நேசக்கரங்கள் நீட்டினாய்
இருளின் பிடியிலிருந்து
விடுவித்துக்கொள்ள
ஆதரவுக் கரம்பற்றி
வெளிச்சத்தின் திசைகளை
எட்டிப்பிடித்தாய்
புள்ளியாய்த் தொடங்கிய
வெளிச்சம்
பேரண்டமாய் ஆட்கொண்டது
அங்குல அங்குலமாய்
திசைகளை அளந்தாய்
வெளிச்சத்தின் நீட்சியை
எங்கும் பரவச் செய்தாய்
அளவற்ற அன்பு
உள்ளங்களில் பரவச் செய்தாய்
கண்களிலே கருணை
பொங்கச் செய்தாய்
உன்னைச் சந்திக்கும்
தேதிகளில் எல்லாம்
என் நாட்குறிப்பில்
பூக்கள் பூக்கச் செய்தாய்
வண்ணங்கள் தீட்டப்பட்ட்
ஓவியமாய்
உன்னைச் சந்தித்தவர்கள்
வாழ்க்கை மாறியது
சட்டென்று ஒரு நாள்
தோள்சாய கிடைத்திருக்கிறான்
தோழன் ஒருவன்
ஒன்பதாம் திசையில் இருந்து
என்றாய்
எங்கள் கைகளை
உதறிவிட்டு தனித்துச் சென்றாய்
கணக்கில் வராத அந்தத் திசை
இருளின் அரசாங்கமென
எச்சரிக்க வாயெடுத்தேன்
காதுகளைப் பொத்திக் கொண்டாய்
இப்போது கவிதை எடுத்திருக்கிறேன்
கண்களை மூடிவிடாதே.
1 comment:
nice........:)
Post a Comment