Sunday, January 20, 2008

மயிலிறகாய் ஒரு காதல் - இது விமர்சனம் அல்ல

நண்பன் நிலவனிடமிருந்து குறுஞ்செய்தி அவருடைய இரண்டாவது புத்தகம் மயிலிறகாய் ஒரு காதல் இந்த புத்தகக் கண்காட்சியில் இருக்கும் என்று, அவருடைய முதல் புத்தகம் அருமையாக இருக்கும், அந்த எதிர்பார்ப்போடு, புத்தகக் கண்காட்சியில் நுழைந்தவுடன் அவருடைய புத்தகத்தை தான் முதலில் வாங்கினேன்... வீட்டிற்கு வந்ததும் முதலில் அவருடைய புத்தகத்தைப் படித்தேன்.... அருமை... கீழே வைக்கவே தோன்றவில்லை... முழுமூச்சாக புத்தகத்தைப் படித்துவிட்டு தான் நகர்ந்தேன். அதன் பாதிப்புகள் சில நாட்கள் இருந்தன... சில கவிதைகள் மனதை விட்டு அகலவே இல்லை.....

படிக்க ஆரம்பிக்கும் போதே ”உயிரிலே கலந்தவன்” னில் ஆரம்பித்தது நிலவனின் அரசாங்கம்....

“தேவதையை பார்க்க வேண்டும்
என்கிற என் சிறிய
வயது ஆசையை
பூர்த்தி செய்தவள் நீ.
ஆனாலும் உன்னிடம்
ஒன்று கேட்க வேண்டும்..
“நீ என்ன உயிர்
வாங்கும் தேவதையா?”

இதைப் படித்தவுடன் சட்டென்று என்னுடைய உயிர் வாங்கும் தேவதை தான் ஞாபகத்திற்கு வந்தாள்...

இந்தக் கவிதைத் தொகுப்பை நானும் என்னுடைய தோழியும் சேர்ந்து படித்துக் கொண்டிருந்தபோது... ஒவ்வொரு கவிதைக்கும் என்னுடைய தோழியின் முகத்தில் மலர்ந்த புன்னகையும், குறுநகையும் தான் இவனின் கவிதைக்கு அழகான பரிசுகள்... படிக்கும் ஒவ்வொரு கவிதையும் வாழ்வோடு பிணைந்த கவிதைகள்...

மழைப்பெண் எனக்கு மிகவும் பிடித்திருந்தது...

பிரிவு -1 என்கிற கவிதையின் வலி பிரிவை சந்தித்தவ்ர்களுக்கு மட்டுமே புரியும்... நாம் அனைவரும் காதலை வாழ்க்கையில் சந்திக்காமல் இருந்திருக்க மாட்டோம், அதே போல் பிரிவையும்... நம் அனைவருக்கும் இது மிகவும் பிடிக்கும், படிக்கும் போது கொஞ்சம் மனதும் வலிக்கும்....


கன்னம் சிவக்க
சிவக்க முத்தமிட்டுவிட்டு
போதுமாடா
என்பேன்..
அழகானதொரு வெட்கத்தினால்
முகம் திருப்பிக்கொள்வாய்.
ஆண்வெட்கம் அழகில்லை
என்று யார் சொன்னது?


இதைப் படித்தவுடன் முன்பொருமுறை முத்ததினால் நனைந்த என்னுடைய கன்னங்களைக் கொஞ்சம் தடவிப் பார்த்துக்கொண்டேன்...

காதலிக்கும் அனைவருக்கும் தவிப்பு சொந்தம்... தவிர்த்தலும், தவித்தலும் காதலின் இலக்கணம்... இவை இல்லையென்றால் காதல் இல்லை... இதை அழகாக உணர்த்தியுள்ளார் இந்தக் கவிதையில்....


தவிர்தலுக்கென்றே ஒரு
பார்வை வைத்திருக்கிறாய்
நீ
தவிப்பதற்கென்றே ஒரு
இதயம் வைத்திருக்கிறேன்
நான்


நட்பும் காதலும் கவிதையின் சொல்லாடல் மிக அருமை.... நல்ல வேளை இந்த நிலைமை எனக்கு இன்னும் வரவில்லை... என்னுடைய தோழிகளுக்கு கிடைத்த கணவர்கள் நட்பை புரிந்துகொண்டவர்கள்... காதலையும் நட்பையும் பிரித்துப் பார்க்கத் தெரிந்தவர்கள்....

”உங்களுக்குள் என்ன?”
என்று
உயிர் கொடுத்து காதலை
சேர்த்து வைக்கத் துடிப்பவன்
நண்பன்.

நண்பனை கைகாட்டி
”உங்களுக்குள் என்ன?”
என்று
உயிர் பறிப்பவன்
காதலன்.


காதலை ரசித்து, சுவைத்து, சுவாசித்து வரும் நிலாரசிகனைக் கேட்டால் இன்னும் காதலி கிடைக்கவில்லை என்கிறார்.... விரைவில் அவருக்கு காதலி கிட்டட்டும்..... இன்னும் நிறைய அவரிடமிருந்து ஒரு தோழனாக எதிர்பார்க்கிறேன்... இன்னும் பல தொகுப்புகள் வர வேண்டும்.. எங்களின் நிலவனை தமிழ் மக்கள் கொண்டாட வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்....

2 comments:

ஜே கே | J K said...

நல்லா இருக்கு.

இன்னும் எழுதலாம்............

KARTHIK said...

//காதலை ரசித்து, சுவைத்து, சுவாசித்து வரும் நிலாரசிகனைக் கேட்டால் இன்னும் காதலி கிடைக்கவில்லை என்கிறார்.... விரைவில் அவருக்கு காதலி கிட்டட்டும்..... //

விரைவில் கிடைக்கட்டும்.