Saturday, October 13, 2007

பிரிவு

கைகள் படபடக்க, கண்களில் நீர்த்துளி சுமந்து, கழுத்தில் புதிதாய் தொங்கும் மஞ்சள் கயிறோடு, மகிழ்ச்சியோடு சிரித்துக் கொண்டிருக்கும் என்னைப் பார்க்கிறாய். ஒரேயொரு கேள்வியை மட்டும் சுமந்து கொண்டிருந்தது அந்தப்பார்வை, அது "உன்னால் மட்டும் எப்படி இப்போது சிரிக்க முடிகிறது?"

நேற்று இரவு நடந்தது உனக்குத் தெரிந்தால் நீயும் சிரிப்பாய், உன்னைப்பற்றி எழுதப்பட்ட என்னுடையக் கவிதைகளை தற்செயலாய் என்னுடைய அறையில் பார்த்துவிட்டான் உன்னுடையக் கணவன், சிரித்துக்கொண்டே பார்த்த அவனிடம் நீ எனக்குத் தீட்டிய கடிதங்களையும் கொடுத்தேன். பொறுமையாக படித்து முடித்து விட்டு அர்த்தம் பொதிந்த புன்னகையோடு உடைந்து போயிருந்த என்னைப் பார்த்த அவன் " எத்தனை உயர்வானது உங்களுடைய நட்பு, எனக்கு இதுபோல் தோழி அமையவில்லையே... கவலைப்படாதீர்கள் உங்களுடைய நட்பிற்கு என்னால் எந்த பாதிப்பும் வராது" என்று சொன்னான்.

கழுத்தில் மஞ்சள் கயிறு, கையில் மாலை, கலங்கிய கண்களுடன் நீ என்னைப் பார்க்கிறாய், சிரிப்போடு நான். உன் கணவனே உன்னிடம் இன்று சொல்லிவிடுவான், குழந்தையின் குதூகலத்தோடு நீ நாளை என்னனப்பார்க்க அவனோடு வரப்போவதை நினைத்து இன்னும் அதிகமாக சிரிக்கிறேன் நான், இன்னும் அதிகமாக அழுகிறாய் நீ.....

1 comment:

Natchathraa said...

உங்களோட இந்த கவிதை என்ன அழ வச்சுருச்சு... இப்படி ஒரு கணவன் எனக்கு கிடைக்காமல் போனதால் நான் இழந்த என் நட்பை நினைத்து....உங்களது நட்பு என்றும் நிலைத்து இருக்க வாழ்த்துகள்....