Wednesday, November 08, 2017

பொருளாதார சீரழிப்பு நாள் - நவம்பர் 8


அப்போது நான் நெல்லூரில் அலுவல் நிமித்தமாக சென்றிருந்தேன். என்னோடு என் அலுவல பணியாளர்கள் இருவரும் வந்திருந்தனர். இரவு உணவருந்திவிட்டு சாவகாசமாக அறையில் பேசிக்கொண்டிருந்தோம். பேசி முடித்துவிட்டு உறங்கப் போகலாம் அன்று நினைக்கையில் அலைப்பேசியில் குறுஞ்செய்திகள் வந்திருக்கிறதா என்று பார்க்கலாம் என்று எடுத்தால் வாட்ஸ் அப்பில் ஏகப்பட்ட தகவல்கள், எல்லாம் ஒரே விஷயத்தைப் பேசின. மோடி ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து விட்டார். அடுத்த இரண்டு நாட்களுக்கு வங்கிகள், ஏடிஎம் கள் செயல்படாது.

பர்ஸை திறந்து பார்த்தால் கையில் இருப்பது வெறும் முன்னூறு ரூபாய்கள். எங்கள் மூவருக்குமான உணவுக்கான பணம் அது. அடுத்து ஏடிஎம் எப்போது திறக்குமோ அது வரை அந்த முன்னூறு ரூபாய்களை மட்டுமே வைத்துக்கொண்டு உணவருந்த வேண்டும். தெரியாத மொழி, பழக்கமில்லாத மனிதர்கள், புதிய இடம் என திக்குத் தெரியாமல் நின்றிருந்தோம். அடுத்த ஒரு மாதம் உணவுக்கும், பயணத்துக்கும் பணத்துக்காக ஏடிஎம். ஏடிஎம்மாக அலைந்தது, பட்டினி கிடந்தது எல்லாம் சொல்லி மாளாது.

கக்கத்தில் காசு வைத்துக் கொண்டு என்ன வேண்டுமானாலும் ஊருக்கு உபதேசிக்கலாம், ஆனால் தெருவில் அலைந்தால் தான் உண்மை புரியும். அந்த ஒரு மாதம் நான் சந்தித்த மனிதர்கள், அவர்களின் துன்பங்கள், மோடிக்கும் இந்த அரசுக்கும் விட்ட சாபங்கள், எதுவுமே சாதாரணமாக கடந்து போகக்கூடியது அல்ல.

Saturday, April 08, 2017

சுவை - HMT, ஆர்.எஸ். புரம், கோயம்புத்தூர்.

கோவையின் சிறப்பம்சங்களில் ஒன்று HMR - H முத்து ராவுத்தர் பிரியாணிக் கடை. அவர்களின் ஆரம்பக் கடை ஆத்துப்பாலம் பகுதியில் இருந்தாலும் இன்று ஆர். எஸ்.புரம் பகுதிக்கே போக முடிந்தது. உட்கார இடம் கிடைக்காமல் காத்திருந்து பிறகே இடம் கிடைத்தது. 

மெனு கார்டை பார்க்கும் வரை பர்ஸுக்கு இது ஏற்ற இடம் தானா என்று ஒரு புறம் மனசு கேட்டுக்கொண்டே இருந்தது. 




இதோ அந்த மெனு கார்ட். தம்மாத்தூண்டு பிரியாணிய கொண்டு வந்து வச்சு 300 ரூபாய் கேட்கும் கடைகளுக்கு மத்தியில் இந்தக் கடை மிக அருமை. என்னோடு வந்தவருக்கு பாசுமதி பிரியாணி பிடிக்கும், எனக்கு ஜீரக சம்பா தான். அவர் பிரியாணியைப் பாத்ததுமே என்ன இது எனக்கு வேணாம் பாஸ், செம்ம பசி இப்படி ஆச்சே என புலம்பிய படியே பிரியாணியை வாயில் வைத்தவர். ஒரு வார்த்தை பேச வில்லை பிறகு. அப்படி ஒரு சுவை.

ரொம்ப நாள் கழிச்சு அட்டகாசமான பிரியாணி. பீப் பிரியாணிக்கு தான் HMT ரொம்ப பிரபலம். ஆனா இந்த மெனு கார்டில் பீப் பிரியாணி இடம் பெறவில்லை. எனக்கு பெரிய ஏமாற்றம். வேலை பார்ப்பவரிடம் பீப் பிரியாணி இல்லையா எனக் கேட்டதும் இருக்கே எனக் கொண்டு வந்தார். ஏன் இடம் பெறவில்லை என்பது பெரிதாக இன்னும் என்னை உறுத்திக்கொண்டே இருக்கிறது.

ஒரு 10 நிமிட தாமதத்தை பொறுத்துக் கொள்ள நீங்கள் தயாராக இருந்தால் சுவையான பிரியாணி நியாயமான விலையில் உங்களுக்கு கிடைக்கும்.

கோவை வரும் உணவுப் பிரியர்கள் தவற விடக்கூடாத இடம்....

Saturday, March 29, 2014

நான்....

பேஸ்புக் வந்ததில் இருந்து பெரிதாக ஒன்றும் வலைப்பக்கத்தில் எழுதுவது இல்லை.. அவ்வப்போது தோன்றும் கருத்துகளை அதிலேயே பதிந்து விடுவதால் வலைப்பக்கத்தில் எழுதமுடிவதில்லை.. ஆனாலும் மனதின் ஓரத்தில் வலைப்பக்கத்தில் எழுதவேண்டும் என்ற ஆவல் இருந்து கொண்டே இருக்கிறது... மறுபடியும் எழுதலாமே என்ற எண்ணத்தில் தான் இப்போது இங்கே....

சமூகத்திற்கு கருத்து சொல்ல நான் பெரிதாக எதையும் சாதித்துவிட வில்லை. மாதா மாதம் குடும்பம் நடத்த அல்லல்படும், பெரிதாக கனவுகளைச் சுமந்து ஓடும் சாதாரண common man நான்... அரசியல் நிகழ்வுகளும் நான் தினம் தினம் சந்திக்கும் மனிதர்கள் இந்த தேசத்தின் மீதும், மனிதர்கள் மீதான நம்பிக்கைகளையும் சிதைத்துக் கொண்டே இருக்கின்றன...

அரசியல், சமூகம், பொருளாதாரம், ஏற்றத்தாழ்வுகள், சாதிய அடக்குமுறை சார்ந்த மனப்பான்மை, பெண் மீதான psychological attack போன்றவை இந்த வாழ்க்கையின் மீதான அவநம்பிக்கைகளையும்,  எதிர்காலம் சார்ந்த பயத்தையும் தோற்றுவிக்கின்றன... அவ்வப்போது அப்படியெல்லாம் இல்லை.. இதுவும் கடந்து போகும். மாற்றம் ஒன்றே மாறாதது.. எல்லாம் மாறும் என்ற நினைப்பிலேயே கடந்து செல்கிறேன்... மாற்றம் வருமா?

Tuesday, October 30, 2012

The Happening


The Happening














வழக்கமா நான் இந்த திரில்லர் படங்கள் பார்ப்பது இல்லை... ஒரே மாதிரியான காட்சி அமைப்பு எளிதில் யூகிக்கக் கூடிய திரைக்கதை போன்றவை தான் காரணங்கள்... அதிலும் குறிப்பாக பாம்பு, முதலை, சுறா தாக்குவது மாதிரியான படங்கள் அலர்ஜி... அவர்கள் சீரியஸாக காட்ட நினைக்கும் காட்சிகளை கொட்டாவி விட்டுக்கொண்டு பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

இன்று பார்த்த The Happening மனோஜ் நைட் ஷியாமளன் இயக்கிய படம், எனக்கு பிடித்த Mark Wahlberg நடித்திருக்கிறார். முதல் காட்சி படத்தின் மீதான ஆர்வத்தை டக்கென்று எகிற வைத்துவிட்டது. சிலபல காட்சிகள் யூகிக்கக் கூடியதாக இருந்தாலும், அடுத்து என்னவென்று ஒரு ஆர்வத்தை உருவாக்கி இருந்தது படம். ஒரு காட்சி அப்படியே டக்கென்று பயமுறுத்திவிட்டது... பாக்கலாம்.. பார்க்க வேண்டிய திரைப்படம் என்று சொல்ல முடியாவிட்டாலும். பார்க்கலாம்...

இந்தப் படத்தையும் நான் http://www.yify-torrents.com/ ல் இருந்து தான் தரவிறக்கம் செய்து பார்த்தேன்....


Wednesday, October 24, 2012

The Vow

The Vow...

இப்போ எல்லாம் படங்களை http://www.yify-torrents.com/ தான் தரவிறக்கம் செய்கிறேன். கிடைக்கும் torrents எல்லாமே நல்ல தெளிவா, subtitles கூட கிடைக்குது. எக்கச்சக்கமா படங்களை தரவிறக்கம் செஞ்சு பாக்கமலேயே இருந்தேன். இப்போ எல்லாம் Action, Science fiction படங்கள் தான் அதிகமா பாக்குறேன்.. அதனால இந்தப்படத்தை தரவிறக்கம் செஞ்சு அப்படியே வச்சிருந்தேன்.. லேசா ஓட்டிப் பாக்கும் போது Romantic Movie மாதிரி இருந்துச்சு.. நான் எப்போதுமே படங்களை தனியா இருக்கும் போது தான் பார்ப்பேன். இல்லைன்னா நம்மளை நிம்மதியா படம் பாக்கவே விட மாத்தானுங்க... அப்போதான் வந்து அது என்ன, இது என்ன இம்சை பண்ணுவானுங்க...

இந்தப்படத்தின் ஹீரோ Channing Tatum தான் நான் படம் பார்க்க முதல் காரணம், இவரை எனக்கு G.I. Joe, Dear John படங்களிலிருந்து ரொம்ப பிடிக்கும்.. இதில் ரொம்ப இயல்பான நடிப்பு. நான் ஆங்கிலப்படங்களைப் பார்ப்பதே அதனின் வசனங்களுக்காத்தான்.. ரொம்ப கூர்மையான வசனங்கள். படத்தின் எந்தவொரு இடத்திலும் போர் அடிப்பது போல் உணர்வே ஏற்படவில்லை.. அப்படி ஏற்பட்டால் உங்களுக்கு வயசாகிடுச்சுன்னு அர்த்தம்...

படத்தோட கதை, ஹீரோ ஹீரோயின் கணவன் மனைவி,  இருவரும் காரில் பயணிக்கும் போது ஏற்படும் விபத்தில் மனைவிக்கு கடந்த 5 வருடத்தில் நடந்த நிகழ்வுகள் மறந்து போகின்றன. கண்விழித்ததும் கணவனை யார் என்று தெரியவில்லை. தன் மனைவியை திரும்பப்பெற அந்தக் கணவன் செய்யும் முயற்சிகள் தான் படம்.. அழகான திரைக்கதை, சிறப்பான வசனங்கள்... கண்டிப்பா பார்க்க வேண்டிய படங்களில் ஒன்று...

ஆனா படம் பாக்கும் போது ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தீபாவளி படத்தின் நினைவுகள் வராமல் இல்லை...

Sunday, October 21, 2012

பெயரிடப்படாதவை - 2





நிறைய காற்று
நிறைய புழுதி
கொஞ்சம் மழை
இன்னும் கொஞ்சம் மழை
நிறைய மழை
பாவங்கள் கழுவி
ஓடும் மழை....
நிறைய மழை....

பெயரிடப்படாதவை....




கான்கிரீட் சாலைகளில்
காணாமல் போனவைகளில்
கடைசியாய்
செந்நிற மழை நீர்..

Tuesday, May 22, 2012

+2


இன்று +2 தேர்வு முடிவுகள் வெளியாயின... நாமக்கல் பகுதி மாணவர்கள் முதல் மூன்று இடங்களையும் பிடித்தனர்... இது வெற்றிச்செய்தி போல கொண்டாடப்படுகிறது, நான் நாமக்கல் வழி சேலம் செல்லும் போதெல்லாம் அங்கே புற்றீசல் போல இருக்கும் பள்ளிகளைப் பார்த்து வருத்தப்பட்டிருக்கிறேன், ராசிபுரம் அதற்கும் மேலே... அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்காக நான் அனுதாபப் படுகிறேன்... நீங்கள் மாணவர்களை, நல்ல சந்ததியினரை உருவாக்கவில்லை பள்ளிகளே... இயந்திரங்களை உருவாக்கி இருக்கிறீர்கள். பணம் கொட்டும் இயந்திரங்களை. மனிதத்தன்மையற்ற, சுயநலம் மிக்க, ஒரு சமுதாயத்தை உருவாக்குகிறீர்கள். வாழ்க உங்கள் சேவை...

Friday, December 30, 2011

Inception

தஞ்சாவூர் வந்த பின்னாடி மருத்துவ சிகிச்சை ,எப்போதும் படுக்கை வாசம், ரொம்ப போர் அடிக்கிதுன்னு படம் தரவிறக்கி பாக்கலாம்னு தோணுச்சு. சென்ற ஆண்டு வந்த திரைப்படங்களை விக்கிபீடியாவில் தேடி அதுல பிடிச்ச டைட்டில செலக்ட் பண்ணி தரவிறக்கினேன்... அப்படி கிடைச்ச படம்தான் Inception.

எனக்கு Leonardo DiCaprio வ ரொம்பவே பிடிக்கும். அவரோட Blood Diamond படம் அற்புதமா இருக்கும்... படத்துல அற்புதமான நடிப்புல பின்னி இருந்தார். நல்ல கதைக்களம் கொண்ட படங்களை தேர்வு செஉது அற்புதமாக நடிக்கும் சிறந்த நடிகர். 


மனிதனின் கனவு, அதில் விதைக்கப்படும் Idea, கனவுலகம் கட்டியமைக்கப்படுதல்ன்னு ரொம்ப சுவாரசியமான திரைக்கதை... நான்கு ஆஸ்கர் விருதுகளை வென்ற திரைப்படம்..

http://www.imdb.com/title/tt1375666/

சினிமா....

உலக சினிமா பாத்து கருத்து சொல்ற அளவுக்கு நான் பெரிய அப்பாடக்கர் எல்லாம் இல்ல... என்னோட இணைய மையத்துல இருக்கும் போது பொழுது போகலைன்னா Torrent ல Action, Adventure, Romance, Animation, Sci-Fi படங்கள் பாக்குற சாதாரண ஆள் தான் நான்...

அப்படி பாக்குற படங்களை பத்தி இங்க எழுதலாம்னு தோணுச்சு... அதை செய்ய போறேன்... thats it...

Wednesday, October 27, 2010

காலமும் நீயும்

உன்னைப்பற்றி எழும் உணர்வுகளை
காலம் தன்வசம்
உள்ளிழுத்துக் கொள்கிறது
காலத்திடம் சண்டையிடும்
திறமில்லை எனக்கு...
கடந்து செல்லும் நாட்களை
இழுத்து பிடித்து நிறுத்தும்
வலிமையில்லை எனக்கு...
மௌனித்திருக்கிறேன்
காலத்தின் கணக்குகளை
கவனித்தபடி

Friday, March 26, 2010

வார்த்தைகள்

கவிதைக்கென சேர்க்கப்படும்
வார்த்தைகள் அறுந்து
தொங்குகின்றன அந்தரத்தில்.

பிடிக்கமுடியாத வேகத்தில்
சுற்றிச் சுற்றி வருகின்றன
தனிமையில் இருக்கும் போது.

வாயிலிருந்து ஓயாமல்
வந்துவிழும் வார்த்தைகளை
மண்ணுக்குள் புதைத்து விடுகிறேன்.

அவை விருட்சங்களாக
எழுந்து நின்று
கிளைகள் எங்கும்
வார்த்தைகள்

அவையே மீண்டும்
விதைகளாய் விருட்சங்களாய்
அங்கும் இங்கும் எங்கும்
வார்த்தைகள்.

Sunday, March 21, 2010

ஐபிஎல் - ராயல் சேலஞ்சர்ஸ்

இந்த ஐபிஎல் போட்டிகளின் ஆரம்பத்தில் வழக்கம் போல் அணிகளைப் பற்றிய கருத்துக் கணிப்புகள், தொலைக்காட்சி விவாதங்கள் என பெரிதாக பிம்பம் உருவாக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்பு உள்ள அணிகள் சொதப்பிக்கொண்டு தான் இருக்கின்ற. நான் வழக்கம் போல் எனக்குப் பிடித்த அணியான ராயல் சேலஞ்சர்ஸ் அணியைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருதேன். எனக்கு டிராவிட், கும்ளே ரொம்ப பிடிக்கும் அதனால் ராயல் சேலஞ்சர்ஸ் அணி பிடிக்கும். முதல் ஐபில் தொடரில், அந்த அணியில் டிராவிட் மட்டுமே சிறப்பாக ஆடினார். அது ஒரு டெஸ்ட் தொடருக்கான அணி போலவே இருந்தது. காலிஸ், சந்தர்பால் என ஒரு டெஸ்ட் அணி என்றே வர்ணிக்கப்பட்டது. தொடரிலும் சோபிக்க வில்லை.

இரண்டாவது தொடரில் முதல் போட்டியிலேயே முதல் தொடரின் வெற்றியாளரான ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஆனால் அடுத்த 5 போட்டிகளில் வரிசையாக தோற்று என் வயித்தெரிச்சலை வாங்கிக்கட்டிக் கொண்டது. அப்போது அணியின் தலைவராக இருந்தார் கெவின் பீட்டர்சன். மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது அவர் மீது. மல்லையா அந்தக் குதிரையின் மீது அதிகப் பணமும் கட்டியிருந்தார். ஆனால் தொடர் தோல்விகள் கண்டு துவண்டிருந்த நிலையில் தனது இங்கிலாந்து அணிக்காக விளையாடச் சென்றார் பீட்டர்சன். அப்போது அணித்தலைவர் பதவி தேடி வந்து கிடைத்தது கும்ளேவுக்கு. யாருமே எதிர்பார்க்காத நிலையில் ஒரு U turn அடித்தது ராயல் சேலஞ்சர்ஸ் அணி, சிறப்பான பேட்டிங் மற்றும் அற்புதமான பந்துவீச்சு என மொத்தமான மாறியது அணி. டிமெர்வ், பிரவீன் மற்றும் அணித்தலைவர் கும்ளேவின் பந்துவீச்சு மிகச்சிறப்பாக அமைந்தது. டிராவிட், ரோஸ், ரைடர், காலீஸ், உத்தப்பா, கோலி ஆகியோரின் ஆட்டம் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்து. கடைசி வரைப் போராடினர் எல்லா ஆட்டங்களிலும். இறுதிப்போட்டி வரை சென்றது அந்த அணி. எல்லோரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இந்தத் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் கண்டெடுத்த ஒரு முக்கிய அதிரடி ஆட்டக்காரர் பாண்டே. அப்புறம் டிமெர்வ். அருமையான சுழற்பந்து வீச்சாளார் மற்றும் அடித்து ஆடக்கூடிய நபர். வெற்றி பெற்றிருக்க வேண்டிய அணி. கோப்பையை பறிகொடுத்தது டெக்கான் சார்ஜர்ஸ் அணியிடம். அந்தத் தோல்விக்கு கடைசி ஓவரில் ஒற்றை ரன்கள் எடுக்காமல் நின்றிருந்த உத்தப்பாவும் ஒரு காரணம். ராயல் சேலஞ்சர்ஸ் அணி, இந்திய மற்றும் தென்ஆப்பிரிக்க அணியின் கலவை எனலாம். காலிஸ், டிமெர்வ், பவுச்சர், ஸ்டெய்ன் என தென் ஆப்பிரிக்க வீரர்கள் அதிகம்.


மூன்றாவது தொடர் ஆரம்பத்தில் முதல் போட்டியில் கொல்கத்தை நைட் ரைடர்ஸிடம் மோசமாக தோற்றது ராயல் சேலஞ்சர்ஸ் அணி. அடுத்தது மோதியது பஞ்சாப் அணியுடன் முதலில் ஆடிய பஞ்சாப் அணி 204 ரன்கள் எடுத்தபோது முடிஞ்சு போச்சு ஆட்டம் என்று தான் நினைத்தேன். ஆனால் பாண்டே, காலிஸ் உத்தப்பா என மூன்றே பேர் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். காலிஸ் அடித்த 93, உத்தப்பாவின் அதிரடியான 51 ஆட்டத்தின் சிறப்பம்சங்கள். அடுத்து வந்த இரண்டு ஆட்டங்களிலும் சிறப்பாக விளையாடி முதல் இடத்தில் இருக்கிறது இப்போதைய தரவரிசையில். காலிஸ் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதிரடியான மற்றும் நிதானமான ஆட்டம் ஆடுகிறது அணி. இந்த முறை கோப்பை வாங்குவார்கள் என்று நினைக்கிறேன். பார்க்கலாம். இன்னும் நிறைய தூரம் கடக்க வேண்டி இருக்கிறது. எது வேண்டுமானாலும் நடக்கலாம் ஐபிஎல்லில்

Wednesday, January 20, 2010

பயணங்கள் - 4

நீண்டு
வளைந்து
நெளிந்து
தன் போக்கை
தானே தீர்மானிக்கும்
நதியின்
கரையிலே
ஒதுங்கிக் கிடக்கிறது
ஒருவனின்
சடலம்

Wednesday, January 13, 2010

பயணங்கள் - 3

பள்ளத்தாக்குகளின்
காடுகளைக் கடக்கும் போதெல்லாம்
மரங்களின் ஊடே பயணிக்கும்
ஆசை வந்து விடுகிறது
எனக்கு

கைகளைத் தேய்த்துக் கொண்டு
கன்னத்தில் வைத்து
சூடு பரப்பவும்

அண்ணாந்து பார்த்துக் கொண்டே
மரங்களைக் கிழித்து
கீழே இறங்கும்
வெளிச்சம் தரிசிக்கவும்

கைகளை விரித்து
தழுவிச் செல்லும்
காற்றை வரவேற்கவும்

பச்சை மரங்களின்
வாசனை
நுகரவும்

இன்னும் இன்னும்
நிறையவே
ஆசை

எல்லாம் அமுங்கிப் போய்
தொலைந்துவிடுகிறது
கான்கிரீட் காடுகளில்
சிக்கிக் கொள்ளும் போது....

புத்தகக் கண்காட்சியும் நானும்....

புத்தகக் கண்காட்சி. சென்னைவாசிகளுக்கு கிடைத்துக்கொண்டிருக்கும் ஒரு
மிகப்பெரிய வரப்பிரசாதம். திருச்சியில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த
காலத்தில் தான் எனக்கு புத்தக்க் கண்காட்சி என்ற விஷயமே அறிமுகம் ஆச்சு.
அப்போது புத்தகங்களை காசு கொடுத்து வாங்கிப் படிக்க முடியாது, நூலகப்
புத்தகங்கள் தான். என் கல்லூரி நூலகத்தில், இலக்கியம், அறிவியல் என
எல்லாத்துறைகளிலும் உள்ள புதுப் படைப்புகளை அவ்வப்போது சேர்த்துக் கொண்டே
இருப்பார்கள். அதனால் புத்தகங்கள் எனக்கு தடையில்லாமல் கிடைத்துக் கொண்டு
இருந்தது. வாரத்திற்கு எனக்கு இரண்டு புத்தகங்கள். அதை இரண்டே நாட்களில்
படித்து விடுவதால் என் நண்பர்களில் நூலக அட்டைகளைப் பயன்படுத்தி புத்தகங்கள்
எடுத்து வந்து படிப்பேன். எல்லாம் தமிழ் இலக்கியம் தான். கல்லூரி மூன்றாம்
ஆண்டு தான் அந்த பெரிய புத்தகக் கண்காட்சி திருச்சியில் நடந்த்து, என் விடுதிக்
காப்பாளர் அருட்திரு. ஜெயசீலன் அவர்கள் எங்களை கண்காட்சிக்கு செல்லச் சொல்லி
அறிவுறுத்தினார். அப்போது தான் நான் முதன் முதலாக அவ்வளவு பெரிய கண்காட்சியைப்
பார்த்தேன். எத்தனை கடைகள், எத்தனை புத்தகங்கள்!!!

படிப்பு முடித்து தஞ்சை வந்தபின் சில காலம் தஞ்சையில் தங்க வேண்டி இருந்த்து
அப்போதெல்லாம் தங்கவேல் செட்டியார் திருமண மண்டபத்தில் நடக்கும் அந்த புத்தக்
கண்காட்சிக்கு செல்வேன். திருமண மண்டபம் என்றதும் ரொம்ப பெருசா நினைச்சுட
வேண்டாம். ரொம்ப ரொம்ப சின்ன இடம், சின்ன கண்காட்சி, நமக்கு தேடல் அதிகமானதால்
அப்போது அந்தப் புத்தகங்களால் தீனி போட இயலவில்லை. மேலும் எது மாதிரியான
புத்தங்கள் படிப்பது, என்னென்ன புத்தகங்கள் படிப்பது போன்ற அறிவும் இல்லை.
புத்தகங்கள் என்னை விட்டு கொஞ்சம் தள்ளி இருந்த காலம் அது. அப்போது அறிமுகமானது
தான் ரத்னா புத்தக நிலையம். சிறுபத்திரிக்கை முதல் பல நல்ல புத்தங்களை எனக்கு
அறிமுகம் செய்த இடம். நல்ல புத்தகங்களை மட்டுமே கொண்டிருந்ததால் என்னவோ அந்தக்
கடை காலப்போக்கில் மூடப்பட்டுவிட்டது.

பிறகு சென்னைப் பயணம். வேலைத் தேடி. சென்ற ஒரு வாரத்தில் விளம்பரம்
பார்க்கிறேன் சென்னை புத்தக்க் கண்காட்சி என்று. இவ்வளவு நாளும், விகடனில்
சுஜாதாவின் வார்த்தைகளிலும், பொதிகை தொலைக்காட்சி செய்திகளிலுமே பார்த்த
கண்காட்சி இப்போது நேரில். ஹைய்யா கண்டிப்பாக பார்த்துவிடலாம் என்று நினைத்துக்
கொண்டிருந்தேன். அப்போது அது நடந்து கொண்டிருந்தது காயிதே மில்லத் கல்லூரியில்.
புதிதாக சேர்ந்த வேலை. இரவுப்பணி, வாரம் ஒருநாள் விடுப்பு போன்றவை அந்த வருட
புத்தகக் கண்காட்சியை பார்க்கவிடாமல் செய்து விட்டது. அடுத்த வருடம் கண்டிப்பாக
பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கிவிட்டிருந்த்து. எனக்கு கிடைத்த
அதிகமான மாதவருவாய், என்னை புத்தகங்களுக்கு மிக அருகில் கொண்டு சென்றிருந்த்து.
அப்போது நான் தேடிய முதல் புத்தகம் ”சே வாழ்வும் மரணமும்”. அந்தப் புத்தகத்தை
என் மாணவப்பருவத்து வழிகாட்டிகளில் ஒருவரான அருட்திரு ஹென்றியின் மேசை மேல்
பார்த்திருந்தேன் மூன்று வருடங்களுக்கு முன். அதைத் தேடித் தேடி அலைந்து
கொண்டிருந்தேன். எங்கே என்ன வாங்குவது என்று தெரியாது அப்போது. அந்தப்
புத்தகத்தை லேண்ட்மார்க்கில் தேடிக்கொண்டிருந்தேன். நல்ல தமிழ்ப்புத்தகம்,
கம்யூனிசம் சார்ந்தவை, தீவிர தமிழ் இலக்கியம் போன்ற விஷயங்களைத் தேடனும்னா
லேண்ட்மார்க் வாசலை எட்டிக் கூட பார்க்க்க் கூடாதுன்னு கத்துக்கிட்டேன்.
பாடலாசியர் பா.விஜய் கவிதைகளுக்கு(???) கொடுக்கும் முக்கியத்துவம் சுந்தர
ராமசாமி போன்றவர்களுக்கு இல்லை என்று எனக்கு புரிந்து போனது. ஹிக்கின்பாதம்ஸில்
விசாரித்த போது தான் அந்த சே குவேரா புத்தக பதிப்பகத்தின் முகவரி
கொடுத்தார்கள், கோடப்பாக்கத்தில் அந்த பதிப்பகம் தேடிச் சென்று அந்த புத்தக்ம்
வாங்கினேன். அந்த நாட்கள் என்னால் மறக்கவே முடியாத்து. என் வருவாயில்
பெரும்பகுதியை புத்தகங்களுக்கு செலவழித்த நாட்கள் அவை.

அப்போது வந்தது அடுத்த புத்தகக் கண்காட்சி, எனக்கு வரப்பிரசாதமாய். ஒரு வாய்
சோறுக்கு வீடு வீடாய் சென்று பிச்சை எடுக்கும் பிச்சைக்காரனுக்கு எல்லா வீட்டுல
இருந்தும் வந்து, ஒவ்வொரு வீடும் தனித்தனியா ஃப்ப்பே முறையில் உணவு கொடுத்தா
எப்படி இருக்கும் அது மாதிரி இருந்துச்சு. நல்ல புத்தகங்கள் தேடி கடைக் கடையா
அலைஞ்சுக்கிட்டு இருந்தப்போ, எல்லோரும் ஒன்னா சேர்ந்து கண்காட்சி நடத்தினா,
நான் திக்குமுக்காடி போயிட்டேன். அவ்ளோ பெரிய கண்காட்சியை என் வாழ்க்கையில
முதல் முறையா அப்போ தான் பார்த்தேன். அவ்ளோ பெரிய இடம் அவ்ளோ கடைகள். ஒவ்வொரு
கடைக்கும் போய் ஒவ்வொரு புத்தகங்களா நின்னு படிச்சு, பிடிச்சதை எடுத்து, ஒரு
நாள் முழுக்க அங்க புத்தகங்களோடு இருந்த நாள் மறக்கவே முடியாது, மறுநாளும்
வந்து மறுபடியும் ஒரு நாள் முழுக்க புத்தகங்களோடு இருக்கும் சுகமே தனி. என்
நண்பன் விழியன் சொல்வது போல் புத்தகங்கள் போதைப் பொருள். மயக்கம் கொடுக்கும்.

இந்த வருடமும் வந்த்து புத்தகத் திருவிழா வழக்கத்துக்கு மாறாக 15 நாட்கள்
முன்னதாகவே. நான் அப்போ காசியில் இருந்தேன். சென்னை வந்ததும் முதல் வேலையா
புத்தகக் கண்காட்சிக்கு தான் சென்றேன். வழக்கம் போல் நேர்த்தியான அமைப்பு, இந்த
முறை நான் ரொம்ப எதிர்பார்த்து போனது அன்னம் பதிப்பகத்துக்கு தஞ்சைப் பெரிய
கோயிலின் ஆயிரமாவது வருஷத்தைக் கொண்டாட ”தஞ்சாவூர்” என்று ஒரு புத்தகத்தை
வெளியிட்டு இருந்தனர். அப்புறம் நிலாரசிகனின் சிறுகதைத் தொகுப்பு. ஒவ்வொரு
வருஷமும் அற்புதமான நண்பர்களின் வழிகாட்டுதல் படி நல்ல இலக்கியங்கள்
பரிட்சயமாச்சு, ஆனா இந்த வருஷம் நான் போகும் நேரம் பார்த்து ஒருத்தர் கூட ஊரில்
இல்லை. எல்லோரும் புத்தாண்டை ஒட்டி ஊருக்குச் சென்றிருந்தனர். சரி தனியாவே
போகலாம்னு முடிவு பண்ணி நானே களத்தில் இறங்கினேன். ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி,
புத்தங்களை சுவாசித்து, வரும்போது நண்பனின் அழைப்பு வந்த்து, தானும் வருகிறேன்
என்றான். வாடான்னு சொல்லிட்டு தேடிக்கிட்டு இருந்தேன். இந்த வருஷம் உருப்படியா
ஒரு காரியம் செஞ்சேன், முதலில் ஒரு சுற்று புத்தங்களின் பெயர்களைக் குறித்துக்
கொண்டு, அப்படியே கடை எண், புத்த்க விலை என எல்லாவற்றையும் குறிச்சுக்கிட்டு
அப்புறம் அதை அலசி ஆராய்ஞ்சு இன்னொரு நாள் போய் புத்தகங்கள் வாங்கியது. பார்த்த
மாத்திரத்தில் வாங்கினால் ஒரு பிரச்சனை, எவ்வளவுக்கு வாங்குகிறோம் என்பதும்
தெரியவில்லை, மேலும் புத்தகங்களைச் சுமந்து கொண்டு செல்லும் போது சீக்கிரமே
சோர்வடைந்து விடுகிறேன், அதனால் முழுமையாக எல்லாக் கடைகளையும் பார்க்க
முடியவில்லை.

நம்ம புத்திக்கு உலக அரசியல், விடுதலை வரலாறுகள், கம்யூனிசம் சார்ந்த விஷயங்கள்
தான் ஞாபகத்துக்கு வந்துச்சு. கூட வந்தவன், இவரோட சிறுகதை நல்லா இருக்கும்,
அவரோட நாவல் நல்லா இருக்கும்னு சொல்லிக்கிட்டு இருந்தான். இப்பொ இருக்குற
சேர்மானமும் அப்படித்தான் சொல்லுது. அதான் என்ன வாங்குறதுன்னு குழம்பிப் போய்,
இதுல கொஞ்சம் அதுல கொஞ்சம்னு வாங்கிட்டு வந்தேன்.

என்னமோ சொல்ல வந்து என்னமோ எழுதிக்கிட்டு இருக்கேன்... இவ்ளோ பெருசா
எழுதிட்டேன், ஆனா எப்படி முடிக்கிறதுன்னு தெரியல. ம்ம்ம் இதனால் எல்லோரும்
சொல்வது என்னன்னா புத்தகக் கண்காட்சி மிகவும் பயனுள்ளது. எல்லோரும் நல்ல
புத்தகங்களைத் தேடிப் படியுங்கள்.

Saturday, January 09, 2010

பயணங்கள் - 2

வெட்டப்பட்ட

மரங்களின்

கதை சொல்லி

புலம்பிற்று

மண் அரிப்பின்

சுவடுகள்

Tuesday, December 29, 2009

பயணங்கள்

நகரும் மரங்களின்
கிளைகளின் மீதேறி
உயரே பறக்கிறது

வயலின் வயிற்றைக்
கிழித்து விரிந்திருக்கும்
ஒற்றை மரத்தில் நிலைகொண்டு
அமர்ந்திருக்கிறது

மலைகளின் பிளவுகளில்
இருளைக் கிழிக்கும்
வெளிச்சத்தில் ஊர்ந்து செல்கிறது

சராலென கீழிறங்கும்
பள்ளத்தாக்கின்
மயக்கும் வனப்பில்
லயிக்கிறது

என்னோடு மட்டும்
வரமறுக்கிறது
ரயில் பயணத்தில்
மனசு...

Wednesday, December 23, 2009

நிகழ்வுகளோடு

வாழ்க்கை எனக்கு எப்போதுமே பாடங்களை சொல்லிக் கொடுத்துக்கிட்டு தான் இருக்கு... நான் அதுல கத்துக்குறது தான் குறைவு. என்னோட வாழ்க்கை ஒன்னரை ஆண்டுகளுக்கு முன்ன வரைக்கும் நான் தீர்மானிச்சதா தான் இருந்துச்சு. படிப்பு, வேலை, குறிக்கோள், அப்புறம் அதை கைவிட்டது, குறிக்கோள் மாறியது எல்லாமே. ஆனா கடந்த ஒன்னரை ஆண்டுகளாக அதுவும் தொழில் ஆரம்பிச்ச பிறகு எல்லாமே என் கையை மீறிப் போகிற விஷயங்களாகத்தான் இருக்கு. அது என் தொழிலாகட்டும், பண விஷயமாகட்டும், உறவுகளோடு இருக்கும் நெருக்கமாகட்டும், தோழிகளில், நண்பர்கள் என எல்லாமே, எல்லோருமே கொஞ்சம் தள்ளிப் போயிட்ட மாதிரி ஒரு உணர்வு.

2007ம் ஆண்டு இதே கிறிஸ்துமஸ் எப்படிப் போச்சுன்னு பாக்கும் போது கொஞ்சம் சந்தோஷமாவும் இருக்கு வருத்தமாவும் இருக்கு. மாத வருமானம், கை நிறைய சம்பளம், எது தேவைப்பட்டாலும் யோசிக்காமல் வாங்கிய காலம் அது. எனக்கு, அம்மாவுக்கு, அம்மச்சிக்கு என பார்த்துப் பார்த்து போத்தீஸில் வாங்கினேன். போத்தீஸ் எனக்கு ரொம்ப பிடிச்ச கடை. அங்க வரும் கஸ்டமரை மதிக்கும் பாங்குக்காகவே நான் போத்தீஸ் போவேன். எனக்கும், வீட்டில் உள்ளவர்களுக்கும் ஆடை எடுக்கும் போது கடையில் கேட்பான் எந்த ரேஞ்சில் வேணும் சார்ன்னு. பணம் முக்கியம் இல்ல நல்ல டிசைனா காட்டுங்கன்னு சொல்வேன். பிடிச்சது என்ன விலையா இருந்தாலும் வாங்கிக் கொண்டிருந்தேன். இவ்ளோ பட்ஜெட்டுக்குள் முடிக்கனும்னு கணக்கு வச்சிக்கிட்டதே இல்ல. 2008 கிறிஸ்துமஸ் வீட்டிற்கு எடுத்துக்கொடுக்க முடியாட்டியும் எனக்கு ஆடைகள் எடுத்துக்க முடிஞ்சுது. அம்மாவுக்கு என்னால எடுத்துக் கொடுக்க முடியலைங்கிற வருத்தம் என்னை ரொம்ப ஆட்டிப் படைச்சுது. அடுத்த வருஷம் சிறப்பா செய்யனும்னு நினைச்சுக் கிட்டு இருந்தேன். ஆனா இந்த வருஷம் எனக்கு கூட எடுத்துக்க முடியல...

ஒவ்வொரு வருஷமும் கிறிஸ்துமஸ் என் குடும்பத்தினரோடு ரொம்ப சந்தோஷமா கொண்டாடி இருந்திருக்கேன். எந்த வருஷமும் தவற விட்டதே இல்ல. எந்த ஊர்ல எந்த மூலையில் இருந்தாலும் வீட்டிற்கு போயிடுவேன். அம்மா கூட, என் மாமாக்கள், அத்தைகள், தம்பிகள், அக்காக்கள் கூட கொண்டாடுவதில் அவ்ளோ சந்தோஷம். ஆனா இந்த முறை விலகி இருக்கேன். ரொம்ப தூரம் விலகி இருக்கேன்.


வாழ்க்கை ரொம்ப வேகமா போகுது. வருடங்கள் மிக வேகமா உருண்டோடுது. வாழ்க்கையில இன்னைக்கு மேல இருக்குறவன் நாளைக்கு கீழே இருப்பான், இன்னைக்கு கீழ இருக்குறவன் நாளைக்கு மேலே இருப்பான்னு படிச்சிருக்கேன். அதை இப்போ அனுபவிச்சு பாக்குறேன். எல்லாமே பாடம் தான். நான் இந்த காலகட்டத்தில் கத்துக்குற எல்லா விஷயங்களும் என்னைச் செதுக்க பயன்படும். ம்ம்ம்ம் பாக்கலாம் இன்னும் எவ்ளோ தூரம் காலம் என்னை சுழற்றியடிக்கும்னு...