Monday, September 17, 2007

விடியல்

தலைமுறைகளைத் தாண்டியும்
வேர்களைத் தேடி
அலைகிறது மனம்

ஆண்டுகள் பல கடந்த பின்னும்
கண்திரைகளுக்குப் பின்னால்
இன்னும் இடிபாடுகளின் மிச்சங்கள்

நீண்ட இரவுகளில்
தூக்கம் கலைக்கிறது
நினைவுகளாய் எழும்
குண்டுகளின் சத்தம்

தொலைந்து போன உறவுகளின்
முகவரிகளைத் தேடி
தொடர்கிறது பயணம்

என்றாவது ஒருநாள்
சொந்த பூமியில்
என்னுடைய விடியல்
துவங்குமென்ற நம்பிக்கையில்
தொடர்கிறது பயணம்...

Tuesday, September 11, 2007

இணைய‌த‌ள‌ம்

பரபரப்பான வாழ்க்கையின்
நடுவே மறந்து போன‌
உன் முகத்தை
மீண்டும் ஞாப‌க‌ப்ப‌டுத்திய‌து
அரிதாய் வ‌ந்த
உன்னுடைய‌ மின்னஞ்ச‌ல்


தொலைந்து போன‌
ப‌ழைய‌ முக‌ங்க‌ளை
அரிதாய் க‌ண்டெடுக்கிறோம்
எப்போதாவ‌து ந‌ட‌க்கும்
சாட் அர‌ட்டைக‌ளிலும்
மின்ன‌ஞ்ச‌ல் உரையாட‌ல்க‌ளிலும்


அம்மா‌வின் க‌ண்ணீரையும்
த‌ங்கையின் குழ‌ந்தையையும்
ம‌னைவியின் காத‌லையும்
அப்பாவின் சிரிப்பையும்
த‌ம்பியின் அர‌ட்டையையும்
மின்ன‌ஞ்ச‌ல்க‌ளில் ம‌ட்டுமே
ர‌சிக்க‌ முடிகிற‌து
பிழைப்புக்காக‌ வ‌ந்த‌ தூர‌தேச‌த்தில்....

Saturday, September 01, 2007

அன்புத்தோழி 5

நெரிசலான கடைத்தெருவில்
யாருடைய கண்ணிலாவது
பட்டுவிடுவோமோ என்று
பயந்து கொண்டே
ஐந்தங்குல இடைவெளியில்
நடந்து செல்வார்கள் காதலர்கள்
நெருக்கமாக கைகளைக் கோர்த்தபடி
நடந்து செல்வார்கள் நண்பர்கள்...

-------


ஒவ்வொரு முறை

நாம் சந்திக்கும் போதும்
பேசிக்கொள்ள எவ்வளவு விஷயங்களைப்
பொத்திப் பொத்தி
சேகரித்து வைத்திருக்கிறோம் நாம்!

-------


நாம் பார்த்துப் பேசி

ப‌ல‌ நாள் ஆனாலும்
உன்னைச் ச‌ந்திக்க‌
இன்னொரு ம‌ழைக்கால‌
மாலை வேளைக்காக‌
காத்திருக்கிறேன்....

பால்யகாலம்

கைகளுக்குள் சிக்காத
காற்றை என் சட்டைப்பையில்
பிடித்து வைத்து

வண்ணத்துப்பூச்சியின்
வண்ணங்களைக் கொண்டு
படங்கள் வரைந்து

குளத்துக்கரையில் தூண்டில்
போட்டு மீன் பிடித்து

மொட்டை வெயிலில்
சைக்கிள் டையரை வைத்து
ஊர் சுற்றி

கருவேலங்காட்டுக்குள்
ஓணான் பிடித்து

ஊரின் புழுதியெல்லாம்
நம் சட்டையில் இருக்க

இருட்டிய பிறகு
வீட்டிற்கு வந்து
அப்பாவிடம் அடி வாங்கி

கவலை மறந்து
உறங்கிய பொழுதுகள்

இன்றும் பசுமையாய்
நெஞ்சின் மூலையில்...

நண்பர்கள் தினம்

நண்பர்கள் தின‌
வாழ்த்து அனுப்ப
கைப்பேசியில்
வேகமாய்ச் சுழன்றது கை,
ம‌ணி ப‌ன்னிரெண்டைத் தொட்ட‌தும்
கைக‌ளில் த‌ய‌க்க‌ம்
ம‌ன‌தில் உறுத்த‌லாய்
குறுஞ்செய்திக் க‌ட்ட‌ண‌ம்
25 பைசா...

Wednesday, June 13, 2007

ஹெல்மெட் தலைகள்

நம்ம ஊருல எதையுமே சட்டமா கொண்டு வந்தாதான் செய்வேன்னு அடம்புடிக்கிறாய்ங்க... இன்னிக்கி(ஜீன்‍ 1) சென்னையில எங்க பாத்தாலும் வெறும் ஹெல்மெட் தல தான். இன்னிக்கு பல வேலை இருந்ததனால் அதிகாலையில 11 மணிக்கு எழுந்திருச்சி(என்ன மாதிரி பிபிஓ வில வேலை பாக்குறவங்களுக்கு அதுதான் அதிகாலை) செல்போன் பில் கட்ட கிளம்பி வெளியில போனா எல்லா பயலுவ தலையிலும் கறுப்பு கலர்ல என்னமோ இருக்குது, என்னடா இது அதிசயம்னு யோசிக்கிறப்ப கூட வந்த பயபுள்ள சொன்னான் மாப்பு இன்னிக்கி ஜூன் 1 அதுதான் எல்லாப் பயலுகளும் இப்படி திரியுறாங்கன்னு. சரிதான்னு பஸ்ஸ புடிச்சி அண்ணா சாலை வந்தா, எனக்கே ஆச்சர்யம் எல்லாரும் ஹெல்மெட்டும் தலையுமா வண்டியில போறாங்க... பலபேரு வண்டியில பின்னாடி இருக்குறவனும் தலையில கவசத்தோட போனாங்க... "என்னக் கொடுமை சரவணன் இது"ன்னு நானும் நம்ம நட்பும் உணர்ச்சிவசப்பட்டுட்டோம். நம்ம ஊருல சட்டத்த இப்படி மதிக்கிறாங்களே. இப்படி எல்லா விதிமுறைகளையும் கடைபிடிச்சா நம்ம எங்கேயோ போயிடுவோமேன்னு அப்படியே கனவுல மூழ்கிட்டேன்.

பஸ் ஸ்டாப்புல‌ இற‌ங்கி அப்ப‌டியே கொஞ்ச‌ம் ந‌ட‌க்கும் போது ஹெல்மெட் விக்குற‌ க‌டைய‌ பாத்தா, தீபாவ‌ளி நேர‌த்து ச‌ர‌வ‌ணா ஸ்டோர்ஸ் க‌ண‌க்கா கூட்ட‌ம் அள்ளுது, ச‌ரி ந‌ம்ம‌ ப‌ய‌லுவ‌ எப்ப‌வுமே க‌டைசி நேர‌த்துல‌தான் வேலை செய்வானுங்கனு விட்டுட்டோம். ச‌ரி இப்ப‌வாவ‌து திருந்துனாங்க‌ளேன்னு, இத‌ கொஞ்சா நாளைக்கி செஞ்சிப்புட்டு அப்புற‌ம் ம‌றந்துறாம‌ இருந்தா ச‌ரிதான்.

Wednesday, May 23, 2007

அன்புத்தோழி 4

நாம் சண்டைப்போட்டு
பேசாமலிருக்கும்
ஒவ்வொரு முறையும்
அர்த்தமற்று போய் விடுகிறது
நம் இத்தனை வருட‌
புரிதலும் நட்பும்

------

நான் தேடித் தேடி
பதில் தெரியாமல்
தொலைந்து போவது
உன்னுடைய அர்த்தம் பொதிந்த
அந்த "ஒண்ணுமில்லை"
என்ற வார்த்தையில் தான்

Wednesday, May 02, 2007

அன்புத்தோழி 3


ஒன்றாகச் சேர்ந்து
ஊர் சுற்றுவதும்
மடல் முடிக்கும்போது
"With Lots of Love" என்று முடிப்பதும்
சந்தித்துக் கொள்ளும் போது
கட்டிப்பிடிப்பதும்
நட்பிலும் நடக்கும் என்றால்
நம்ப மறுக்கிறார்களே ஏன்

நாங்கள் நம்புகிறோம்

விடியலின் வேர்கள்
முளைவிட்ட சமயத்தில்
இருட்டின் இரும்புக்கரங்கள்
நம்மைச் சிறைப்பிடித்தன‌


பழமைவாதிகளின்
புளித்துப்போன சித்தாந்தங்கள்
நம் இளமைவேகத்திற்கு
அணை போட்டுவிட்டன‌


அவர்களின் பழைய பல்லவிகள்
நம் தோழிகளின்
சிற‌குகளை ஒடித்துப்போட்டன‌


ஊழ‌லின் விழுதுக‌ள்
ந‌ம் எதிர்கால‌த்தின்
க‌ழுத்தை நெரிக்கின்ற‌ன‌


ல‌ஞ்ச‌த்தின் நாச‌க்க‌ர‌ங்க‌ள்
ந‌ம் க‌ன‌வுக‌ளை
க‌ல்ல‌றைக்கு அனுப்புகின்ற‌ன


இந்த‌ப்பிழைக‌ளுக்கு
நாம் திருத்த‌ங்க‌ளாவோம்


ப‌ழ‌மைவாதிக‌ளே கேளுங்க‌ள்

ஒடிக்க‌ப்ப‌ட்ட‌
எங்க‌ளின் சிற‌குக‌ளை
ஒட்ட‌வைக்கும் க‌லையை
நாங்க‌ள் க‌ற்றுக்கொண்டிருக்கிறோம்

தடுப்பணைகளை
தகர்த்தெரியும் வேக‌த்தை
உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்



எங்க‌ளுக்குத் தெரியும்
இந்த‌ப் ப‌ழ‌மைவாதிக‌ள்
த‌ங்க‌ள் அனுப‌வ‌த்தைச் சொல்லி
எங்க‌ளை ந‌சுக்கி விடுவார்க‌ள் என்று

எங்க‌ளுக்குத் தெரியும்
ம‌ல‌ர்மாலைக‌ள் அல்ல‌
முள்கிரீட‌ம் தான்
எங்க‌ளுக்கு அணிவிக்க‌ப்ப‌டும் என்று

எங்க‌ளுக்குத் தெரியும்
நாங்க‌ள் சாதியின் பெய‌ராலும்
ம‌த‌த்தின் பெய‌ராலும்
ஒடுக்க‌ப்ப‌டுவோம் என்று

ஆனால்
நாங்க‌ள் உண‌ர்ந்திருக்கிறோம்
இந்த‌ ச‌மூக‌ மாற்ற‌த்திற்கான‌
க‌ருவிக‌ள் நாங்க‌ள் தான் என்று

நாங்க‌ள் ந‌ம்புகிறோம்
இருட்டின் பிடியிலிருந்து
இந்த‌ச் ச‌முதாய‌த்திற்கு
வெளிச்ச‌த்தின் சிற‌குக‌ளை
கொடுக்க‌ முடியும் என்று

சாதிய‌ வேர்க‌ளை அறுத்தெரிந்து
ச‌ம‌த்துவ‌ம் ப‌டைக்க‌முடியும் என்று
ல‌ஞ்ச‌த்தின் செய‌ற்கை சுவாச‌த்தை
நிறுத்தி புத்துல‌கு காண‌முடியும் என்று

நாங்க‌ள் ந‌ம்புகிறோம்

Monday, April 23, 2007

அன்புத் தோழி 2

எங்கேயோ தூரமாய்

எங்கேயோ தூரமாய்
இருந்து கொண்டு
மின்னஞ்சல்களில்
ஹாய் சொல்லிப்
பழகி விட்டோம்

"ஹாய்"க்கும் "பை"க்கும்

நடுவில் சிக்கித்
திணருகிறது
நம் வாழ்வு

நாம் பேசிய பேச்சுக்கள்

மட்டுமே நம் நினைவுகளின்
எச்சமாய் என்
செவிப்பறைகளில் மோதுகிறது

அலுவலக சிற்றுண்டிச்சாலையும்,

வரவேற்பறையும், பழச்சாறுக்கடையும்
"காப்" பயணங்களும்,
ஸ்பென்சர் பிளாசாவும்
கவிதைகளும் அடிக்கடி
உன்னை நினைவுபடுத்துகின்றன‌

சீக்கிரம் வா உன்னைச் சந்திக்கவேண்டும்

காதலியின் பிரிவுகூட‌

என்னை இப்படி
வாட்டியதில்லையடி
என் தோழி...

Saturday, March 24, 2007

இந்தியா படுதோல்வி

இந்த உலகக்கோப்பை இந்தியாவுக்குத் தான் அப்படீன்னு எல்லோரும் சொன்னப்ப நானும் ரொம்ப சந்தோசப்பட்டேன்... ஒரு சராசரி கிரிக்கெட் ரசிகனா இல்லாம கொஞ்சம் நம்ம அணியோட பலத்தையும், பலவீனத்தையும் அலசி பாத்தப்போ கொஞ்சம் யோசிக்க ஆரம்பிச்சேன், நம்ம அணி தேறுமான்னு சந்தேகம் வந்துச்சு... ஆனா குறைந்தபட்சம் அரையிறுத்திக்காவது வருவாங்கன்னு நினைத்தேன். ஆனா நம்ம பசங்க வழக்கம் போல கவுத்துட்டாங்க. முதல்ல பங்களாதேஷ் கிட்ட தோத்தப்ப சரி நம்ம ஆளுங்க கொஞ்சம் அதீத நம்பிக்கையோட ஆடி கவுந்துட்டாங்க பரவயில்லை அடுத்த ஆட்டங்களில் பட்டைய கிளப்புவாங்கண்ணு பாத்தேன் நினைச்ச மாதிரி பிர்முடாவை காலி பண்ணினாங்க ஆனா அந்த ஆட்டத்துலயும் நம்ம பந்துவீச்சு சொதப்பலாவே இருந்துச்சு... சரி அடுத்து இலங்கையையும் காலிப் பண்ணிட்டு அடுத்த சுற்றுக்கு போவாங்கன்னு பாத்தா நேத்து பெருசா நமக்கு நாமம் போட்டுட்டு போய்ட்டாங்க...

யாரிடம் தவறுள்ளது? கிரிக்கெட் வாரியத்தில் ஆரம்பித்து, பயிற்சியாளர், அணித்தலைவர், விளம்பரத்தில் மட்டுமே நன்றாக விளையாடும் வீரர்கள்ன்னு பட்டியுல் நீளுது... ஆனா முக்கியமான காரணம் என்ன? பணம்... அவர்களுக்கு கொட்டிக்கொடுக்கப்படும் பணம்... விளையாடினாலும், இல்லாவிட்டாலும், அவர்களுக்கு விளம்பரம் மூலம் கிடைக்கும் பணம்... 10 ஆட்ட‌ங்க‌ளில் ஒழுங்காக‌ விளையாடினால் அவ‌ரை ர‌சிக‌ர்க‌ள் த‌லையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்க‌ள். பிற‌கென்ன ப‌ண‌ம் கொட்டுகிற‌து....

விளையாடும் போது வெற்றி பெற‌வேண்டுமென்ற‌ வெறி இருக்க‌ வேண்டும்... ந‌ம் அணி வீர‌ர்க‌ளுக்கு அது சுத்த‌மாக‌ கிடையாது... ச‌ச்சின் போன்ற‌ வீர‌ர் க‌ள‌மிற‌ங்கின‌ல் எதிர‌ணி வீர‌ர்க‌ளுக்கு ப‌ய‌ம் ஏற்ப‌ட‌ வேணும் அந்த‌ அள‌வுக்கு அவ‌ர் விளையாட‌ வேண்டும். ஆனால் அவ‌ர் அப்ப‌டி விளையாடி ப‌ல‌ மாத‌ங்க‌ளாகி விட்ட‌ன‌... யாரைக் குறை சொல்ல‌?

ஆனால் இது போன்ற‌ ஒரு தோல்வி தேவைதான்... இனிமேலாவ‌து ந‌ம்முடைய‌ க‌வ‌ன‌ம் ஹாக்கி, கால்ப‌ந்து போன்ற‌ விளையாட்டுக‌ளில் போனால் ப‌ர‌வாயில்லை...

Tuesday, January 16, 2007

புத்தகக் கண்காட்சி

இந்த வருடம் தான் முதல் முறையாக சென்னை புத்தக கண்காட்சிக்கு சென்றேன். மிக அருமை... எங்க ஊர்ல புத்தக கண்காட்சினு சொல்லிட்டு ஒரு சின்ன இடத்துல வச்சிருப்பாங்க... இங்க வந்து பார்த்தா.. அம்மாடியோவ்... எவ்வளோ பெருசு... எத்தனை புத்தகங்கள்... ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு, நல்ல வேளை எப்போதும் காலியாகவே இருக்கும் இன்னுடைய பர்ஸிலும், பாக்கெட்டிலும் பணம் இருந்தது( இந்த புத்தக கண்காட்சிக்காகவே இந்த மாச சம்பளத்த செலவு பண்ணாம வச்சிருந்தோம்ல..), போய் நிறைய புத்தகங்கள் வாங்கினேன், சே குவேரா வரலாரு முதல், தபூ சங்கர் கவிதைகள் வரை நிறைய வாங்கினேன்... மனசுக்கு கொஞ்சம் திருப்தி...

புத்த‌க‌ க‌ண்காட்சி வாச‌லுக்குள் நுழையும் போது விழிய‌னை ச‌ன்திக்க‌ வேண்டும் என்ற‌ எண்ண‌த்தோடு தான் சென்றேன்... ஆனால் அங்கிருந்த‌ புத்த‌க‌ங்க‌ளைப் பார்த்த‌வுட‌ன், என்னையும் ம‌றந்தேன், விழிய‌னையும் ம‌றந்தேன்.. வீட்டுக்கு வந்த‌வுட‌ன் தான் என‌க்கு விழிய‌ன் ஞாப‌க‌மே வ‌ந்த‌து...

அப்புறம் எழுத்தாளர் ஞாநி அவ‌ர்களைச் சந்தித்து உரையாடினேன், தபூ சங்கரை சந்தித்தேன், ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்களையும் சந்தித்தேன்... மறக்க முடியாத நாள் அது... மீண்டும் ஒருமுறை செல்ல வேண்டும்...

Friday, January 05, 2007

காகம்


காகம்


மௌனம்
கலைக்கிறது காகம்
அதற்குத் தெரியுமா
நம் மௌன அஞ்சலியின்
அர்த்தம்

Friday, December 15, 2006

நாம செய்யுறது சரியா?

எதற்கெடுத்தாலும் அரசாங்கம் சரியில்ல, அரசாங்கம் சரியில்லனு சொல்றோமே, நாம எந்தெந்த விதத்துல சரியா இருக்கோம்னு நாம கொஞ்சம் நினைச்சு பார்த்ததுண்டா? பொது இடத்துல குப்பை போடுறது( பேருந்து பயணச்சீட்டாக இருந்தாலும் அதுவும் குப்பை தான்), எச்சில் துப்புறது ஆரம்பிச்சு.... பொது பிரச்சனை வரைக்கும் எதுல நாம ஒழுங்கா இருக்கோம்.

நம்மகிட்ட இருக்குற ஒருசில பிரச்சனைகளையும் கொஞ்சம் பார்ப்போமே..


நாமெல்லாம் எந்தப்பிரச்சனையிலும் பங்கெடுக்க முயற்சிப்பதில்லை, சமூக பிரச்சனைகளை நினைத்து கவிதை எழுதவும் கட்டுரை எழுதவும் தயாராய் இருக்கும் நாம் தெருவில் இறங்கி மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க தயாரா? ரொம்ப வேண்டாங்க, இப்போ அணு ஆயுத ஒப்பந்தம் அமெரிக்காகிட்ட போட்டோமே நம்ம நாட்டின் எதிர்கால அணுத் திட்டங்களை அடகு வைக்கிறோம், நம்மள்ல எத்த‌னை பேருக்கு அது பத்தின முழு விவரமும் தெரியும், மேற்கு வங்காளத்துல நடந்துகிட்டு இருக்குற அந்த சிங்கூர் பிரச்சனை எத்துனை பேருக்கு தெரியும், கொஞ்ச நாளைக்கு முன்னாடி பேசினோமே பெரியார் அணை விவகாரம் அது என்ன ஆச்சுன்னு யாராவது கவலைப்பட்டோமா?, நர்மதை அணை விவகாரம் பற்றி யாராவது சிந்திக்கிறோமா?, நதிகளை இணைக்கனும்னு பெருசா பேட்டி கொடுக்குற அரசியல்வாதிகளுக்கு அதனால் எத்தனை கோடி பேர் வீடுகளை இழந்து, வாழ்வியல் ஆதாரங்களை இழந்து நிற்பார்கள் என்ற கணக்கு தெரியுமா? சரி ஓட்டுப் பொறுக்கும் அரசியல்வாதிகளுக்கு தெரிய வேண்டாம், படித்த நம‌க்காவது தெரியுமா?, க‌ழிப்பிட‌வ‌ச‌தி கூட‌ இல்லாம‌ல் தமிழகத்தில் 70 இல‌ட்ச‌ம் குடும்ப‌ங்க‌ள் இருப்ப‌தாக‌ புள்ளி விவ‌ர‌ங்க‌ள் சொல்லுது ஆனா ந‌ம்ம‌ அர‌சாங்க‌ம் அத‌ற்கு முய‌ற்சி செய்யவில்லை ஆனா க‌ல‌ர் டி.வி கொடுக்குது, நாம‌ அதைப‌ற்றி க‌வ‌லைப் ப‌ட்டிருப்போமா? ப‌டிக்க‌ கூட‌ வ‌ச‌தி இல்லாம‌ எத்த‌னையோ சிறார்க‌ள் இருக்காங்க‌ அவுங்க‌ வாழ்க்கைக்கு என்ன‌ ப‌ண்ண‌லாம்னு யோசிச்சிருப்போமா?...

ரொம்ப கூலா அரசியல் ஒரு சாக்கடைனு சொல்றோம் சரி அதை கொஞ்சம் சுத்தப்படுத்ததான் முயற்சிக்க மாட்டோம், குறைந்தபட்சம் வார்டு கவுன்சிலர்ல நம்முடைய முயற்சிய தொடங்கலாமே... அத செய்ய மாட்டோம், சரி சாதிகள் பற்றி, அதன் கொடுமை பற்றி பக்கம் பக்கமா வசனம் பேசுறோம், கவிதை எழுதுறோம் ஆனா நம்முடைய விண்ணப்பப்படிவங்கள்ல இன்ன சாதின்னு சரியா எழுதுறோம்... ரொம்ப சரியா நம்முடைய சாதியில மட்டும் தான் திருமணம் பண்ணுவோம்....


ஏங்க‌ நாம‌ க‌ண்ணுக்கு முன்னாடி இத்த‌னை கொடுமைக‌ள் ந‌ட‌ந்தாலும், நம்மளே இத்தனை தவறுகள் செய்தாலும் அதை ப‌ற்றியெல்லாம் க‌வ‌லை ப‌டாம‌ல், மெகாத் தொட‌ர்க‌ளிலும் , சினிமாவிலும், வெட்டி அர‌ட்டையிலும் ந‌ம்முடைய‌ ப‌ய‌ண‌ம் சிற‌ப்பா போய்கிட்டு இருக்கு....

நாம செய்யுறது சரியா?

Thursday, December 07, 2006

அன்புத் தோழி 1

முகவரி கேட்டு
வந்தாய்
முகம் தெரியா
இருவரும்
நண்பர்களானோம்

------

உன் திருமணம்
முடிந்தபின்
என்றாவது ஒரு நாள்
உன்னைச் சந்திப்பேன்
என்ற நம்பிக்கையில் தான்
அன்று வீடு திரும்பினேன்

-------

உன் பிறந்தநாளின்
போது நாம்
பேசிக் கொண்டதை
நினைத்து
மூன்று நாட்களாய்
தனியே சிரிக்கிறேன்
பைத்தியக்காரனைப் போல்

சொல்லாமல் விட்ட காதல் 1

திட்டமிட்டுச் செய்யாமல்
திடீர் தாக்குதல்
நடத்தி என்னைச்
சிறைப்பிடித்தாய்

போர்க்கைதிகளை
நியாயமாக நடத்த
சட்டம் உண்டு
ஆனால் உந்தன்
மனக்கைதி எனக்கு
என்ன உண்டு

தினமும் உனக்காகவே
அந்தச் சாலையில்
காத்துக் கொண்டிருக்கிறேன்

மக்களை நிராகரிக்கும்
அரசியல்வாதி போல
என்னை நிராகரித்துச் செல்கிறாய்

சூறாவளியில்
சிக்கிய பொருள்போல்
ஆனது என் நிலைமை

மீண்டும் மீண்டும்
உன்னை நோக்கி
படையெடுத்துக்
கொண்டிருக்கிறேன்
வெற்றி பெறுவேன்
என்ற நம்பிக்கையோடு

------------------------

பயணம்

தொடர்ந்து
பயணிக்கிறேன்
என்றாவது ஒருநாள்
உன்னைச் சந்தித்து
விடுவேன் என்ற
நம்பிக்கையில்

இந்தியாவில் கல்வி முறை

இந்தியாவில் கல்விமுறை எப்படி உள்ளது என்ற கேள்விக்கு நம்மில் சிலர் மோசமான கல்விமுறை என்றும் பல‌ர் நல்ல கல்விமுறை என்றும் குறிப்பிடுவர். நான் தற்போது உள்ள பாட திட்டங்களைப் பற்றி பேச விரும்பவில்லை, அவை மோசம் தான் இருந்தாலும் நான் அதையும் தாண்டி உள்ள சில விஷ‌யங்களை பற்றி பேச விரும்புகிறேன்.

முத‌லில் ந‌ம் நாட்டில் எத்த‌னை வ‌கையான‌ க‌ல்விமுறை உள்ள‌து என்ப‌து ப‌ற்றி நாம் யோசிக்க‌ வேண்டும். 1) International syllabus based, 2) CBSE, 3) Matric மற்றும் 4) StateBoard.

ஒரே நாட்டில் வாழும் மக்களுக்கு, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று எல்லொரையும் ஒரே த‌ட்டில் வைத்து பார்ப்பதாக சொல்லும் ஒரு நாட்டில் ஏன் இப்படி விதவிதமான கல்விமுறைகள்.

பணம் இருப்பவனுக்கு ஒரு மாதிரியான கல்வி, பணம் இல்லாதவனுக்கு ஒரு மாதிரியான கல்வி. எதற்கெடுத்தாலும் மேலை நாட்டை உதாரணம் காட்டுபவர்கள் இதற்கும் உதாரணம் காட்டவேண்டியது தானே? அங்கே கல்வி அரசாங்கத்தின் கைகளில், இங்கு போல் அங்கு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு வியாபாரம் ஆக்கப்படவில்லை, அனைவருக்கும் தரமான, சமமான கல்வி அளிக்கப்படுகிறது. சனாதிபதியின் மகளும், செருப்பு தைப்பவனின் மகனும் ஒன்றாகத்தான் படிக்கிறார்கள். அங்கே வேற்றுமை பேணப்படுவதில்லை கல்வி விசயத்தில்.

இங்கே மட்டும் தான் கல்வி அரசியலாகவும், வியாபாரமாகவும் ஆக்கப்படுகிறது. பணம் இருப்பவன் நல்ல தரம் வாய்ந்த பள்ளிக்கூடத்தில், சகல வசதிகளோடும் கல்வி பயில முடியும், பணம் இல்லாதவனுக்கு தான் அரசு ஒதுக்கி உள்ளதே ஓராசிரியர் மற்றும் ஈராசிரியர் பள்ளிகள். ஆய்வுக்கூடங்களையே பார்க்காமல் பன்னிரென்டாம் வகுப்பு முடிக்கும் மாணாக்கரின் தரமும், ஏழாம்,எட்டாம் வகுப்புகளிலேயே ஆய்வுக்கூடங்களில் ஆய்வுகள் செய்து பார்த்து பன்னிரென்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவனின் தரமும் ஒன்றாக மதிப்பிடப்படுவது நம் நாட்டில் தான்.

பன்னிரென்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெறும் மாணாக்கர்கள் மருத்துவத்தையும், பொறியியலையும் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் அர‌சாங்கம் ஏன் அவ‌ர்க‌ளை ஆசிரிய‌ர்க‌ளாக‌ மாறுவ‌த‌ற்கு ஆசிரிய‌ர் ப‌யிற்சிக்கு அனுப்ப‌க்கூடாது. இங்கே யார் ஆசிரிய‌ர்க‌ளாக‌ வ‌ருகின்ற‌ன‌ர்? ம‌திப்பெண் குறைவாக‌ எடுத்து இள‌ங்க‌லை ப‌டிக்க‌ம் மாணாக்க‌ர்க‌ள், அவ‌ர்க‌ளிலும் ப‌ல‌ர் மேற்ப‌டிப்பு, பெரிய‌ வேலை என்றெல்லாம் போய்விட‌ மீத‌ம் உள்ள‌வ‌ர்க‌ள் தானே ஆசிரிய‌ர்க‌ளாக‌ வ‌ருகின்ற‌ன‌ர்.
ந‌ம் நாட்டில் மாற்ற‌த்தைக் கொண்டுவ‌ர‌ விரும்பினால், முத‌லில், க‌ல்வியில் மாற்ற‌ம் கொண்டு வ‌ருவோம்.

டிசம்பர் - 6

டிசம்பர் - 6

பாவிகளே
எதை இடித்து
எதை கட்டினீர்கள்

நீங்கள் இடித்தது
கட்டடம் என்றால்
மீண்டும் கட்டியிருக்கலாம்
ஆனால் நீங்கள் இடித்தது
மக்களின் மனம் அல்லவா?

உங்களால்
இங்கு சிந்தப்பட்டது
பலரின் கண்ணீர்
மட்டும் அல்ல
சிலரின்
இரத்தமும் தான்

உங்களால் கொல்லப்படுவது
மனித உயிர்கள்
மட்டுமல்ல
மனித நேயமும் தான்

இங்கே அறுபட்டது
பலரின் குடல்கள்
மட்டுமல்ல
எங்களின் உறவுகளும் தான்

போதும் நிறுத்துங்கள்

இனியும் மதத்தின்
பெயரால்
எங்கள் சகோதரர்கள்
அனாதைகளாய்
அகதிகளாய்
அலைய வேண்டாம்

விழிகளில் ஈரத்தையும்
மனதில் பாரத்தையும்
சுமந்து நிற்க வேண்டாம்

போதும் நிறுத்துங்கள்...

Wednesday, December 06, 2006

சொல்லாமல் விட்ட காதல்

ஒருமுறையாவது
உன்னிடம்
சொல்லிவிட வேண்டும்
என்றுதான்
நினைக்கிறேன்
சொல்லாமல் விட்ட‌
என் காதலை...

-------------

ஒவ்வொரு முறையும்
உன்னைப் பார்பதற்காகவே
கடந்து போகிறேன்
வழக்கம் போல்
நீ இல்லாமல்
வெறுமையாய் இருக்கிறது
உன் வீடு

---------------

அவ‌ள் என்
கவிதைக்கு
கையும் காலும்
முளைத்ததைப்
போல் இருந்தாள்

--------------

களைத்துப் போய்
வரும் எனக்கு
நெற்றி வியர்வை
துடைத்து
ஒரு முத்தம்
தந்துவிட்டு
போனாலென்ன‌

நம் தேசம்

தீர்ப்பு

இங்கே தீர்ப்புகள்
முடிவு செய்யப்பட்ட
பின்பே
வழக்குகள்
விசாரிக்கப்படுவதால்
உண்மை இங்கே
பர்தா போட்டுக் கொள்கிறது

சுதந்திர இந்தியா?


சுதந்திர இந்தியாவாம்
யார் சொன்னது?

இங்கே

கனவுகள் கூட‌
திருடப்படுகின்றன‌
மொட்டுக்க‌ள் கூட‌
க‌ருகி விடுகின்ற‌ன‌

எங்க‌ள் க‌ண்ணீர்
முத‌லாளிக‌ளுக்கு
ப‌ன்னீராய் தெளிக்க‌ப்ப‌டுகிற‌து.

நாங்க‌ள்
என்றும் அக‌திக‌ளாக‌
எங்க‌ள் நாட்டிலேயே

இங்கே

ஏழைக‌ளின் ஆடைக‌ளுக்கே
சுதந்திரம் கொடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து

எங்க‌ள் சிதைக்கு
தீ மூட்டி விட்டு
சுகமாய் குளிர்காய்கிறார்க‌ள்
எங்க‌ள்
அர‌சிய‌ல் த‌லைவ‌ர்க‌ள்

உறைப‌னி கூட‌
கொழுந்துவிட்டெரியும்
எங்க‌ள் அவ‌ல‌ங்க‌ளை
கேட்டால்

ஆனால்
இந்த அவலங்களுக்கு
நாங்கள் தான்
காரண கர்த்தாக்கள்

சாதிகள் கண்டுபிடித்து
மோதல்கள் கொண்டோம்
சமய‌ங்கள் பெயரைச் சொல்லி
ச‌ழக்குகள் கொண்டோம்

ம‌த‌த்தின் பெயரால்
ம‌னித‌நேய‌ம் தொலைத்தோம்
சாதியின் பெய‌ரால்
ச‌ண்டையிட்டுக் கொண்டோம்

ம‌த‌த்திற்காக‌
ச‌ண்டையிடும் நாம்
என்று ம‌னித‌நேய‌க்
கொடி பிடிக்க‌ப்போகிறோம்?
சாதிக்காக‌
ச‌ண்டையிடும் நாம்
என்று சாதிக்க‌ப்போகிறோம்

இந்தியத் தாயே
எங்களுக்கு நீ
மகாத்மாக்களை தர வேண்டாம்
நல்ல மனிதனையாவது தா.....

------

நெருப்பு

இந்த‌ச்
சமூக அவலங்களை
சுட்டுப் பொசுக்க‌
கொஞ்சம்
நெருப்பு வேண்டும்
என் விழிகளுக்கு