Wednesday, December 23, 2009

நிகழ்வுகளோடு

வாழ்க்கை எனக்கு எப்போதுமே பாடங்களை சொல்லிக் கொடுத்துக்கிட்டு தான் இருக்கு... நான் அதுல கத்துக்குறது தான் குறைவு. என்னோட வாழ்க்கை ஒன்னரை ஆண்டுகளுக்கு முன்ன வரைக்கும் நான் தீர்மானிச்சதா தான் இருந்துச்சு. படிப்பு, வேலை, குறிக்கோள், அப்புறம் அதை கைவிட்டது, குறிக்கோள் மாறியது எல்லாமே. ஆனா கடந்த ஒன்னரை ஆண்டுகளாக அதுவும் தொழில் ஆரம்பிச்ச பிறகு எல்லாமே என் கையை மீறிப் போகிற விஷயங்களாகத்தான் இருக்கு. அது என் தொழிலாகட்டும், பண விஷயமாகட்டும், உறவுகளோடு இருக்கும் நெருக்கமாகட்டும், தோழிகளில், நண்பர்கள் என எல்லாமே, எல்லோருமே கொஞ்சம் தள்ளிப் போயிட்ட மாதிரி ஒரு உணர்வு.

2007ம் ஆண்டு இதே கிறிஸ்துமஸ் எப்படிப் போச்சுன்னு பாக்கும் போது கொஞ்சம் சந்தோஷமாவும் இருக்கு வருத்தமாவும் இருக்கு. மாத வருமானம், கை நிறைய சம்பளம், எது தேவைப்பட்டாலும் யோசிக்காமல் வாங்கிய காலம் அது. எனக்கு, அம்மாவுக்கு, அம்மச்சிக்கு என பார்த்துப் பார்த்து போத்தீஸில் வாங்கினேன். போத்தீஸ் எனக்கு ரொம்ப பிடிச்ச கடை. அங்க வரும் கஸ்டமரை மதிக்கும் பாங்குக்காகவே நான் போத்தீஸ் போவேன். எனக்கும், வீட்டில் உள்ளவர்களுக்கும் ஆடை எடுக்கும் போது கடையில் கேட்பான் எந்த ரேஞ்சில் வேணும் சார்ன்னு. பணம் முக்கியம் இல்ல நல்ல டிசைனா காட்டுங்கன்னு சொல்வேன். பிடிச்சது என்ன விலையா இருந்தாலும் வாங்கிக் கொண்டிருந்தேன். இவ்ளோ பட்ஜெட்டுக்குள் முடிக்கனும்னு கணக்கு வச்சிக்கிட்டதே இல்ல. 2008 கிறிஸ்துமஸ் வீட்டிற்கு எடுத்துக்கொடுக்க முடியாட்டியும் எனக்கு ஆடைகள் எடுத்துக்க முடிஞ்சுது. அம்மாவுக்கு என்னால எடுத்துக் கொடுக்க முடியலைங்கிற வருத்தம் என்னை ரொம்ப ஆட்டிப் படைச்சுது. அடுத்த வருஷம் சிறப்பா செய்யனும்னு நினைச்சுக் கிட்டு இருந்தேன். ஆனா இந்த வருஷம் எனக்கு கூட எடுத்துக்க முடியல...

ஒவ்வொரு வருஷமும் கிறிஸ்துமஸ் என் குடும்பத்தினரோடு ரொம்ப சந்தோஷமா கொண்டாடி இருந்திருக்கேன். எந்த வருஷமும் தவற விட்டதே இல்ல. எந்த ஊர்ல எந்த மூலையில் இருந்தாலும் வீட்டிற்கு போயிடுவேன். அம்மா கூட, என் மாமாக்கள், அத்தைகள், தம்பிகள், அக்காக்கள் கூட கொண்டாடுவதில் அவ்ளோ சந்தோஷம். ஆனா இந்த முறை விலகி இருக்கேன். ரொம்ப தூரம் விலகி இருக்கேன்.


வாழ்க்கை ரொம்ப வேகமா போகுது. வருடங்கள் மிக வேகமா உருண்டோடுது. வாழ்க்கையில இன்னைக்கு மேல இருக்குறவன் நாளைக்கு கீழே இருப்பான், இன்னைக்கு கீழ இருக்குறவன் நாளைக்கு மேலே இருப்பான்னு படிச்சிருக்கேன். அதை இப்போ அனுபவிச்சு பாக்குறேன். எல்லாமே பாடம் தான். நான் இந்த காலகட்டத்தில் கத்துக்குற எல்லா விஷயங்களும் என்னைச் செதுக்க பயன்படும். ம்ம்ம்ம் பாக்கலாம் இன்னும் எவ்ளோ தூரம் காலம் என்னை சுழற்றியடிக்கும்னு...

1 comment: