இந்தியாவில் கல்விமுறை எப்படி உள்ளது என்ற கேள்விக்கு நம்மில் சிலர் மோசமான கல்விமுறை என்றும் பலர் நல்ல கல்விமுறை என்றும் குறிப்பிடுவர். நான் தற்போது உள்ள பாட திட்டங்களைப் பற்றி பேச விரும்பவில்லை, அவை மோசம் தான் இருந்தாலும் நான் அதையும் தாண்டி உள்ள சில விஷயங்களை பற்றி பேச விரும்புகிறேன்.
முதலில் நம் நாட்டில் எத்தனை வகையான கல்விமுறை உள்ளது என்பது பற்றி நாம் யோசிக்க வேண்டும். 1) International syllabus based, 2) CBSE, 3) Matric மற்றும் 4) StateBoard.
ஒரே நாட்டில் வாழும் மக்களுக்கு, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று எல்லொரையும் ஒரே தட்டில் வைத்து பார்ப்பதாக சொல்லும் ஒரு நாட்டில் ஏன் இப்படி விதவிதமான கல்விமுறைகள்.
பணம் இருப்பவனுக்கு ஒரு மாதிரியான கல்வி, பணம் இல்லாதவனுக்கு ஒரு மாதிரியான கல்வி. எதற்கெடுத்தாலும் மேலை நாட்டை உதாரணம் காட்டுபவர்கள் இதற்கும் உதாரணம் காட்டவேண்டியது தானே? அங்கே கல்வி அரசாங்கத்தின் கைகளில், இங்கு போல் அங்கு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு வியாபாரம் ஆக்கப்படவில்லை, அனைவருக்கும் தரமான, சமமான கல்வி அளிக்கப்படுகிறது. சனாதிபதியின் மகளும், செருப்பு தைப்பவனின் மகனும் ஒன்றாகத்தான் படிக்கிறார்கள். அங்கே வேற்றுமை பேணப்படுவதில்லை கல்வி விசயத்தில்.
இங்கே மட்டும் தான் கல்வி அரசியலாகவும், வியாபாரமாகவும் ஆக்கப்படுகிறது. பணம் இருப்பவன் நல்ல தரம் வாய்ந்த பள்ளிக்கூடத்தில், சகல வசதிகளோடும் கல்வி பயில முடியும், பணம் இல்லாதவனுக்கு தான் அரசு ஒதுக்கி உள்ளதே ஓராசிரியர் மற்றும் ஈராசிரியர் பள்ளிகள். ஆய்வுக்கூடங்களையே பார்க்காமல் பன்னிரென்டாம் வகுப்பு முடிக்கும் மாணாக்கரின் தரமும், ஏழாம்,எட்டாம் வகுப்புகளிலேயே ஆய்வுக்கூடங்களில் ஆய்வுகள் செய்து பார்த்து பன்னிரென்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவனின் தரமும் ஒன்றாக மதிப்பிடப்படுவது நம் நாட்டில் தான்.
பன்னிரென்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெறும் மாணாக்கர்கள் மருத்துவத்தையும், பொறியியலையும் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் அரசாங்கம் ஏன் அவர்களை ஆசிரியர்களாக மாறுவதற்கு ஆசிரியர் பயிற்சிக்கு அனுப்பக்கூடாது. இங்கே யார் ஆசிரியர்களாக வருகின்றனர்? மதிப்பெண் குறைவாக எடுத்து இளங்கலை படிக்கம் மாணாக்கர்கள், அவர்களிலும் பலர் மேற்படிப்பு, பெரிய வேலை என்றெல்லாம் போய்விட மீதம் உள்ளவர்கள் தானே ஆசிரியர்களாக வருகின்றனர்.
நம் நாட்டில் மாற்றத்தைக் கொண்டுவர விரும்பினால், முதலில், கல்வியில் மாற்றம் கொண்டு வருவோம்.
No comments:
Post a Comment