Wednesday, November 08, 2017

பொருளாதார சீரழிப்பு நாள் - நவம்பர் 8


அப்போது நான் நெல்லூரில் அலுவல் நிமித்தமாக சென்றிருந்தேன். என்னோடு என் அலுவல பணியாளர்கள் இருவரும் வந்திருந்தனர். இரவு உணவருந்திவிட்டு சாவகாசமாக அறையில் பேசிக்கொண்டிருந்தோம். பேசி முடித்துவிட்டு உறங்கப் போகலாம் அன்று நினைக்கையில் அலைப்பேசியில் குறுஞ்செய்திகள் வந்திருக்கிறதா என்று பார்க்கலாம் என்று எடுத்தால் வாட்ஸ் அப்பில் ஏகப்பட்ட தகவல்கள், எல்லாம் ஒரே விஷயத்தைப் பேசின. மோடி ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து விட்டார். அடுத்த இரண்டு நாட்களுக்கு வங்கிகள், ஏடிஎம் கள் செயல்படாது.

பர்ஸை திறந்து பார்த்தால் கையில் இருப்பது வெறும் முன்னூறு ரூபாய்கள். எங்கள் மூவருக்குமான உணவுக்கான பணம் அது. அடுத்து ஏடிஎம் எப்போது திறக்குமோ அது வரை அந்த முன்னூறு ரூபாய்களை மட்டுமே வைத்துக்கொண்டு உணவருந்த வேண்டும். தெரியாத மொழி, பழக்கமில்லாத மனிதர்கள், புதிய இடம் என திக்குத் தெரியாமல் நின்றிருந்தோம். அடுத்த ஒரு மாதம் உணவுக்கும், பயணத்துக்கும் பணத்துக்காக ஏடிஎம். ஏடிஎம்மாக அலைந்தது, பட்டினி கிடந்தது எல்லாம் சொல்லி மாளாது.

கக்கத்தில் காசு வைத்துக் கொண்டு என்ன வேண்டுமானாலும் ஊருக்கு உபதேசிக்கலாம், ஆனால் தெருவில் அலைந்தால் தான் உண்மை புரியும். அந்த ஒரு மாதம் நான் சந்தித்த மனிதர்கள், அவர்களின் துன்பங்கள், மோடிக்கும் இந்த அரசுக்கும் விட்ட சாபங்கள், எதுவுமே சாதாரணமாக கடந்து போகக்கூடியது அல்ல.

No comments: