Monday, August 25, 2008

ஒலிம்பிக்ஸ் – இந்தியாவின் நிலை

முன் குறிப்பு - இந்த பதிவி எழுதியது ஒலிம்பிக்ஸ் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி... ஆனா இப்போ தான் போட நேரம் கிடச்சுது....


ஒவ்வொரு ஒலிம்பிக்ஸ் போட்டின் போதும் இந்தியாவின் பதக்கம் வெல்லும் வாய்ப்புகள் பற்றி ஒலிம்பிக்ஸ் சங்க தலைவர், முன்னாள் விளையாட்டு வீரர்கள், ஊடகங்கள் என அனைத்து தரப்பினரும் தங்கள் யூகங்களை வெளியிடுவதும், வழக்கம் போல இந்திய வீரர்கள் அங்கே சொத்தப்புவதும், ஒரு வீரர் மட்டும் பதக்கம் வெல்வதும், பின்னர் அடுத்த 4 வருடங்களுக்கு அதை மறந்துவிடுவதும் வாடிக்கையாகிவிட்டது. இந்த ஒலிம்பிக்ஸ் பற்றியும், இந்திய குறைந்த பட்சம் 2 அல்லது மூன்று தங்கமாவது வெல்வதற்கு என்ன செய்யலாம் என்பது பற்றியும் கொஞ்சம் பார்க்கலாம்.


பீஜிங் ௨௦௦௮


2008 ம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பை பெற்றதிலிருந்து, சீனர்கள் இதை தங்களின் வலிமையைப் பறைசாற்றும் ஒரு நிகழ்வாக எடுத்துச்செல்ல முடிவெடுத்தனர். ஒவ்வொரு விஷயத்தையும் மிகச்சிரத்தையுடன் செய்து முடித்தனர். எந்த முறையும் இல்லாத அளவிற்கு இந்தமுறை மிகப்பிரம்மாண்டமாக செய்தனர். இந்த முறை ஆன செலவு 43 பில்லியன் டாலர்கள், இதற்கு முன்பு 2004 ல் நடந்த ஏதென்ஸ் போட்டிக்கு ஆன செலவு 15 பில்லியன் டாலர்கள் மட்டுமே. கிட்டதட்ட மூன்று மடங்கு அதிகமான பணத்தைக் கொட்டி மிகப்பிரமாண்டமாக நடத்தப்பட்டது இந்த ஒலிம்பிக்ஸ், மொத்தம் 32 அரங்குகள், பறவைக் கூடு(Birds Nest) என்று அழைக்கப்பட்ட பிரம்மாண்ட அரங்கில் தான் துவக்க விழா நடைபெற்றது. இந்த அரங்கம் 36 கிலோமீட்டர் நீளமும், 45000 டன், எடையுள்ள இரும்பைக்கொண்டு செய்யப்பட்டது. உலகமே வியக்கும் வண்ணம் கோலாகலமாக தங்களின் பாரம்பரியத்தைப் உலகிற்கு பறைசாற்றினர். 90,000 பார்வையாளர்கள், 80 நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் நடந்தது. இதன் மூலன் சீன அரசு உலகிற்கு தெரிவிக்க முற்படுவதென்ன?????


நாங்கள் சாதாரணமானவர்கள் அல்ல....


சீன அரசு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த உரிமைக் கோரியதர்கு முக்கிய காரணம் தாங்கள் சாதாரணமானவர்காள் இல்லை என்று உலகிற்கு பறைசாற்றவே. உலகின் மிகப்பெரிய விளையாட்டுத்திருவிழா மூலம் தங்களின் பலத்தை, அரசியல், பொருளாதார பலத்தை மேற்கு நாடுகளுக்கு காண்பிக்கும் ஒரு வாய்ப்பாக இதைப் பயன்படுத்தியது. சென்ற முறை ஏதென்ஸில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் 32 தங்கப்பதக்கங்களை வென்று அமெரிக்காவிற்கு அடுத்த நிலையில் இருந்தது சீனா. அமெரிக்கா 36 தங்கங்களை வென்றது. எப்போதும் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவை இந்தமுறை சீனா கீழே தள்ளிவிடும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. 30 வருங்களுக்கு முன்பு இருந்த சீனாவையும், இந்தியாவையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தியா பல அடி தூரம் முன்னே இருந்தது, ஆனால் இந்த 30 வருடங்களில் சீனாவின் வளர்ச்சி அபாரமானது, இந்தப் பிராந்தியத்தில் தன்னுடைய ஆளுமையை நிலைநாட்ட சீனா முயன்று வெற்றியும் கண்டிருக்கிறது.


இந்தியாவின் நிலை ஒரு சிறிய ஒப்பீடு


இந்தமுறை வெறும் 56 வீரர்களைக் கொண்ட குழு மட்டுமே இந்தியாவிலிருந்து சென்றிருக்கிறது. சீனக்குழுவின் எண்ணிக்கை 600க்கும் மேல். மொத்தம் 302 பிரிவுகளில் போட்டி நடைபெறுகிறது, இந்தியக்குழு 10 பிரிவுகளில் கூட விளையாடவில்லை. இதில் அரசை தவறு சொல்வதா? இல்லை பொதுமக்களை குறை சொல்வதா? இது வரை 8 ஒலிம்பிக்ஸ் தங்கப் பதக்கத்தை வென்றெடுத்த இந்திய ஹாக்கி அணி இந்த முறை ஒலிம்பிக்ஸ்க்கு தகுதி பெறவே இல்லை. கடந்த மூன்று ஒலிம்பிக்ஸ்லில் இந்திய ஹாக்கி அணியின் ஆட்டம் சொதப்பலாகவே அமைந்திருந்தது. வீரர்களையும் குறைசொல்ல முடியாது, சரியான ஆடுகளங்களோ, பயிற்சிக்களங்களோ நம் நாட்டில் கிடையாது, வெளிநாடு சென்று பயிற்சி எடுக்க நம் வீரர்களுக்கு வசதியும் இல்லை, ஸ்பான்சர்சும் கிடைப்பதில்லை. கிரிக்கெட்டுக்கு கிடைக்கும் வரவேற்பு மற்ற விளையாட்டுகளுக்கு இல்லை, கால்பந்தை எடுத்துக்கொண்டால் நாம் 130 நாடுகளுக்கு பின்னால் இருக்கிறோம். நாம் இன்னும் நிறைய வளர வேண்டி இருக்கிறது. நாம் விளையாட்டை சிரத்தையுடன் எடுத்துகொள்வதே இல்லை. தமிழகத்தில் குற்றாலீஸ்வரன் என்ற நீச்சல் வீரர் இருந்தார், பல சாதனைகள் புரிந்த அவர் இப்போது இருக்குமிடம் பலருக்கு தெரியாது, ஒரு பத்திரிக்கை சமீபத்தில் அவரைப் பேட்டி கண்ட போது, நீச்சலை வைத்து வாழ்க்கையை ஓட்ட முடியாது அதனால் நீச்சலுக்கு குட்பை சொல்லிவிட்டேன், படிக்கின்றேன் என்கிறார். இங்கு விளையாட்டை விட படிப்பும், வேலை வாய்ப்பும் முக்கியமாக கருதப்படுகின்றது. அரசு விளையாட்டில் சாதனை புரிந்தவர்களை மதிப்பதே இல்லை. ஒவ்வொரு விளையாட்டிற்கும் ஸ்பான்ஸர்ஸ் மிகவும் முக்கியம், அப்படி இல்லாதபோது அரசு உதவலாம். ஆனால் இங்கு அப்படி நடப்பதே இல்லை.

இங்கு விளையாட்டிற்கு செலவிடப்படும் தொகை மிகவும் குறைவு. ஒவ்வொரு விளையாட்டிலும் அரசியல் கலக்கிறது. இன்று அரசியல் கலக்காத விளையாட்டே இல்லை. கிரிக்கெட் தவிர மற்ற விளையாட்டு வீரர்கள் இரண்டாம் தர நிலையில் தான் உள்ளனர்.


தவறு எங்கே நிகழ்கிறது?


ஒரு சரியான விளையாட்டு உள்கட்டமைப்பு எந்தப் பள்ளிகளிலும் இல்லை. செம்மண் தரையில் தான் இங்கு பல கால்பந்தாட்ட பயிற்சிகளும், ஹாக்கி பயிற்சிகளும் நடைபெறுகின்றன, இயற்கையான புல்தரைகள் கால்பந்தாட்டத்திற்கும், செயற்கைப் புல்தரைகள் ஹாக்கிக்கும் வேண்டும், இங்கு உலகத்தரத்தில் எந்த மைதானமும் கிடையாது. விளையாட்டு அரங்கங்கள் பொது நிகழ்ச்சிகளுக்காகவும், கலை நிகழ்ச்சிகளுக்காகவும் ஒதுக்கப்படுகின்றன, விளையாட்டு மேம்பாட்டிற்க்காக ஒதுக்கப்படும் பணம் இடையில் இருக்கும் அதிகாரிகளுக்கு செலவு செய்யப்பட்டு, வீரர்களுக்கு சொற்பமே வந்து சேர்கிறது. துப்பாக்கி சுடும் பயிற்சியில் இருக்கும் வீரர்களுக்கு போதிய அளவு குண்டுகள் கிடைப்பதில்லை, ராணுவத்தில் இருக்கும் ராத்தோருக்கு தினமும் 250 குண்டுகள் தான் கிடைக்கின்றனவாம்.

பேஸ்பால், கூடைப்பந்து, சைக்லிங்(Cycling), பீச் வாலிபால்(Beach Volleyball), டைவிங்(Diving), பென்சிங்(Fencing), ஜிம்னாஸ்டிக்ஸ்(Gymnastics), டிராம்போலின்(Trampoline), ஹாண்ட்பால்(Handball), என இன்னும் பல விளையாட்டுக்களில் இந்தியா பங்கேற்பதே இல்லை, உலக மக்கள்தொகையில் இரண்டாவது இடம், உலகின் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்று, இந்தப் பிராந்தியத்தில் சீனாவிற்கு சவால் விடும் பொருளாதாரம், ஆனால் விளையாட்டில் மட்டும் பூஜ்ஜியம், செக்குடியரசு, ருமேனியா, துருக்கி போன்ற நாடுகள் தங்கம் வெல்லும்போது நாம் மட்டும் பதக்கப்பட்டியலில் பெயர் கிடைக்க போராடுவோம்.

இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் பல ஆண்டுகளாக சுரேஷ் கல்மாடி தான் தலைவர் ஆனால், குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் இது வரை இல்லை, சில மாதங்களுக்கு முன் இந்தியாவின் ஒலிம்பிக் நிலை பற்றி புத்தகம் எழுதிய ஆசிரியர் இந்திய ஒலிம்பிக் சங்கத்திடம் சென்ற முறை துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளிப்பத்தகம் பெற்ற ராத்தோரின் நிழற்படம் கேட்டபோது தங்களிடம் இல்லை என்றார்களாம், அந்த லட்சணத்தில் இருக்கிறது ஒலிம்பிக் சங்கம்.

நம் வீரர்களிடம் சரியான பயிற்சி இல்லை என்பதே முழுமுதற் காரணம். தேர்வுக்கு சரியாக தயாராகவிட்டால் பதட்டம் ஏற்படும், அந்தப் பதட்டமே தோல்விக்கு காரணம். இறுதிச்சுற்றுக்குக் கூட தகுதி பெறாமல் துப்பாக்கி சுடும் போட்டியிலிருந்து வெளியேறியது இந்திய அணி, குத்துச்சண்டை மற்றும் ஜீடோவில் முதல் சுற்றிலேயே தோல்வி. சரியான பயிற்சிக்களங்கள் தான் வீரர்களுக்கு முதல் தேவை. கூடவே அவர்களுக்கு பணமும் தேவை. வேலையோ அல்லது ஊக்கத்தொகையோ தான் அவர்கள் மேலும் உற்சாகத்துடன் உழைக்க உதவும்.

பள்ளிகளில் இருந்தே மாற்றம் தேவைப்படுகிறது. வெறும் கல்வி மட்டும் போதாது, விளையாட்டும் அவசியம் என்று பெற்றோர்கள் உணர வேண்டும், பெரிய நிறுவனங்கள் விளையாட்டு வீரர்களுக்கு ஸ்பான்ஸர் செய்ய முன்வரவேண்டும். அரசியல்வாதிகள் கையிலிருந்து முன்னாள் விளையாட்டு வீரர்களிடம் விளையாட்டு ஆணையங்கள் செல்ல வேண்டும் அப்போதுதான் கொஞ்சமாவது மாற்றத்தை எதிர்பார்க்கலாம், இல்லையெனில் ஏக்கத்துடன் பதக்கப்பட்டியலை பார்க்கவேண்டியது தான்.

No comments: