Tuesday, December 29, 2009
பயணங்கள்
கிளைகளின் மீதேறி
உயரே பறக்கிறது
வயலின் வயிற்றைக்
கிழித்து விரிந்திருக்கும்
ஒற்றை மரத்தில் நிலைகொண்டு
அமர்ந்திருக்கிறது
மலைகளின் பிளவுகளில்
இருளைக் கிழிக்கும்
வெளிச்சத்தில் ஊர்ந்து செல்கிறது
சராலென கீழிறங்கும்
பள்ளத்தாக்கின்
மயக்கும் வனப்பில்
லயிக்கிறது
என்னோடு மட்டும்
வரமறுக்கிறது
ரயில் பயணத்தில்
மனசு...
Wednesday, December 23, 2009
நிகழ்வுகளோடு
2007ம் ஆண்டு இதே கிறிஸ்துமஸ் எப்படிப் போச்சுன்னு பாக்கும் போது கொஞ்சம் சந்தோஷமாவும் இருக்கு வருத்தமாவும் இருக்கு. மாத வருமானம், கை நிறைய சம்பளம், எது தேவைப்பட்டாலும் யோசிக்காமல் வாங்கிய காலம் அது. எனக்கு, அம்மாவுக்கு, அம்மச்சிக்கு என பார்த்துப் பார்த்து போத்தீஸில் வாங்கினேன். போத்தீஸ் எனக்கு ரொம்ப பிடிச்ச கடை. அங்க வரும் கஸ்டமரை மதிக்கும் பாங்குக்காகவே நான் போத்தீஸ் போவேன். எனக்கும், வீட்டில் உள்ளவர்களுக்கும் ஆடை எடுக்கும் போது கடையில் கேட்பான் எந்த ரேஞ்சில் வேணும் சார்ன்னு. பணம் முக்கியம் இல்ல நல்ல டிசைனா காட்டுங்கன்னு சொல்வேன். பிடிச்சது என்ன விலையா இருந்தாலும் வாங்கிக் கொண்டிருந்தேன். இவ்ளோ பட்ஜெட்டுக்குள் முடிக்கனும்னு கணக்கு வச்சிக்கிட்டதே இல்ல. 2008 கிறிஸ்துமஸ் வீட்டிற்கு எடுத்துக்கொடுக்க முடியாட்டியும் எனக்கு ஆடைகள் எடுத்துக்க முடிஞ்சுது. அம்மாவுக்கு என்னால எடுத்துக் கொடுக்க முடியலைங்கிற வருத்தம் என்னை ரொம்ப ஆட்டிப் படைச்சுது. அடுத்த வருஷம் சிறப்பா செய்யனும்னு நினைச்சுக் கிட்டு இருந்தேன். ஆனா இந்த வருஷம் எனக்கு கூட எடுத்துக்க முடியல...
ஒவ்வொரு வருஷமும் கிறிஸ்துமஸ் என் குடும்பத்தினரோடு ரொம்ப சந்தோஷமா கொண்டாடி இருந்திருக்கேன். எந்த வருஷமும் தவற விட்டதே இல்ல. எந்த ஊர்ல எந்த மூலையில் இருந்தாலும் வீட்டிற்கு போயிடுவேன். அம்மா கூட, என் மாமாக்கள், அத்தைகள், தம்பிகள், அக்காக்கள் கூட கொண்டாடுவதில் அவ்ளோ சந்தோஷம். ஆனா இந்த முறை விலகி இருக்கேன். ரொம்ப தூரம் விலகி இருக்கேன்.
வாழ்க்கை ரொம்ப வேகமா போகுது. வருடங்கள் மிக வேகமா உருண்டோடுது. வாழ்க்கையில இன்னைக்கு மேல இருக்குறவன் நாளைக்கு கீழே இருப்பான், இன்னைக்கு கீழ இருக்குறவன் நாளைக்கு மேலே இருப்பான்னு படிச்சிருக்கேன். அதை இப்போ அனுபவிச்சு பாக்குறேன். எல்லாமே பாடம் தான். நான் இந்த காலகட்டத்தில் கத்துக்குற எல்லா விஷயங்களும் என்னைச் செதுக்க பயன்படும். ம்ம்ம்ம் பாக்கலாம் இன்னும் எவ்ளோ தூரம் காலம் என்னை சுழற்றியடிக்கும்னு...
Thursday, December 10, 2009
தோழி நினைவுகள் - 1
இருளின் பிடியிலிருந்து
விடுவித்துக்கொள்ள
ஆதரவுக் கரம்பற்றி
வெளிச்சத்தின் திசைகளை
எட்டிப்பிடித்தாய்
புள்ளியாய்த் தொடங்கிய
வெளிச்சம்
பேரண்டமாய் ஆட்கொண்டது
அங்குல அங்குலமாய்
திசைகளை அளந்தாய்
வெளிச்சத்தின் நீட்சியை
எங்கும் பரவச் செய்தாய்
அளவற்ற அன்பு
உள்ளங்களில் பரவச் செய்தாய்
கண்களிலே கருணை
பொங்கச் செய்தாய்
உன்னைச் சந்திக்கும்
தேதிகளில் எல்லாம்
என் நாட்குறிப்பில்
பூக்கள் பூக்கச் செய்தாய்
வண்ணங்கள் தீட்டப்பட்ட்
ஓவியமாய்
உன்னைச் சந்தித்தவர்கள்
வாழ்க்கை மாறியது
சட்டென்று ஒரு நாள்
தோள்சாய கிடைத்திருக்கிறான்
தோழன் ஒருவன்
ஒன்பதாம் திசையில் இருந்து
என்றாய்
எங்கள் கைகளை
உதறிவிட்டு தனித்துச் சென்றாய்
கணக்கில் வராத அந்தத் திசை
இருளின் அரசாங்கமென
எச்சரிக்க வாயெடுத்தேன்
காதுகளைப் பொத்திக் கொண்டாய்
இப்போது கவிதை எடுத்திருக்கிறேன்
கண்களை மூடிவிடாதே.
Monday, November 23, 2009
தீர்க்கப்படாத கணக்கு
பேசிவிட்டு
கிளம்பும் போதும்
ஏதோ மிச்சம் வைத்திருப்பதாகவே
தோன்றுகிறது.
கொஞ்சம் சேமித்து வைத்திருக்கும்
முத்தங்களைக் கொடுத்து
கணக்கை தீர்த்துவிட்டு போ
******
இன்னும் கொஞ்சம்
என்று நான் கேட்க
முடியாது போடா
என்று நீ தள்ள
ஹீம்ம்ம்ம்ம்
கோபித்துக் கொண்டு
தள்ளிப் போய்
நாற்காலியில் அமர்ந்தேன்
சிரித்துக் கொண்டே
பின்னால் வந்து
கட்டிக்கொண்டு
இந்தா என்று அள்ளிக் கொடுத்தாய்
முத்தங்களை
Friday, October 30, 2009
நான் - எனது நீட்சி
வாழ்க்கையைத் தொலைத்து
தேசம் இழந்து
அகதியாய்
நிர்கதியாய்
நிர்வாணமாய் நிற்கிறது
சொந்தங்கள்
தினம் தினம்
செய்திகள்
இவ்வளவு
படித்த பிறகும்
உன் முத்தத்தின்
தித்திப்பு என்று
கூசாமல் அடுத்த
கவிதை பற்றி சிந்திக்கிறது
சுரணையற்ற மனது
******
நாண்டுக்கிட்டு செத்து போகலாம்டே
என்று மனசாட்சி சொல்கிறது
ஓட்டுனர் உரிமம் இல்லாமல்
மாட்டிக்கொண்டு
கூனிக் குறுகி
கையூட்டுக் கொடுத்த
நிமிடங்களை
நினைக்கும் போது
Wednesday, October 14, 2009
வலைப்பக்கத்தில் மூன்று ஆண்டுகள்
கூகுள் குழுமங்களின் அறிமுகம் எனக்கு இன்னும் நிறைய சொல்லிக் கொடுத்த்து. வலைப்பதிவாளர்களைச் சந்தித்த போது எனக்கு நானே சொல்லிக் கொண்டேன் நீ இன்னும் கிழிக்க வேண்டியது நிறைய இருக்குடா என்று... சமீபத்தில் எழுதிய கவிதையை என் குழுமத்து அண்ணன் ஒருவர் பார்த்துவிட்டு சொன்னார். தேறிட்டடா என்று. கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது.
இப்போ நினைச்சுக்குறேன் டேய் மவனே இன்னும் ஒழுங்கா எழுது.. இந்த காதல் கத்திரிக்காய் எல்லாத்தையும் கொஞ்சம் ஒதுக்கி வச்சுட்டு சமூக அக்கறையோட எழுதுன்னு. கல்லூரி காலம் தான் அதிக சமூக அக்கறையுள்ள கவிதைகளைக் கொடுத்தன. அதன் பிறகு வழக்கமான வாழ்க்கையில் சுற்றுத்திரிந்து அதைப் பற்றி மறந்துவிட்டேன் என்று நினைக்கிறேன். சமீபத்தில் எழுதிய கவிதையில் எனக்கு மிகவும் திருப்தி அளித்த கவிதை ஈழம் சார்ந்த ”புதைந்து போன கனவுகள்” என்ற கவிதையும், ”கதறல்” கவிதையும் தான். கதறல் கவிதை என்னோட அனுபவம். ஈழம் சார்ந்த அந்தக் கவிதைகளை முடித்த போது ரொம்ப நாளா மனசில் இருந்த பாரத்தை இறக்கி வைத்த மாதிரி ஒரு அனுபவம்.
இந்த மூன்றாவது வருடம் எனக்கு நல்ல நண்பர்களையும், என் கவிதைகளையும் படித்து கருத்து சொல்லி நல்லா இருக்குன்னு உற்சாகப்படுத்தின நண்பர்களையும் பெற்றுத் தந்தது. எனக்கு இன்னும் ஊக்கம் கொடுத்து என்னை உற்சாகப்படுத்தும் நண்பர்கள் எனக்கு மிகப்பெரிய பலம்.
சரி... மீண்டும் அடுத்த வருஷம் நான் என்னத்தை கிழிச்சேன்னு மறுபடி கொஞ்சம் பார்க்கலாம். பை.....
உடைதல்
பொம்மை உடைந்து
போனதற்கு
இவ்வளவு வருத்தப்படும்
நீ
கொஞ்சம்
என் மனதையும்
கணக்கில் எடுத்திருக்கலாம்....
Monday, October 12, 2009
நீ - 5
திருத்தி
கிழித்து
எறியப்பட்ட
வார்த்தைகள்
மீண்டும் சேர்க்கச் சொல்லி
கெஞ்சுகின்றன
உன்னைப் பற்றிய
கவிதையில்.
****
இந்த உலகத்திலேயே
நான் அதிகம் நேசிப்பது
உன்னைத் தான் என்கிறாய்
இதைப் பொய்யெனச்
சொல்லிவிட்டு போகிறது
பதிலளிக்காது போகும்
உனக்கான என்
அலைப்பேசி அழைப்புகள்
Thursday, October 08, 2009
நீளும் நாட்கள்
வெறுமையின் சுவடுகள்.
முகத்தில் அடிக்கிறது
இரத்தத்தின் வாடை
மேடுகளிலும் பள்ளங்களிலும்
அடித்து இழுத்துச் செல்லப்படுகிறது என் உடல்
இன்னும் வேகமாய் திரும்புகிறது
காலத்தின் பக்கம்.
சுமக்க முடியாத சுமைகள் வைத்து
அழுத்தப்படுகின்ற நெஞ்சின் மீது.
சுழற்றி அடிக்கும் காற்றின் வேகத்தில்
ஈடுகொடுக்க முடியாமல்
தூக்கி எறியப்படுகின்றேன் நான்.
மீட்சி கொடுக்கும்
தேவதையின் கரங்களுக்காக
காத்துக் கொண்டிருக்கிறேன்.
இரத்தம் வடியும்
காயப்பட்ட கரங்களே நீட்டப்படுகின்றன.
மரணத்தின் விளிம்பில் இருப்பதாய்
நினைத்துக் கொள்கிறேன் தினமும்.
இன்னும் வேகமாய்
சுழற்றி அடிக்கப்படுகிறேன் நீளும் நாட்களில்....
Thursday, October 01, 2009
அழியாத நினைவுகள்
அழிக்க முற்பட்டாலும்
மீண்டும் கண் முன்
வந்து நிற்கிறது
வண்டி ஏற்றி
காலை உடைத்த
நாய்க்குட்டியின்
கதறல்
Monday, August 10, 2009
மழையாய்....
நான் பதிலிடுவதில்லை
என்று கோபப்படுகிறாய்
உன் கவிதைகளின்
ரசிகன் நான்
மௌன ரசிகன்
அமைதியாய் ரசித்து
உள்ளுக்குள் சிரித்து
சிலிர்த்து பத்திரப்படுத்துகிறேன்
உன் கவிதைகளை
சில சமயம் ஆச்சர்யத்தில்
உறைந்து போவதுண்டு
உன் சொல்லாடல்கள் கண்டு
அள்ள அள்ள குறையாத
காதல் உன்னிடமிருந்து
வார்த்தைகளாய்ப் பெருக்கெடுத்து
மழையாய் நனைக்கிறது
நனைகிறவர்கள் அறிவார்களா
அந்த மழை நான் தான் என்பதை
Sunday, August 09, 2009
எதிர்கால இந்தியா
எதிர்கால இந்தியா
இது தான் தலைப்பு
ஒரு கவிதை வேணும் எனக்கு
குழம்பித்தான் போனேன்
எப்படி இருக்கும் என்று
கற்பனை செய்து பார்த்த போது
குழப்பத்திலேயே தூங்கிப் போனேன்
கனவாக விரிந்தது எதிர்கால இந்தியா
பளபளக்கும் சாலைகள்
விண்ணை முட்டும் கட்டிடங்கள்
சாலைகளிலே தரைக்கு மேலே என
எங்கும் வாகனங்கள்
அளவான இறுக்கமான உடையோடு பெண்கள்
அதே போன்ற உடையில் ஆண்கள்
பரபரப்பான வாழ்க்கை எங்கும் எதிலும்
தொலைப்பேசி அலைப்பேசி இல்லாமல்
காதோடு பொருத்திய குட்டிக் கருவி
தகவல் சுமந்து சென்றது
காற்றில் கணினி விரிந்து
முன்னேற்றம் கண்டு மிக மிக மகிழ்ந்தேன்
என்ன சாப்பிடுகிறார்கள் இவர்கள்
சற்றே இக்கேள்வி வந்து
மூளையைக் குடைந்தது
அருகில் இருக்கும் உணவகம் சென்றேன்
வகை புரியா உணவுகள்
விதவிதமான நிறங்களில்
தேடிப் பார்த்தேன்
தூரத்தில் ஒருவர்
சாப்பிட்டுக்கொண்டிருந்தார்
எனக்குப் பிடித்த சோறு
ஊரைச்சுற்றலாம் என்று நினைத்து
திரும்பிய போது வாகனம் ஒன்று
நெருங்கி நின்றது
அடுத்த ஊருக்குச் செல்லுமாம்
இலவச பயணமாம்
வழியில் எங்கு வேண்டுமானாலும் இறங்கலாமாம்
ஏறி அமர்ந்தேன்
நகரத்தின் பளபளப்பு கொஞ்சமாய் மறைந்து
இயல்பாய் விரிந்தது கிராமத்துச் சூழல்
இறங்கிக் கொள்கிறேன் இங்கே என்றேன்
ஏளனப்பார்வைகள் முகத்தைக் கூறுபோட
கேள்விக்குறியோடு இறங்கிப்போனேன்
என்னென்ன மாற்றங்கள் இங்கே
இருக்கின்றன என்று தேடிய போது
அங்கே உணவுக்காக எலி தேடியபடி விவசாயி......
Tuesday, July 28, 2009
கவிதைகள்
தலைப்பிருந்தாலே
கொஞ்சம் தள்ளி
நின்று கொள்கிறேன் நான்
முதல் சந்திப்பு
என்னவள், காதல் தோல்வி
ஏய் இளைஞனே
என்ற வார்த்தைகள்
ஒவ்வாது போகின்றன.
சபித்துக் கொண்டே
அழிக்கிறேன்
நீண்ட கவிதைகள்
தாங்கிய மின்னஞ்ல்களை
என் கவிதையும்
இன்னொருவருக்கு
இப்படித்தான்
என்று நினைக்கையில்
எழுத எடுத்த பேனாவை
மூடி வைத்துவிட்டேன்
Wednesday, July 22, 2009
புதைந்து போன கனவுகள்
மரப்பாச்சிக்கு அழும்
தங்கைக்குத் தெரியவில்லை
அதைத் திருப்பி எடுக்கப் போன
அண்ணன் பிணமாய்க் கிடப்பது
*******
தொலைந்து போனவர்களின்
பட்டியலைப் பார்த்துக் கொண்டிருந்தேன்
விடுபட்டவர்களின் பெயர்களைச்
சொல்லி அழுது கொண்டிருந்தனர்
பக்கத்தில் நின்றவர்கள்
நாளை என் பெயர்
பட்டியலில் இருக்குமா?
விடுபட்டு போயிருக்குமா?
தெரியவில்லை எனக்கு
பட்டியலில் இருந்தால் பார்ப்பதற்கும்
விடுபட்டால் அழுவதற்கும்
யார் இருக்கிறார்கள்?
நினைத்துக் கொண்டே உறங்கிப் போனேன்
தூக்கம் கலைத்தது
நெருங்கி வரும் பூட்ஸ் காலடி ஓசை....
*****
எங்கள் வாழ்க்கையை
புதைத்துக் கனவுகளைக்
கட்டியெழுப்பிக் கொண்டிருந்தோம்
இப்போது சரிந்து கிடப்பவை
இன்றைய கோபுரங்களா
நாளைய கனவுகளா???
Thursday, July 16, 2009
மழைக்காலம்
உயிருக்குள் ஊடுருவி
நனைத்துச் செல்லும்
மழையை ஒத்ததாய் இருந்தது
நீ எனக்கு அனுப்பிய
குறுஞ்செய்தி
*****
நீ இல்லாத மாலைப் பொழுதில்
உன் நினைவுகளை
அசைபோடச் சொல்லி
என்னைத் தூண்டியபடி
இப்போதும் பெய்கிறது மழை
*****
என் நாட்குறிப்பின்
பக்கங்களுக்கு வண்ணம்
தீட்டியபடி செல்கின்றன
உன்னைச் சந்தித்த
பொழுதுகள்
*****
ஏதுமல்லாத
வெறுமையின் தருணங்களில்
இயல்பாய் வந்து
அமர்ந்து கொள்கிறது
உன்னைப் பற்றிய
நினைவுகள்
நாட்குறிப்பில்
சொல்லப்படாத மௌனங்களின்
நேரங்களில் இட்டு
நிரப்பப்படுகிறது உன்
ஸ்பரிசத்தின் கணங்கள்
******
முன்னறிவிப்பு இல்லாத
திடீர் சந்திப்புகளின்
ஆச்சர்யங்களுக்குள்
அடங்கி இருக்கிறது
அழகான நம் நட்பு
******
Thursday, June 18, 2009
மாசிலாமணி – இம்சை அரசன்
எங்கடா போறோம்னு கேட்டா முறைச்சு பாத்து அமைதியா வான்னு சொல்லிட்டு போய்க்கிட்டே இருந்தாங்க. மேம்பாலத்தை விட்டு இறங்கும் போது கொஞ்சம் கூட யோசிக்காம சரட்டுன்னு வலப்பக்கம் திரும்பினா என் தோழி, என்னடா இது பிறந்தநாள் அன்னிக்கு பிரச்ச்னையில மாட்டி விட்டுடுவாளோன்னு நினைச்சு கொஞ்சம் பொறுமையா வண்டிய திருப்பினேன். அவ வண்டிய நிறுத்தின இடம் அட்லாப்ஸ் தியேட்டர். இப்போ தான் படம் ஆரம்பிச்சுச்சு என்றார்கள். உள்ளே கேக், தீப்பெட்டி அனுமதி இல்லை என்றனர். இன்னிக்கு இவரோட பிறந்தநாள் தியேட்டர்ல கேக்வெட்டி கொண்டாடனும்னு சொன்னதும் தியேட்டர்காரன் சிரிச்சுகிட்டே சரின்னு சொல்லிட்டான். ஆஹா இன்னிக்கு நாம அவ்ளோ தான், ஊர்காரங்க கிட்ட உதை வாங்கனும் போலன்னு நினைச்சுகிட்டு உள்ளே போனேன். இப்போ வெட்டக் கூடாது கொஞ்ச நேரம் படம் ஓடினதும் வெட்டுங்கன்னு சொன்னான் தியேட்டர்க்காரன். இப்போ உதை வாங்குனா என்ன கொஞ்ச நேரம் கழிச்சு உதை வாங்குனா என்ன, எப்படியும் உதை உறுதின்னு நினைத்துக்கொண்டு இருந்தேன். ஆனா என்னை காப்பாத்திடுச்சு இந்தப் படம். உள்ளே நுழையும் போது கதாநாயகன் அறிமுகப் பாடல் ஓடிக்கிட்டு இருந்துச்சு. கொஞ்சம் மொக்கையா இருக்கேன்னு நினைச்சுக்கிட்டு இருக்கும் போது, தொடர்ச்சியா கதாநாயகி அறிமுகம். என்னடா இதுன்னு நினைச்சுக்கிட்டு அந்தப் பொண்ணை கொஞ்சம் சைட் அடிச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா பத்தி நிமிஷத்துல என் தோழி நண்பா மன்னிச்சிடு உன் பிறந்தநாள் அதுவுமா இப்படி ஒரு பெரிய மொக்கை படத்துக்கு உன்னைக் கூட்டிக்கிட்டு வந்திருக்க கூடாதுன்னு புலம்ப ஆரம்பிச்சுட்டா. வந்ததும் போகக் கூடாதேன்னு நினைச்சுக்கிட்டு இன்னும் ஒரு பத்து நிமிஷம் இருக்கலாம், இயக்குனர் ஏதாச்சும் செஞ்சிருப்பார்ன்னு நினைச்சுக்கிட்டு இருக்கும் போது வரிசையா ரெண்டு காட்சிகள் ஒன்னு வடிவேலுவைக் காலிங்பெல் அழுத்தச்சொல்லி ஒரு குழந்தை மாட்டி விடுமே அந்தக் காட்சி இதில் வந்தது வடிவேலுவுக்கு பதில் சந்தானம் அண்ட் கோ. அடுத்து தம்பி படத்துல ஹீரோயின் நடனம் ஆட முடியாம ஹீரோ ஒருத்தனை அடிச்சு அந்த நடன நிகழ்ச்சி நின்னு போயிடுமே அதை நினைவு படுத்தும் காட்சி, ஹீரோவும், ஹீரோயினும் மட்டும் தான் மாற்றம். கொஞ்சம் கூட சொந்தமா யோசிக்க மாட்டாய்ங்களான்னு நினைச்சுக்கிட்டு இருக்கும் போது இவுங்க இரண்டு பேரையும் பார்த்தேன். ஒரு அரை மணி முடிஞ்சிடுச்சு இன்னும் ஒரு அரைமணி நேரம் இருக்கலாம்னு சொன்னாய்ங்க. சரி இருக்கலாம்னு நினைச்சேன். பத்து நிமிஷத்துல நண்பா கிளம்பலாம்னு சொன்னா என் தோழி. சரி இதுக்கு மேல வேணாம்னு சொல்லிட்டு கிளம்பி வந்துட்டோம். கேக் என்னோட அலுவலகத்தில் பிறகு வெட்டப்பட்டது.
படம் ஆரம்பிச்சு சரியா 40 நிமிஷத்துல வெளியேறிட்டோம்.. என் வாழ்க்கையில் இதுதான் முதல் முறை ஒரு படத்தை பார்த்துக்கொண்டிருக்கும் போது வெளியேறியது... என்ன நினைச்சுக்கிட்டு இயக்குனர்கள் இந்தமாதிரி படம் எடுக்குறாங்கன்னு தெரியல. இவனுங்க யார்க்கிட்டயாவது உதவி இயக்குனரா பணியாற்றினா நல்லா இருக்கும். இல்லைன்னா திரைக்கதை எழுதுவது எப்படின்னு தெரிஞ்சுகிட்டு வரட்டும். நடிக்கும் அனைவருமே கொஞ்சம் கூட இயற்கையாக இல்லாம செயற்கையாகவே பேசுகின்றனர் ஆரம்பத்தில் இருந்து. காமெடி என்ற பெயரில், சந்தானம், கருணாஸ், பாஸ்கர் என எல்லோருடைய மொக்கையும் சராசரிக்கு மிகக் கீழே. இதையெல்லாம் ஒரு படம்னு ரிலீஸ் பண்ணி, வெற்றிப்படம், வெற்றி நடைன்னு போட்டு நம்மையெல்லாம் ஏமாற்றும் சன்பிக்சர்ஸ் வாழ்க...
Sunday, May 31, 2009
மீண்டும்
நடந்து இந்தச் சாலையின்
நீள அகலம் அளந்த
காலமெல்லாம் சட்டென்று
தோன்றி மறைந்தது கண்முன்
எதிரெதிரே நீயும் நானும்
குறுக்கே சாலை
உன் பார்வையின்
வீச்சு தாங்க முடியாமல்
கண்களை மூடிக்கொண்டேன்
பிரிவுகள் ரணமானவை என்று
நம் பிரிவு தான் எனக்கு
உணர்த்தியது...
தவறான புரிதல்கள்
உன்னை என்னிடமிருந்து
அன்னியப்படுத்திடும் என்று
எதிர்பார்த்திருக்கவில்லை
உன் நிராகரிப்புகளால்
நொறுங்கிப்போனது என் மனம்
மட்டுமல்ல அலைப்பேசிகளும் தான்
தோளோடு அணைத்துக்கொண்டு
காதோடு ரகசியம் பேசி
விழிகளில் கவிதைகள் சுமந்து
அங்குலம் அங்குலமாக அளந்த
சாலையல்லவா இது.....
வாகனத்தின் பேரிரைச்சல்
என்னை நினைவுக்கு அழைத்து வருகிறது
அதே இடத்தில் மறுபடியும் உன்னை சந்திக்கிறேன்
என்னைப் பார்த்துக்கொண்டு நிற்கிறாய்
கண்களில் ஆச்சர்யம் சுமந்து
பேசலாமா யோசனையோடு
பார்க்கிறேன் நான்
பேச மாட்டாயா என்கிறது
உன் பார்வை
உனை நோக்கி
நடக்க ஆரம்பித்தேன்
”ஹாய்...” என்றேன்
”ஹாய்” என்றாய்
”எப்படி இருக்க??? ”
”நல்லா இருக்கேன்... நீ?”
”ம்ம்ம் இருக்கேன்.. ”
”ஒரு கப் காபி?” என்றேன்
”கண்டிப்பா.... ரொம்ப நாள் ஆச்சு...” என்றாள்
வழக்கமாய் செல்லும் கடைக்குச் சென்று வழக்கமாய் அமரும் இடத்தில் அமர்ந்தோம்
”என்ன பண்ணிக்கிட்டு இருக்க? ” என்றாய்
”அதே கம்பெனி தான்...... நீ?”
”போன வாரம் தான் சென்னைக்கு மாற்றலாகி வந்தேன்... ” என்றாய்
“இந்தப் பக்கம் ?”
“கொஞ்சம் பொழுது போகல, கொஞ்சம் மனசும் சரியில்ல... இந்த சாலை ரொம்ப பிடிச்ச சாலை.. அதான் ஒரு சின்ன வாக் போகலாம்னு... நீ எங்க இந்தப் பக்கம்??” கேட்டாய்....
”நான் எப்போ ப்ரீயா இருந்தாலும் இந்த சாலையில ஒரு வாக் போவேன்... நாம கைகோர்த்துக்கிட்டு நடந்தது நினைவுக்கு வரும், கொஞ்சம் மனசுக்கு இதமா இருக்கும்... ”
”ம்ம்ம்ம்” ஆமோதித்தாய் அழகாக
அமைதியார் காபி அருந்தினோம்.. அளவாய் பேசினோம்... நலம் விசாரிப்புகள் முடிந்தன...
“சரி கிளம்பலாமா?” என்றேன்....
“ ம்ம்ம் போகலாம்... என்றாய்... சற்று நடந்தவள் திரும்பி கேட்டாய்..... உன் அலைப்பேசி எண் அதே தானா இல்லை மாத்திட்டியா?”
“இல்ல மாத்தல... அதே எண் தான் நீ எப்போவாச்சும் கூப்பிட்டா என்ன பண்றதுன்னு நினைச்சு மாத்தாம வச்சிருக்கேன்... உன்னோட எண்?”
“ ம்ம்ம்ம் நானும் அதுக்காக தான் மாத்தாம வச்சிருக்கேன்” என்றாய்.....
“எப்படி வந்த? வண்டியிலா??? எப்படி இருக்கிறது அந்த ஆக்டிவா?
“இல்ல ஆட்டோல? நீ?
“என்னோட வண்டியில்... ஆட்டோ பிடிக்கவா உனக்கு? எந்த ஏரியா?”
“பெசண்ட் நகர்? நீ?”
“அதே அடையார் வீட்டுல தான் இருக்கேன்”
“ இரு ஆட்டோ பிடிக்கிறேன்...” என்றேன்....
“இல்ல... உனக்கெதும் வேலை இருக்கா? இல்லை வீட்டுக்கு தான் போறியா?
“வீட்டுக்கு தான் போறேன்.....”
“என்னை உன் பைக்கில் கூட்டிக்கிட்டு போய் விட்டுடேன்”
“ம்ம்ம்ம்” தலையாட்டினேன்....
நிசப்தம் எங்களோடு சேர்ந்து வந்து கொண்டிருந்தது... சிறிது நேரத்தில் என் தோளில் சாய்ந்து கொண்டு விசும்பத் தொடங்கினாய்.. நான் என் கண்ணீரை துடைத்துக் கொண்டு ஆதரவாய் உன் கரம் பற்றிக் கொண்டேன்...
Monday, April 20, 2009
வாழ்த்துகள்
உன் கைப்பிடித்து
நான் முறுக்குகையில்
என் மீசையைப்
பிடித்து இழுத்தாய்
வலி தாங்காமல்
உன் கை விட்ட என்னை
பார்த்து உதடு சுழித்து
பழித்துக் காட்டினாய்...
உறவினர் சிரிக்க,
இரு உன்னை
என்று விரட்டினேன்
ஒளிந்து சுற்றி
ஓடி கொல்லப்புரத்து
மாமரத்தில் ஒளிந்தாய்
சுற்றி வந்து மடக்கினேன்
என் கிடுக்கிப் பிடிக்குள்
வீழ்ந்த நீ
வெளியேற மறுத்து
நெருங்கினாய்...
இதழ்பதிக்க அணைத்தேன்
சட்டென ஒலித்தது கெட்டிமேளச்சத்தம்
நினைவுக்கு திரும்பினேன்
எங்கே இருக்கிறாய் என்று நீ
கண்ணால் கேட்டாய்
சிரிப்புடன் இங்கே தான் என்று
உனக்கு தாலி கட்டினேன்
நம் குடும்பம் வாழ்த்த.....
Friday, April 17, 2009
மழையும் நீயும் -1
இம்முறையும்
பதிலில்லை
நான் ஹாய் சொன்ன
சாட்டிற்கு
இப்போதெல்லாம்
உன் அருகாமை அதிகம்
தேவைப்படுகிறது எனக்கு
நாட்கள் மெல்ல
பின்னோக்கி நகர்கின்றன
நட்பைப் பரிமாறிக்கொண்ட
அந்த முதல் பார்வை
உன் அம்மா போட்டுக்
கொடுத்த அந்த
தேநீர்
உன்னைத் தேடித் தேடி
அலைந்த அந்த
ஐந்தாம் மாடி கூடுகள்
முதல் சண்டையின்
முடிவில் நாம்
கைகோர்த்து நடந்தது
எனக்காக நீயும்
உனக்காக நானும் காத்திருந்து
உணவருந்தியது
எல்லாம் நிழலாய் வந்துபோனது
உன்னைப் பார்க்காமலேயே
இருந்திருக்கலாம்
இத்தனை வலி இருந்திருக்காது
உனக்கான மடலை
எழுதிமுடித்திருந்தேன்
இம்முறையும் பதில்
எதிர்பார்க்கவில்லை
முடித்துவிட்டு
சன்னலோரம் வந்தமர்ந்தேன்
வெளியே ச்சோவென்று
மழை பெய்து கொண்டிருந்தது
என் கண்ணீருக்குத்
துணையாய்
மழையும் நீயும்
மழை எப்போதுமே
தன் சுவடுகளை
விட்டுச்செல்லும் பெய்தபின்பு
அந்தச் சுவடுகள் என் நட்பின்
பக்கங்களை நினைவுபடுத்துகின்றன
எப்போதும்...
*********
அந்த அடைமழையின் முடிவில்
மரங்கள் சேமித்து வைத்த
மழை நீர் மெதுவாய்ச் சொட்டியதைப்
பார்த்த போது
நாம் சேமித்து வைத்திருக்கும்
நம் நட்பின் நாட்கள்
நினைவாய் வந்து போனது எனக்கு...