த்தது
மழை

**********

சுவற்றில் வரைந்து வைத்த ஸ்டம்பு
ரன் அவுட்டுக்கு வைத்திருந்த கற்கள்
எங்களின் விளையாட்டு கால் தடங்கள்
என அனைத்தையும்
மொத்தமாக அள்ளிக்கொண்டு
போனது இன்று அடித்த
புயல்....

**********

பலவருட கணக்குகளை
முடித்துப் போட்டது போல்
பெய்த மழையில்
சேர்ந்து போனது
எங்கள் வீட்டு வெள்ளாடும், கோழியும்....

Monday, November 17, 2008

வண்ணங்களாய்

என் நாட்குறிப்பின்
வண்ணங்கள் சிறகு முளைத்து
சன்னலின் வழியே
காற்றில் கலந்து
வானவில்லாய் விரிந்தது

என் தூரிகையில்
அதை எடுத்து
மீண்டும் என் படபடக்கும்
நாட்குறிப்பில்
கரைத்துவிட முயற்சிக்கிறேன்

கைகளுக்குள் சிக்காமல்
உயரே சென்று
நட்சத்திரங்களாய்
ஒளிர்கிறது
என் எண்ணங்களும், வண்ணங்களும்.....

Wednesday, October 29, 2008

மழை

நீ இல்லாத
வெறுமையின் சூழலை
சூசகமாய் உணர்த்திச் சென்றது
அன்றைய மாலை நேரத்து
மழை...

**********

நாம் கைகோர்த்து
நடந்து சென்ற
மழைக்கால மாலைப் பொழுதை
நினைவு படுத்திச் செல்கிறது
இந்த மாலை நேரத்து
மழை...

**********

மாலை நேரம்
மழைச் சாரல்
சன்னலோரம்
தேநீர் கோப்பை
துணைக்கு.....
உன் நினைவுகள்

***********

என் மழைக்கால
மாலை நேரத்து
மிதிவண்டிப் பயணங்கள்
எல்லாம் முற்றுப் பெறுவது
உன் வீட்டு எதிரில் தான்


************

நீ இல்லாத
தனிமைத் துயரை
மேலும் அதிகரித்தது
இந்தப் பாழாய்ப் போன
மழை வந்து கொட்டிய
உன் வாசம்.....

Tuesday, October 21, 2008

மீண்டும் சந்திப்போம்....

மீண்டும் சந்திப்போம்....

நம் நட்பு
காத்துக்கொண்டிருக்கிறது
நமக்காக
உன்னுடைய இந்த
வார்த்தைகளை
நினைத்து...

Wednesday, October 15, 2008

ரஜினி?????

ரஜினிகாந்த் நேற்று விடுத்துள்ள ஒரு அறிக்கையில் “தனது பெயரில் கட்சி துவக்கினாலோ தனது படத்தை பயன்படுத்தினாலோ சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் “ என்று தெரிவித்துள்ளார். இதுதான் ஊடகத்தின் சமீபத்திய முக்கிய செய்தி, எந்த செய்தி தொ.காட்சியை திருப்பினாலும் இதுதான் செய்தி, எந்த ஒரு செய்தி இணையத்தை புரட்டினாலும் இதுதான் முக்கிய செய்தி

இந்த முக்கியத்துவத்துக்கு ரஜினி தகுதியானவர்தானா என்ற கேள்வியை நாம் ஒருமுறை நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும். அண்ணாமலை படத்திலிருந்து இந்தப் பிரச்சனை ஆரம்பித்தது என்று நினைக்கிறேன். ஒவ்வொரு படத்தின் வெளியீடின் போது இப்படி ரசிகர்களை உசுப்பும்படி ஏதாவது சொல்வது, பிறகு அதை அப்படியே மறந்துவிடுவது. மீண்டும் அடுத்த படத்தின் போது அறிக்கைகள். இதுதான் அவரின் வழக்கமே. தன்னுடைய படத்தின் வியாபார பயன்பாட்டிற்காகவே ரஜினிகாந்த் இதுபோன்ற அறிக்கைகளை விடுகிறார் என்று பல தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் அடிக்கடி வந்த வண்ணம் தான் உள்ளது. இதற்கு பதில் சொல்ல அவர் தயாராக இல்லை. ஆனால் தற்போது வெளிவந்திருக்கும் குசேலன் படத்தின் ஒரு காட்சியில், நீங்கள் திரைப்படத்தில் இப்படி அரசியல் சாயம் பூசப்பட்ட, அல்லது பூடகமாக சில வசனங்களைப் பேசுகிறீர்களே என்று கேட்கப்படும் கேள்விக்கு, படத்தின் வசனகர்த்தா எழுதிக் கொடுப்பதை நான் பேசுகிறேன், இதை என்னுடைய வார்த்தைகளாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று வரும். இதை ரஜினி சொல்வதாக ஏற்றுக்கொள்ளலாமா?


1996ல் நடந்த தேர்தலில் ரஜினி நடந்துகொண்ட விதம் அவர் பேசிய பேச்சு, ஜெயலலிதாவிற்கு பாதகமாக அமைந்தது. அவருக்கு அப்போதிருந்த செல்வாக்கு வேறு. ஆனால் 2002-03ம் ஆண்டுகளில் நடந்த காவிரிப்பிரச்சனையில் அவரின் நிலைப்பாடு, நெய்வேலியில் நடந்த போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருந்தது, சென்னையில் தனியாக உண்ணாவிரதம் இருந்தது, விமான நிலையத்தில் இருந்து அவர் கொடுத்த பேட்டி, அவரின் மீது பாசம் வைத்திருந்த பல ரசிகர்களை அவருக்கு எதிராக செயல்பட வைத்தது, அப்போது என் விடுதி தோழர்கள் பலர் தன்னுடைய அறையில் ஒட்டிவைத்திருந்த ரஜினி படத்தை கிழித்தெரிந்த நிகழ்ச்சிகளும் நடந்தன. தன்னுடைய சுயலாபத்திற்காக, வீண் வசனங்கள் பேசி, ரசிகர்களையும், மக்களையும் குழப்புவதே அவரின் வேலை.

ஒரு மனநோயாளியின் பேச்சுக்கு நாம் எந்த அளவிற்கு மதிப்பு கொடுப்போமா அந்த அளவிற்கு தான் நான் ரஜினி பேசும் பேச்சுக்கு மரியாதை கொடுப்பேன். இந்த முறை விடுத்துள்ள அறிக்கையில் கூட தெளிவாக எந்த முடிவும் எடுக்காமல். நான் வருவேன் ஆனா வரமாட்டேன் என்று குழப்பவாதியாகவே தன்னை அடையாளப்படுத்தியிருக்கிறார். தன்னுடைய திரைப்படங்களிலும், அவர் அவ்வப்போது கொடுக்கும் பேட்டிகளிலும் அவரின் இந்தக் குழப்பத்தை தெளிவாகக் காணலாம்.

அவரின் அரசியல் பார்வையும், நோக்கும் குறுகிய எண்ணம் கொண்டது, தன்னைப் பாதுகாத்துக்கொள்ள மட்டுமே அரசியலை அவர் பயன்படுத்துகிறார். விஜயகாந்த் கட்சிக்காரர்களால் வடிவேலுவின் வீடு தாக்கப்பட்ட போது எப்படி வடிவேலு தன்னுடைய சொந்த காரணங்களுக்காக அரசியலுக்கு வருவேன் என்றாரோ, அதைப் போன்றது தான் ரஜினியின் நிலைப்பாடும், முன்பு அதிமுக ஆட்சியில்(91-96) இவர் தமிழகத்தில் குண்டுவெடிப்பு கலாச்சாரம் பெருகிவிட்டது என்று பேச, இதனால் இவருக்கு பல தொல்லைகள் ஏற்பட, உடனே அந்தத் தேர்தலில் அதிமுகவிற்கு எதிராக குரல் கொடுத்தார், அடுத்து திமுக ஆட்சி முடிந்து அதிமுக ஆட்சி வந்ததும் தைரியலட்சுமி என்று பாராட்டி, ஜெயலலிதாவை அவர் வீடு வரை சென்று பாராட்டினார். சுயலாப அரசியலின் உச்சகட்டமாக இவரின் பாபா பட ரிலீசின் போது பாமகவினரால் ஏற்பட்ட தொல்லைகளுக்காக அப்போது நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர்கள் போட்டியிட்ட ஆறு தொகுதிகளில் மட்டும் அவர்களை எதிர்த்து தன்னுடைய ரசிகர்கள் வேலை பார்ப்பார்கள் என்று அறிவித்தார். கடைசியில் இவரின் மூக்கு உடைபட்டது தான் மிச்சம், அந்த ஆறு தொகுதிகளிலும் பாமக அமோக வெற்றி பெற்றது. தன்னுடைய அரசியல் செல்வாக்கை அத்தோடு அவர் உணர்ந்து அமைதி காத்திருக்கலாம். இதுதான் இவரின் செல்வக்கு என்று இவரது ரசிகர்கள் உணர்ந்து கொண்டிருக்க வேண்டும், அதை விட்டுவிட்டு தலைவா வா, தலைமையேற்க வா என்று சுவரொட்டி ஒட்டியே காலம் தள்ளுகின்றனர்.

தலைமைக்கு சரியான ஆள் அவரல்ல என்று அவர் உணர்ந்து கொண்டார் போலும் அதனால் தான் அமைதியாக இருக்கிறார். ரசிகர்கள் எப்போது உணர்ந்து கொள்ளப் போகின்றனரோ???

Monday, October 13, 2008

இன்றோடு இரண்டு வருடம் ஆகிறது...

விளையாட்டாக வலைப்பக்கம் ஆரம்பித்து இன்றோடு இரண்டு வருடங்கள் முடிந்து மூன்றாவது வருடம் ஆரம்பிக்கின்றது. ஒரு வலைப்பக்கத்தை இரண்டு வருடம் தொடர்வதே பெருய விஷயமாக கருதுகின்றேன். ஏனெனில் நான் கொஞ்சம் சோம்பேறி, என்ன செய்ய???? மற்ற வலைப்பதிவர்களைப் பார்க்கும் போது கொஞ்சம் பொறாமையாக இருக்கும். எப்படி இவர்களால் இவ்வளவு எழுத முடிகிறது என்று. என்னை பிரமிக்கச் செய்த சில வலைப்பதிவர்கள், பொன்ஸ், நந்தா, போன்றவர்கள். என்னுடைய கருத்துகள் பல அப்படியே நந்தாவின் கருத்துக்களோடு ஒத்துப்போகும். என்னை ஊக்கப்படுத்திய என்னுடைய நண்பர்கள், குறிப்பாக ஜெயக்குமார், நிலாரசிகன், விழியன், அண்ணன் N. சுரேஷ் போன்றோருக்கு என்னுடைய நன்றிகள். என்னுடைய எண்ணங்களை கட்டுரையாக எழுத பலமுறை நினைப்பதுண்டு, நேரத்தை சரியாக பயன்படுத்த தெரியாமல் பிறகு பார்க்கலாம், நாளை எழுதலாம் என்று நினைத்தே தள்ளிப்போட்டு பிறகு, நான் எழுத நினைத்த தலைப்போ அல்லது கருத்தோ பழையதாகி விடும்போது, என் எண்ணங்களும் அதோடு சேர்ந்து மடிந்து போகின்றன. இனிமேல் நிறைய பயனுள்ள விஷயங்கள் எழுதவேண்டும். இது தான் நான் எடுத்திருக்கும் இப்போதைய முடிவு. பார்க்கலாம் இதை எப்படி செயல்படுத்துகிறேன் என்று.

Wednesday, October 08, 2008

நீ - 4

நீ பூ கட்ட
போகிறேன் என்றாய்
நான் அடுக்கிக் கொடுக்கிறேன்
என்றமர்ந்தேன்
காதல் மாலை கட்டி
நமக்குச் சூடியது

பைக் பயணங்கள்

நீ இல்லாத

என் பைக் பயணங்களில்

வண்டியின்

பின் இருக்கையில்

அழகாய் வந்து

அமர்ந்து கொள்கிறது

நம் காதல்

Monday, August 25, 2008

ஒலிம்பிக்ஸ் – இந்தியாவின் நிலை

முன் குறிப்பு - இந்த பதிவி எழுதியது ஒலிம்பிக்ஸ் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி... ஆனா இப்போ தான் போட நேரம் கிடச்சுது....


ஒவ்வொரு ஒலிம்பிக்ஸ் போட்டின் போதும் இந்தியாவின் பதக்கம் வெல்லும் வாய்ப்புகள் பற்றி ஒலிம்பிக்ஸ் சங்க தலைவர், முன்னாள் விளையாட்டு வீரர்கள், ஊடகங்கள் என அனைத்து தரப்பினரும் தங்கள் யூகங்களை வெளியிடுவதும், வழக்கம் போல இந்திய வீரர்கள் அங்கே சொத்தப்புவதும், ஒரு வீரர் மட்டும் பதக்கம் வெல்வதும், பின்னர் அடுத்த 4 வருடங்களுக்கு அதை மறந்துவிடுவதும் வாடிக்கையாகிவிட்டது. இந்த ஒலிம்பிக்ஸ் பற்றியும், இந்திய குறைந்த பட்சம் 2 அல்லது மூன்று தங்கமாவது வெல்வதற்கு என்ன செய்யலாம் என்பது பற்றியும் கொஞ்சம் பார்க்கலாம்.


பீஜிங் ௨௦௦௮


2008 ம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பை பெற்றதிலிருந்து, சீனர்கள் இதை தங்களின் வலிமையைப் பறைசாற்றும் ஒரு நிகழ்வாக எடுத்துச்செல்ல முடிவெடுத்தனர். ஒவ்வொரு விஷயத்தையும் மிகச்சிரத்தையுடன் செய்து முடித்தனர். எந்த முறையும் இல்லாத அளவிற்கு இந்தமுறை மிகப்பிரம்மாண்டமாக செய்தனர். இந்த முறை ஆன செலவு 43 பில்லியன் டாலர்கள், இதற்கு முன்பு 2004 ல் நடந்த ஏதென்ஸ் போட்டிக்கு ஆன செலவு 15 பில்லியன் டாலர்கள் மட்டுமே. கிட்டதட்ட மூன்று மடங்கு அதிகமான பணத்தைக் கொட்டி மிகப்பிரமாண்டமாக நடத்தப்பட்டது இந்த ஒலிம்பிக்ஸ், மொத்தம் 32 அரங்குகள், பறவைக் கூடு(Birds Nest) என்று அழைக்கப்பட்ட பிரம்மாண்ட அரங்கில் தான் துவக்க விழா நடைபெற்றது. இந்த அரங்கம் 36 கிலோமீட்டர் நீளமும், 45000 டன், எடையுள்ள இரும்பைக்கொண்டு செய்யப்பட்டது. உலகமே வியக்கும் வண்ணம் கோலாகலமாக தங்களின் பாரம்பரியத்தைப் உலகிற்கு பறைசாற்றினர். 90,000 பார்வையாளர்கள், 80 நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் நடந்தது. இதன் மூலன் சீன அரசு உலகிற்கு தெரிவிக்க முற்படுவதென்ன?????


நாங்கள் சாதாரணமானவர்கள் அல்ல....


சீன அரசு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த உரிமைக் கோரியதர்கு முக்கிய காரணம் தாங்கள் சாதாரணமானவர்காள் இல்லை என்று உலகிற்கு பறைசாற்றவே. உலகின் மிகப்பெரிய விளையாட்டுத்திருவிழா மூலம் தங்களின் பலத்தை, அரசியல், பொருளாதார பலத்தை மேற்கு நாடுகளுக்கு காண்பிக்கும் ஒரு வாய்ப்பாக இதைப் பயன்படுத்தியது. சென்ற முறை ஏதென்ஸில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் 32 தங்கப்பதக்கங்களை வென்று அமெரிக்காவிற்கு அடுத்த நிலையில் இருந்தது சீனா. அமெரிக்கா 36 தங்கங்களை வென்றது. எப்போதும் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவை இந்தமுறை சீனா கீழே தள்ளிவிடும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. 30 வருங்களுக்கு முன்பு இருந்த சீனாவையும், இந்தியாவையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தியா பல அடி தூரம் முன்னே இருந்தது, ஆனால் இந்த 30 வருடங்களில் சீனாவின் வளர்ச்சி அபாரமானது, இந்தப் பிராந்தியத்தில் தன்னுடைய ஆளுமையை நிலைநாட்ட சீனா முயன்று வெற்றியும் கண்டிருக்கிறது.


இந்தியாவின் நிலை ஒரு சிறிய ஒப்பீடு


இந்தமுறை வெறும் 56 வீரர்களைக் கொண்ட குழு மட்டுமே இந்தியாவிலிருந்து சென்றிருக்கிறது. சீனக்குழுவின் எண்ணிக்கை 600க்கும் மேல். மொத்தம் 302 பிரிவுகளில் போட்டி நடைபெறுகிறது, இந்தியக்குழு 10 பிரிவுகளில் கூட விளையாடவில்லை. இதில் அரசை தவறு சொல்வதா? இல்லை பொதுமக்களை குறை சொல்வதா? இது வரை 8 ஒலிம்பிக்ஸ் தங்கப் பதக்கத்தை வென்றெடுத்த இந்திய ஹாக்கி அணி இந்த முறை ஒலிம்பிக்ஸ்க்கு தகுதி பெறவே இல்லை. கடந்த மூன்று ஒலிம்பிக்ஸ்லில் இந்திய ஹாக்கி அணியின் ஆட்டம் சொதப்பலாகவே அமைந்திருந்தது. வீரர்களையும் குறைசொல்ல முடியாது, சரியான ஆடுகளங்களோ, பயிற்சிக்களங்களோ நம் நாட்டில் கிடையாது, வெளிநாடு சென்று பயிற்சி எடுக்க நம் வீரர்களுக்கு வசதியும் இல்லை, ஸ்பான்சர்சும் கிடைப்பதில்லை. கிரிக்கெட்டுக்கு கிடைக்கும் வரவேற்பு மற்ற விளையாட்டுகளுக்கு இல்லை, கால்பந்தை எடுத்துக்கொண்டால் நாம் 130 நாடுகளுக்கு பின்னால் இருக்கிறோம். நாம் இன்னும் நிறைய வளர வேண்டி இருக்கிறது. நாம் விளையாட்டை சிரத்தையுடன் எடுத்துகொள்வதே இல்லை. தமிழகத்தில் குற்றாலீஸ்வரன் என்ற நீச்சல் வீரர் இருந்தார், பல சாதனைகள் புரிந்த அவர் இப்போது இருக்குமிடம் பலருக்கு தெரியாது, ஒரு பத்திரிக்கை சமீபத்தில் அவரைப் பேட்டி கண்ட போது, நீச்சலை வைத்து வாழ்க்கையை ஓட்ட முடியாது அதனால் நீச்சலுக்கு குட்பை சொல்லிவிட்டேன், படிக்கின்றேன் என்கிறார். இங்கு விளையாட்டை விட படிப்பும், வேலை வாய்ப்பும் முக்கியமாக கருதப்படுகின்றது. அரசு விளையாட்டில் சாதனை புரிந்தவர்களை மதிப்பதே இல்லை. ஒவ்வொரு விளையாட்டிற்கும் ஸ்பான்ஸர்ஸ் மிகவும் முக்கியம், அப்படி இல்லாதபோது அரசு உதவலாம். ஆனால் இங்கு அப்படி நடப்பதே இல்லை.

இங்கு விளையாட்டிற்கு செலவிடப்படும் தொகை மிகவும் குறைவு. ஒவ்வொரு விளையாட்டிலும் அரசியல் கலக்கிறது. இன்று அரசியல் கலக்காத விளையாட்டே இல்லை. கிரிக்கெட் தவிர மற்ற விளையாட்டு வீரர்கள் இரண்டாம் தர நிலையில் தான் உள்ளனர்.


தவறு எங்கே நிகழ்கிறது?


ஒரு சரியான விளையாட்டு உள்கட்டமைப்பு எந்தப் பள்ளிகளிலும் இல்லை. செம்மண் தரையில் தான் இங்கு பல கால்பந்தாட்ட பயிற்சிகளும், ஹாக்கி பயிற்சிகளும் நடைபெறுகின்றன, இயற்கையான புல்தரைகள் கால்பந்தாட்டத்திற்கும், செயற்கைப் புல்தரைகள் ஹாக்கிக்கும் வேண்டும், இங்கு உலகத்தரத்தில் எந்த மைதானமும் கிடையாது. விளையாட்டு அரங்கங்கள் பொது நிகழ்ச்சிகளுக்காகவும், கலை நிகழ்ச்சிகளுக்காகவும் ஒதுக்கப்படுகின்றன, விளையாட்டு மேம்பாட்டிற்க்காக ஒதுக்கப்படும் பணம் இடையில் இருக்கும் அதிகாரிகளுக்கு செலவு செய்யப்பட்டு, வீரர்களுக்கு சொற்பமே வந்து சேர்கிறது. துப்பாக்கி சுடும் பயிற்சியில் இருக்கும் வீரர்களுக்கு போதிய அளவு குண்டுகள் கிடைப்பதில்லை, ராணுவத்தில் இருக்கும் ராத்தோருக்கு தினமும் 250 குண்டுகள் தான் கிடைக்கின்றனவாம்.

பேஸ்பால், கூடைப்பந்து, சைக்லிங்(Cycling), பீச் வாலிபால்(Beach Volleyball), டைவிங்(Diving), பென்சிங்(Fencing), ஜிம்னாஸ்டிக்ஸ்(Gymnastics), டிராம்போலின்(Trampoline), ஹாண்ட்பால்(Handball), என இன்னும் பல விளையாட்டுக்களில் இந்தியா பங்கேற்பதே இல்லை, உலக மக்கள்தொகையில் இரண்டாவது இடம், உலகின் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்று, இந்தப் பிராந்தியத்தில் சீனாவிற்கு சவால் விடும் பொருளாதாரம், ஆனால் விளையாட்டில் மட்டும் பூஜ்ஜியம், செக்குடியரசு, ருமேனியா, துருக்கி போன்ற நாடுகள் தங்கம் வெல்லும்போது நாம் மட்டும் பதக்கப்பட்டியலில் பெயர் கிடைக்க போராடுவோம்.

இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் பல ஆண்டுகளாக சுரேஷ் கல்மாடி தான் தலைவர் ஆனால், குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் இது வரை இல்லை, சில மாதங்களுக்கு முன் இந்தியாவின் ஒலிம்பிக் நிலை பற்றி புத்தகம் எழுதிய ஆசிரியர் இந்திய ஒலிம்பிக் சங்கத்திடம் சென்ற முறை துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளிப்பத்தகம் பெற்ற ராத்தோரின் நிழற்படம் கேட்டபோது தங்களிடம் இல்லை என்றார்களாம், அந்த லட்சணத்தில் இருக்கிறது ஒலிம்பிக் சங்கம்.

நம் வீரர்களிடம் சரியான பயிற்சி இல்லை என்பதே முழுமுதற் காரணம். தேர்வுக்கு சரியாக தயாராகவிட்டால் பதட்டம் ஏற்படும், அந்தப் பதட்டமே தோல்விக்கு காரணம். இறுதிச்சுற்றுக்குக் கூட தகுதி பெறாமல் துப்பாக்கி சுடும் போட்டியிலிருந்து வெளியேறியது இந்திய அணி, குத்துச்சண்டை மற்றும் ஜீடோவில் முதல் சுற்றிலேயே தோல்வி. சரியான பயிற்சிக்களங்கள் தான் வீரர்களுக்கு முதல் தேவை. கூடவே அவர்களுக்கு பணமும் தேவை. வேலையோ அல்லது ஊக்கத்தொகையோ தான் அவர்கள் மேலும் உற்சாகத்துடன் உழைக்க உதவும்.

பள்ளிகளில் இருந்தே மாற்றம் தேவைப்படுகிறது. வெறும் கல்வி மட்டும் போதாது, விளையாட்டும் அவசியம் என்று பெற்றோர்கள் உணர வேண்டும், பெரிய நிறுவனங்கள் விளையாட்டு வீரர்களுக்கு ஸ்பான்ஸர் செய்ய முன்வரவேண்டும். அரசியல்வாதிகள் கையிலிருந்து முன்னாள் விளையாட்டு வீரர்களிடம் விளையாட்டு ஆணையங்கள் செல்ல வேண்டும் அப்போதுதான் கொஞ்சமாவது மாற்றத்தை எதிர்பார்க்கலாம், இல்லையெனில் ஏக்கத்துடன் பதக்கப்பட்டியலை பார்க்கவேண்டியது தான்.

Friday, July 11, 2008

அன்புத்தோழி 8ம் வரிசை

என்னை வேரோடு
பிடுங்கி சிலுவையில்
அறைகிறது
நம் சின்னச் சின்ன
சண்டைகளுக்குப் பின்
நீடிக்கும்
நீண்ட மௌனம்

Saturday, June 28, 2008

மதமில்லாத ஜீவன்

26 சூன் 2008 "தி இந்து" நாளிதளில் வந்த செய்தி.... உங்களுக்காக..... இது ஆங்கில வடிவத்தின் மொழியாக்கம்....


மதமில்லாத ஜீவன்



மதமில்லாத ஜீவன், இந்த 58 வார்த்தைகள் கொண்ட பாடம் தான் கேரளாவின் சமீபத்தைய சர்ச்சை.... அதனுடைய மொழியாக்கம் இங்கே......

"தங்கள் குழந்தையுடன் வந்த பெற்றோரை இருக்கையில் அமரச்சொன்ன பின், தலைமையாசிரியர் விண்ணப்பப்படிவத்தை நிரப்பத்தொடங்கினார்....

"மகனே உன்னுடைய பெயர் என்ன?"

"ஜீவன்"

"நல்ல பெயர், அப்பாவின் பெயர் என்ன?"

"அன்வர் ரஷீத்"

"அம்மாவின் பெயர்?"

"லட்சுமி தேவி"

தன்னுடைய தலையை உயர்த்தி தலைமைஆசிரியர் பெற்றோர்களைப் பார்த்துக் கேட்டார்

"என்ன மதமென்று எழுத?"

" ஒன்றும் இல்லை, மதம் இல்லையென்று எழுதுங்கள்"

"சாதி?"

"அதற்க்கும் அப்படியே எழுதுங்கள்"

தலைமைஆசிரியர் நாற்காலியில் சாய்ந்து கொண்டு கேட்டார்:

"இவன் வளர்ந்தவுடன் இவனுக்கு மதம் தேவைபடுவதாக இவன் உணர்ந்தால் என்ன செய்வது?"

"அப்படி அவன் உணர்ந்தால் அவனுக்கு தேவையான மதத்தை அவனே தேர்ந்தெடுக்கட்டும்...."



இப்படி பெற்றோர்கள் இருந்தால் கண்டிப்பாக சாதிகள் இல்லாத, மதங்கள் இல்லாத இந்தியாவைப் பார்க்க முடியும்... ஆனால் கேரளாவில் எல்லா விஷயங்களிலும் அரசியல் ஆதாயம் தேடும் அரசியல்வாதிகள் குறிப்பாக பா.ஜ.கவினர் பாடங்களில் கம்யூனிசக் கருத்துகள் புகுத்தப்படுவதாகக் கூறி மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர்....

Wednesday, February 13, 2008

நீ - 3





உனக்காக
காத்திருக்கும்
ஒவ்வொரு வினாடியும்
பூக்களாக மாறி
என் மீது விழுகின்றன
தேவதை உனக்காக
காத்திருப்பதற்கு
ஆசிர்வதித்தபடி

*****

உன் பொண்டாட்டி
என்று முதல்முறை
கையொப்பமிட்ட
உன் மின்னஞ்சலை
மீண்டும் மீண்டும் பார்க்கிறேன்
ஒரே ஒரு வருத்தம் தான் எனக்கு
இதை எழுதும் போது
பொங்கிய வெட்கம் கலந்த
சிரிப்பை பார்க்கமுடியவில்லையே...

*****

உன்னைப் பற்றி
எழுதலாம் என்று
நினைத்து
வார்த்தைகள் தேடுகின்றேன்...
அனைத்துமே உன்னைச்
சிறுமைப் படுத்துகின்றன
புள்ளியோடு முடிந்து போகிறது
கவிதை...

Friday, February 01, 2008

நீ - 2



உனக்காக சேமிக்கப்பட்ட‌
முத்தங்கள் எல்லாம்
சண்டை பிடிக்கின்றன என்னிடம்
எப்போது உன்
காதலியிடம்
எங்களைச் சேர்த்து
முக்திபெறச்
செய்வாய் என்று

*******

உனக்காக எனது
முத்தங்கள் அளவுக்கதிகமாக‌
உற்பத்தி செய்யப்படுகின்றது
சேமிக்கவும் வழி இல்லாமல்
பிறருக்கு கொடுக்கவும் முடியாமல்
தேங்கிக் கிடக்கிறது என்னிடம்
சீக்கிரம் வந்து பெற்றுக்கொள்

******

இந்த முத்தங்களின்
இம்சை தாங்க முடியவில்லை
ம‌ட‌லில் அனுப்புவ‌தால்
என்னிட‌ம் கோப‌ம் கொள்கின்ற‌ன‌
தேவ‌தை உன்னைக் க‌ண்டு
நேரில் கொடுத்தால் தான்
அவை பிறவிப்பயனை
அடையுமாம்....

Saturday, January 26, 2008

சிறகைத் தேடி......

வெறுமையின் கைகளில்
சிக்கிய மனதின்
இறக்கைகள் அறுபடுகின்றது

அறுபட்ட மனதின்
குருதியில் தோய்ந்த
நினைவுகளால்
நீண்டு போகிறது இரவு

இருளின் நீண்ட
கருமையில் இறக்கைகள்
தேடி அலைந்து மீண்டும்
வெறுமையின் கைகளுக்கே
பலியானேன்

நினைவுகளின் சன்னலின்
வழியே தாவிக்குதித்து
பறக்க முற்படுகின்றேன்
எண்ணங்களின் வழியே
வளர்ந்து விரிகிறது
சிறகுகள்.....

Sunday, January 20, 2008

மயிலிறகாய் ஒரு காதல் - இது விமர்சனம் அல்ல

நண்பன் நிலவனிடமிருந்து குறுஞ்செய்தி அவருடைய இரண்டாவது புத்தகம் மயிலிறகாய் ஒரு காதல் இந்த புத்தகக் கண்காட்சியில் இருக்கும் என்று, அவருடைய முதல் புத்தகம் அருமையாக இருக்கும், அந்த எதிர்பார்ப்போடு, புத்தகக் கண்காட்சியில் நுழைந்தவுடன் அவருடைய புத்தகத்தை தான் முதலில் வாங்கினேன்... வீட்டிற்கு வந்ததும் முதலில் அவருடைய புத்தகத்தைப் படித்தேன்.... அருமை... கீழே வைக்கவே தோன்றவில்லை... முழுமூச்சாக புத்தகத்தைப் படித்துவிட்டு தான் நகர்ந்தேன். அதன் பாதிப்புகள் சில நாட்கள் இருந்தன... சில கவிதைகள் மனதை விட்டு அகலவே இல்லை.....

படிக்க ஆரம்பிக்கும் போதே ”உயிரிலே கலந்தவன்” னில் ஆரம்பித்தது நிலவனின் அரசாங்கம்....

“தேவதையை பார்க்க வேண்டும்
என்கிற என் சிறிய
வயது ஆசையை
பூர்த்தி செய்தவள் நீ.
ஆனாலும் உன்னிடம்
ஒன்று கேட்க வேண்டும்..
“நீ என்ன உயிர்
வாங்கும் தேவதையா?”

இதைப் படித்தவுடன் சட்டென்று என்னுடைய உயிர் வாங்கும் தேவதை தான் ஞாபகத்திற்கு வந்தாள்...

இந்தக் கவிதைத் தொகுப்பை நானும் என்னுடைய தோழியும் சேர்ந்து படித்துக் கொண்டிருந்தபோது... ஒவ்வொரு கவிதைக்கும் என்னுடைய தோழியின் முகத்தில் மலர்ந்த புன்னகையும், குறுநகையும் தான் இவனின் கவிதைக்கு அழகான பரிசுகள்... படிக்கும் ஒவ்வொரு கவிதையும் வாழ்வோடு பிணைந்த கவிதைகள்...

மழைப்பெண் எனக்கு மிகவும் பிடித்திருந்தது...

பிரிவு -1 என்கிற கவிதையின் வலி பிரிவை சந்தித்தவ்ர்களுக்கு மட்டுமே புரியும்... நாம் அனைவரும் காதலை வாழ்க்கையில் சந்திக்காமல் இருந்திருக்க மாட்டோம், அதே போல் பிரிவையும்... நம் அனைவருக்கும் இது மிகவும் பிடிக்கும், படிக்கும் போது கொஞ்சம் மனதும் வலிக்கும்....


கன்னம் சிவக்க
சிவக்க முத்தமிட்டுவிட்டு
போதுமாடா
என்பேன்..
அழகானதொரு வெட்கத்தினால்
முகம் திருப்பிக்கொள்வாய்.
ஆண்வெட்கம் அழகில்லை
என்று யார் சொன்னது?


இதைப் படித்தவுடன் முன்பொருமுறை முத்ததினால் நனைந்த என்னுடைய கன்னங்களைக் கொஞ்சம் தடவிப் பார்த்துக்கொண்டேன்...

காதலிக்கும் அனைவருக்கும் தவிப்பு சொந்தம்... தவிர்த்தலும், தவித்தலும் காதலின் இலக்கணம்... இவை இல்லையென்றால் காதல் இல்லை... இதை அழகாக உணர்த்தியுள்ளார் இந்தக் கவிதையில்....


தவிர்தலுக்கென்றே ஒரு
பார்வை வைத்திருக்கிறாய்
நீ
தவிப்பதற்கென்றே ஒரு
இதயம் வைத்திருக்கிறேன்
நான்


நட்பும் காதலும் கவிதையின் சொல்லாடல் மிக அருமை.... நல்ல வேளை இந்த நிலைமை எனக்கு இன்னும் வரவில்லை... என்னுடைய தோழிகளுக்கு கிடைத்த கணவர்கள் நட்பை புரிந்துகொண்டவர்கள்... காதலையும் நட்பையும் பிரித்துப் பார்க்கத் தெரிந்தவர்கள்....

”உங்களுக்குள் என்ன?”
என்று
உயிர் கொடுத்து காதலை
சேர்த்து வைக்கத் துடிப்பவன்
நண்பன்.

நண்பனை கைகாட்டி
”உங்களுக்குள் என்ன?”
என்று
உயிர் பறிப்பவன்
காதலன்.


காதலை ரசித்து, சுவைத்து, சுவாசித்து வரும் நிலாரசிகனைக் கேட்டால் இன்னும் காதலி கிடைக்கவில்லை என்கிறார்.... விரைவில் அவருக்கு காதலி கிட்டட்டும்..... இன்னும் நிறைய அவரிடமிருந்து ஒரு தோழனாக எதிர்பார்க்கிறேன்... இன்னும் பல தொகுப்புகள் வர வேண்டும்.. எங்களின் நிலவனை தமிழ் மக்கள் கொண்டாட வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்....

Monday, January 14, 2008

காதல் பொங்கல்

கரும்பைக் கடித்து
மென்று ரசித்து
சுவைத்து துப்பினாய்
சக்கையாய் விழுந்தேன்
நான்

*****


சக்கரைப் பொங்கல்
வேண்டுமென்றேன்
கொண்டுவருகிறேன்
என்றாய்....
எப்போது புரியப் போகிறது
நான் கேட்பது
உன்னைத் தான்
பொங்கலை அல்ல என்று.....

*****


பொங்கலோ பொங்கல்
என்று உற்சாகமாக
கத்தினாய்
நீ வாழ்த்துவதைக்
கண்ட மகிழ்ச்சியில்
மீண்டும் மீண்டும்
பொங்குகிது
பொங்கல்....

Monday, January 07, 2008

நீ - 1

யாரோ யாரிடமோ
பேசும் வார்தைக‌ள்
மீண்டும் கிள‌றிவிடுகின்ற‌ன‌
ம‌ற‌ந்துபோன
உன் நினைவுக‌ளை...

*****

கைகளை நீட்டிக்
கொஞ்சலாய் தந்தையிடம்
செல்லும் குழந்தைகளைப்
பார்க்கும் போதெல்லாம்
சட்டென்று நினைவிற்கு
வருகிறது நீ
ஊரில் இல்லை என்பது

புத்தகக் கண்காட்சி - 2008

ரொம்ப நாளாக் காத்துக்கிடந்து இந்த புத்தகக் கண்காட்சிக்குப் சனிக்கிழமை (5-1-08) போனோமுங்க.... ரொம்ப பெருசா இருந்துச்சு... போனமுறை இருந்ததைவிட இன்னும் அதிகமான கடைகள் 500க்கும் மேற்பட்ட கடைகள் இருக்குறதா நண்பர்கள் சொன்னாங்க... கண்காட்சிக்கு போறதுக்கு முன்னாடியே நம்முடைய அன்புத்தோழர் நிலாரசிகன் அங்க இருக்குறதா தகவல் வந்திடுச்சு, அவருடைய புத்தகம் "மயிலிறகாய் ஒரு காதல்" வெளியாகியிருக்கு, கடை எண் 5ல் கிடைக்குதுன்னு குறுஞ்செய்தி அனுப்பினார், சென்றவுடன் முதல் வேலையாக அவருடைய புத்தகம் வாங்கி அவரைத் தேடிக் கண்டுபிடித்து அவரிடம் ஒரு கையெழுத்து வாங்கினேன். அவருக்கு என்னுடைய தோழிகளை அறிமுகம் செய்து வைத்தேன்.

பிறகு என்னுடைய தோழிகள் நேரமாகிறது என்று சொன்னவுடன், அவர்களை அனுப்பிவிட்டு நிலாவைத் தேடிச் சென்று அவருடன் இருந்தேன், அப்போ தான் சொன்னார் பெரிய தலைகள் எல்லாம் இங்கே தான் இருந்தன என்று. பிறகு தேடிக் கண்டுபிடித்து, ப்ரியன், பிரேம், அருட்பெருங்கோ, அனிதா, அகிலன், கென்(இன்னும் இருவரின் பெயர்கள் மறந்துவிட்டன) என பெரும் புள்ளிகளை சந்தித்துவிட்டு வந்தோம். மற்றவர்கள் நிலா உட்பட தங்களுடைய வேலையை முடித்து விட்டிருந்தனர்... நாம் தான் பாக்கி, இந்தமுறை புத்தகங்களை நமக்கு பரிந்துரை செய்தது நிலாரசிகன், செல்லமாக எங்களுக்கு நிலவன்.... நீண்ட நாட்களாக நான் தேடிய புத்தகங்களை எனக்கு வாங்கிக் கொடுத்து பெரும் புண்ணியம் தேடிக் கொண்டார், சில புத்தகங்களுக்கு அவர்தான் பணமும் கொடுத்தார், சரி வெளியில் சென்றவுடன் பணம் கொடுத்துவிடுவோம் என்று நினைத்தேன், ஆனால் வெளியில் வந்தபோது எந்தப் புத்தகத்திற்கு அவர் பணம் கொடுத்தார் என்று தெரியவில்லை, அதனால் அமைதியாக வந்துவிட்டேன்... (என்ன நிலா, உங்களுக்கு பணம் திருப்பித் தர வேண்டுமா என்ன?)... இந்த முறை அருமையான தொகுப்புகள்... சீக்கிரம் முடித்துவிட வேண்டும்....

நான் வித்யாவும், விடுதலைப் புலிகளும் பலமாக விற்றுத் தீர்ந்தன, கிழக்குப் பதிப்பகத்தில்.... பயங்கர கூட்டம்...

என்னுடைய தோழி ஒருத்தி இதுவரைச் சந்தித்ததில்லை... என்னுடைய நிழற்படம் அவளிடமும், அவளினுடையது, என்னிடம் இருக்கின்றன... நான் நிலாவுடன் ஒவ்வொரு கடையாக வேகமாக குற்றிக்கொண்டிருந்தோம், அவள் என்னைப் பார்த்துவிட்டு சென்றாளாம், முதல் முறை என்னை நேரில் பார்த்துவிட்டு பயங்கர மகிழ்ச்சியாம், ஆனால் என்னைக் கூப்பிடவே இல்லை... நானும் கவனிக்கவே இல்லை, அவள் விகடன் பதிப்பகத்தாரின் கடையில் பொறுப்பில் இருந்தாலாம், கடைசிவரை நானந்தக் கடைக்கு செல்லவே இல்லை... இதுதான் கொடுமை... என்னை ஞாயிறு அன்று அரட்டையில்( chat) கூப்பிட்டு சொல்கிறாள், பயங்கர கோபம் எனக்கு... என்ன பண்றது???? என்னோட தோழிய தவற விட்டுட்டேன்.... சீக்கிரம் பார்ப்பேன்... அடுத்த வாரமும் புத்தகக் கண்காட்சிக்கு செல்வேன்... இந்தமுறை கொஞ்சம் பெரிய செலவு தான்.... அடுத்தவாரம் என்ன ஆகப் போகுதுன்னு தெரியல... கடைசியா, எனக்கு பல புத்தகங்களை பல கடைக்களுக்கு என்னுடன் அலைந்து எனக்கு வாங்கிக் கொடுத்து, பல புதிய நண்பர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்த நிலாரசிகனுக்கு ஒரு பெரிய "ஓ"... நன்றி சொல்லுதல் நட்பைக் கொச்சைப் படுத்துதல் என்று நான் நம்புவதால் இந்த "ஓ"

இனம் புரியாத நினைவுகள்.....

தெருவில் குட்டிக்கரணம்
மிதிவண்டி டயரில் ஊர்வலம்
ஓணான் பிடித்து க‌ட்டி வைத்த‌ல்
மொட்டை வெயிலில் ஆட்ட‌ம்
அவ‌ளைப் பிடிக்க‌ மிதிவ‌ண்டித் துர‌த்தல்
விழுந்து எழுந்து கை கால் சிராய்த்தல்
பள்ளிக்கூட வாசலில் ம‌ணிக்க‌ணக்காய் த‌வ‌ம்
க‌டைசிவ‌ரை சொல்லாம‌லே
புதைந்து போன‌ காத‌ல்
ஆசிரிய‌ரிட‌ம் பிர‌ம்ப‌டி
ப‌ள்ளிக்கூட‌த்தின் க‌டைசித் தேர்வு
க‌ல்லூரியின் முத‌ல் நாள்
விடுதியின் உல்லாச‌ வாழ்க்கை
ஒரே த‌ட்டில் சாப்பாடு
விசில‌டித்துப் பார்த்த‌ முத‌ல் ப‌டம்
மீண்டும் பூத்த காதல் பூ
ந‌டுநிசி ந‌டைப்ப‌ய‌ண‌ம்
ம‌லைக்கோட்டைச் சாலையின் தாவ‌ணிக‌ள்
அழுது கொண்டே பிரிந்துசென்ற‌
க‌ல்லூரியின் க‌டைசி நாள்
வேலைக்குச் சேர்ந்த‌ முத‌ல் நாள்
முத‌ல் மாத‌ச்ச‌ம்ப‌ள‌ம்
அதிர‌டியாய் முடிந்த‌ காத‌ல் திரும‌ண‌ம்
காத‌ல் ப‌ரிசின் பிஞ்சுக் கால்க‌ள்
வாழ்க்கையின் வெற்றிப்ப‌டிக‌ள்
வேக‌மான‌ முன்னேற்ற‌ம்
சொகுசாய் வாழ்ந்த‌ வாழ்க்கை
முதுமையின் பிடியில் நுழைவு
ம‌னைவி பிரிந்த‌ த‌னிமை.....

எல்லாம் வேக‌மாய் நினைவுக்கு வ‌ருகிற‌து
ம‌ர‌ண‌த்தின் நேச‌க்க‌ர‌த்தில் சாய்ந்த‌ போது